kaveri issue in sC | அனுமதிக்கப்பட்ட அளவை மீறிவிட்டது கர்நாடகா' : காவிரி நதி நீர் வழக்கில் தமிழக அரசு குற்றச்சாட்டு | Dinamalar

அனுமதிக்கப்பட்ட அளவை மீறிவிட்டது கர்நாடகா' : காவிரி நதி நீர் வழக்கில் தமிழக அரசு குற்றச்சாட்டு

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி: "கர்நாடகாவுக்கு, 8 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு தான், காவிரி நீரை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 11 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு தேவையான நீரைப் பயன்படுத்தி விட்டது' என, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும், காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழக அரசு, புகார் தெரிவித்தது.காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இரண்டு மாநிலங்களுமே, இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "ஒரு சொட்டு தண்ணீரை கூட, தமிழகத்துக்கு திறந்து விட முடியாது'என, கர்நாடகா தெரிவித்து விட்டது. இந்த விவரத்தை, மனு மூலமாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தன் வாதத்தில் கூறியதாவது:காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக, காவிரி நதி நீர் தீர்ப்பாயம், ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, 8.4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு மட்டுமே, அணைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த, கர்நாடகாவுக்கு, தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது.ஆனால், கர்நாடகா அரசு, தற்போது, 11.6 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு, காவிரி நீரை பயன்படுத்தியுள்ளது. இந்தாண்டு, போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்தில், குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.தற்போது சம்பா சாகுபடியும், தண்ணீரில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதை காக்க, காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கை, கர்நாடகா திறந்து விட வேண்டும்; ஆனால், இதுவரை திறந்து விடவில்லை. பருவமழை குறைபாட்டால், கர்நாடகாவில், விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு தான், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் நான்கு அணைகளில் உள்ள, காவிரி நீர் முழுவதையும், கர்நாடகா பயன்படுத்தும்போது, தமிழகத்துக்கு அதிலிருந்து சிறிதளவு நீரைக் கூட, திறந்து விட மறுப்பது, நியாயமற்ற செயல். தமிழகத்தில், ஒரு போக விளைச்சல் கூட, நடக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் மட்டும், அடுத்தடுத்த விளைச்சல்களுக்கு, தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.தமிழகத்தின் சாகுபடி, பாதிக்கப்பட வேண்டும்; கர்நாடகாவின் சாகுபடி தொடர வேண்டும் என நினைப்பது, சரியான செயல் அல்ல.இவ்வாறு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.இதைத் தொடர்ந்து, கர்நாடகா சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல், அனில் திவான், தன் வாதத்தில் கூறியதாவது:காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் தலைமையிலான, காவிரி நதி நீர் ஆணையம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் ஆய்வு செய்து, ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை மீறி, தமிழக அரசு சார்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.இந்த பிரச்னையை, உணர்வுப் பூர்வமானதாகவும், இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசு மாற்ற முயற்சிக்கிறது. இதை, அனுமதிக்க கூடாது. இது, இரு மாநில விவசாயிகள் தொடர்பான பிரச்னை. இதை கவனமாக கையாள வேண்டும்.இவ்வாறு அனில் திவான் வாதாடினார்.இந்த வழக்கு தொடர்பான வாதம், இன்றும் தொடரவுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை