கெய்ரோ,: அதிபர் முகமது முர்சியின் சர்வாதிகார போக்கை கண்டித்து, அந்நாட்டு "டிவி' மற்றும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளன.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.முர்சி அதிபரானது முதல், நீதித் துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்டை கலைத்தது.ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க வழி செய்யும், அரசியல் சாசனத்தை முர்சி, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதற்கு, நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்."தன்னை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என்ற, சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தை, பார்லிமென்டின் ஒப்புதலுக்கு வைப்பதாக, முர்சி தெரிவித்துள்ளார். "ஏற்கனவே, பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டதாக உத்தரவு இருப்பதால், முர்சியின் இந்த நடவடிக்கை செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.எகிப்து பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டது, என்ற உத்தரவு குறித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கோடு, அதிபரின் ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகளையும் காலவரையறையின்றி ஒத்தி வைத்தனர்.அதிபர் முர்சிக்கு, அளவற்ற அதிகாரம் அளிக்கும் சாசனத்தை நிறைவேற்றும் பார்லிமென்ட் குழுவில், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் யாரும் இடம் பெறவில்லை. ஆளும் கட்சியினர் அடங்கிய குழு, இந்த அரசியல் சாசனத்தை நிறைவேற்ற உள்ளதால், அந்நாட்டு ஊடகங்களும், அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன."அதிபர் முர்சி, சர்வாதிகார போக்கை மேற்கொள்ளக்கூடாது' என அந்நாட்டு பத்திரிகைகள் தலைப்பு செய்தியை வெளியிட்டு உள்ளன. எல்லையற்ற அதிகாரம் அளிக்க வழி செய்யும் சட்ட வரைவை, அதிபர் முர்சி வாபஸ் பெற வேண்டும்' என, கூறி தனியார் பத்திரிகைகளும், "டிவி' சேனல்களும் இன்று முதல் தங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவித்து உள்ளன.நீதிபதிகளும் ஏற்கனவே அறிவித்த படி தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர்.***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.