தமிழக தலைமைச் செயலர் தேபேந்திர நாத் சாரங்கியின் பதவிக் காலம், இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவரது பதவி நீட்டிப்பிற்காக, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால், அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது.
மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் என்றிருந்தாலும், நிர்வாக ரீதியாக, அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அவற்றை வகுத்துக் கொடுப்பது, பாதுகாப்பு விஷயங்களை கவனிப்பது, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான். மக்களால் தேர்வு செய்யப்படும், ஆட்சியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவி; ஆனால், மத்திய அரசு தேர்வு மூலம் தேர்வாகி வரும், இவர்கள் தொடர்ந்து தங்கள், 60 வயது வரை பணியில் இருப்பர். இதனாலேயே, ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்.,அதிகாரிகளுக்கு மவுசு அதிகம்.
31ம் தேதியில் முடிகிறது:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், பதவி உயர்வுகள் அளிக்கப்படுகின்றன.தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலராக இருப்பவர், தேபேந்திர நாத் சாரங்கி. கடந்த, 1977ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானவர். இவரது பதவிக்காலம், இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அடுத்த, தலைமைச் செயலர் யார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், இவர் "வி.ஆர்.எஸ்., ' கொடுத்துள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு செல்வதாகவும், அரசு ஏற்கவில்லை என்றும் வதந்தி பரவி, அமுங்கிப் போனது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைப் பொறுத்தவரை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதலில், பெண் அதிகாரியும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஷீலா பாலகிருஷ்ணன் பெயர், தலைமைச் செயலர் பதவிக்கு அடிபட்டது. ஆனால், அவரை விட, பதவியில் இளையவரான சாரங்கி தேர்வு செய்யப்பட்டார்.
ஷீலாவும், ஸ்ரீதரும்:
சாரங்கியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் கூடுதல் செயலராக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித்துறை செயலராக இருக்கும் ஸ்ரீதர் ஆகிய இருவர் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் பரவியது.இந்நிலையில், தற்போது, தேபேந்திர நாத் சாரங்கிக்கே, இரண்டாண்டுகள் வரை பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து, தமிழக அரசு, மத்திய அரசிற்கு பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அவரே தலைமைச் செயலராக தொடருவார்.
ஆனால், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு மட்டுமே, சுப்ரீம் கோர்ட் வழக்கு ஒன்றின் அடிப்படையில், இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, அதிக பட்சம் ஆறு மாதங்கள் நீட்டிப்பு கிடைக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.ஐ.பி.எஸ்., அதிகாரிகளில், தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்திற்கு, இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க, தமிழக அரசு பரிந்துரைத்தது. இதில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இசைவு வழங்கி விட்டது.அதே போல், தலைமைச் செயலரான சாரங்கிக்கும், மத்திய அரசு அனுமதி வழங்குமா அல்லது ரத்து செய்யுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஒரு வேளை, ரத்து செய்யப்பட்டால், அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.முதல்வரின் கருணைப் பார்வையை பெற்றவர் யார் என்பது, மத்திய அரசின் முடிவைப் பொறுத்து விரைவில் தெரிந்துவிடும்.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் இப்போது இளையோர் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் பதவி என்று வந்தால் மட்டும் இளையோர் புறக்கணிக்க படுகின்றனர் ....அவர்களுக்கும் மனக்கஷ்டம் .....ஒரே தீர்வு IAS ...IPS .. போன்ற பதவிகளுக்கு ஓய்வு வயது 65 ஆகவும்,..நீதியரசர்களுக்கு 70 வயதும் பணி ஓய்வு என்று சட்டம் ஆக்கிவிட்டால் இத்தகய பிரச்சனைகள் வராது...அனுபவம் இருப்பதால் நாட்டிற்க்கும் நல்லது .அதை செய்யாமல் பணி நீட்டிப்பு என்பது நீண்ட காலத்திற்கு ஏற்புடையது அல்ல .....
அரசியல்வாதிகளுக்கு மட்டும அதிகபட்ஷ ஓய்வு வயதே நம் நாட்டில் கிடையாது. முதலில் அதற்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். பிரதமரோ, முதலமைச்சரோ அமெரிக்காவில் இருப்பது போலே இரண்டு முறைக்கு மேல் ஆள அனுமதிக்கக்கூடாது. பெரும்பாலான IAS மற்றும் IPS அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் தனியார் கம்பனிகளில் வேலைக்கு சேர்கின்றனர். சிலர் அரசியல்வாதிகளிடம் பணியாற்ற போகின்றனர். ஏற்கனவே அரசுத்துறைகளில் பெற்ற அவர்களின் அனுபவங்கள் அரசுக்கே பயன்படும் வகையில் அவர்களின் சேவையை அரசு பயன்படுத்தி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் அவர்களின் ஓய்வுமூலம் பதவி உயர்வை எதிர்பார்துகொண்டிருக்கும் அடுத்த முடுநிலையில் உள்ள அதிகாரிகளுக்கு பாதிப்பு வராமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிரதமர் எழுபது வயதாம், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுவாராம், ஜனாதிபதி அவருக்கு அண்ணனாம்.அவரும் இந்தியாவை அடுத்த பத்து ஆண்டுகளில் முன்னேற்றுவாராம், நீதிபதிகளுக்கு அறுபத்தி ஐந்துவயது வரை பணியாம், ஐ பி எஸ் ஐ எ எஸ் கு பதவி நீடிப்பாம், வேறு ஆட்கள் அதிகாரிகள் இல்லையாம் ஆனால் இந்தியா வளருகிறதாம்?கிழவர்களோடு?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.