மேட்டூர்: வனப்பகுதியில் அமைந்துள்ள தமிழர்கள் குடியிருப்புகளை அகற்ற, கர்நாடகா வனத்துறை, பத்து நாள் அவகாசம் கொடுத்துள்ளது. கர்நாடகா வனத் துறைக்கும், தமிழர்களுக்கும் இடையிலான மோதல், விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடகா எல்லையில், கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் காவிரி கரையோரம் கோபிநத்தம் முதல் ஒகேனக்கல் வரை, ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பம் வசிக்கின்றன.
கடந்த, 60 ஆண்டுக்கு முன், தமிழகத்தின் கோவை ஜில்லாவில் இருந்த கொள்ளேகால் தாலுகா, மொழிவாரியாக மாநிலங்களை பிரித்த போது, கர்நாடகா வசம் சென்று விட்டது. ஜனத்தொகை அதிகரிப்பால், தற்போது தமிழக எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பலர், தங்கள் கிராமங்களில் வீடுகள் கட்டுகின்றனர்.
ஆனால், வீடு கட்டும் இடம் வனப்பகுதி என்பதால், கட்டுவதற்கு, கர்நாடகா வனத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. வீடுகள் கட்டுவதாக தகவல் கிடைத்தால், சம்பவ இடத்துக்கு சென்று கட்டுமான பணியை ,கர்நாடகா வனத்துறையினர் நிறுத்தி விடுகின்றனர். இரு நாட்களுக்கு முன், கர்நாடகா வனத்துறையினர் அப்புகாம்பட்டி கிராமத்தின் அருகே, வனத்தில் போடப்பட்ட ஒரு கூரை வீட்டை தீ வைத்து எரித்து விட்டனர்.
100 ஆண்டுக்கு முன்பே பட்டா : இதுகுறித்து கோபிநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன் கூறியதாவது:
கோபிநத்தம் கிராமத்தில், 1907ம் ஆண்டுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் குடியிருக்கின்றனர். இதனால், இந்த கிராமத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பெருக்கம் அதிகரித்ததால், காலப்போக்கில், காவிரி கரையோர கிராமங்களிலும், தமிழர்கள் வீடு கட்டி வசித்தனர். கடந்த, 2004ல், சந்தன வீரப்பனை, தமிழக அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்ற பின், கர்நாடகா வனத் துறையினர், தமிழர்கள் குடும்பங்களை வெளியேற்ற, பல்வேறு வழிகளில் இடையூறு கொடுத்தனர். தமிழர்கள் கட்டியுள்ள வீடுகள் அனைத்தும் வனப்பகுதியில் இருப்பதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறுமாறு, சில ஆண்டுகளுக்கு முன், நோட்டீஸ் கொடுத்தனர். சில நாட்களுக்கு முன், வனத் துறையினர், போலீசார் உடன் வந்து, கிராமத்தின் அருகே, போடப்பட்ட ஆடுகள் அடைத்திருக்கும் பட்டி, குடிசை வீடுகளை தீ வைத்து கொளுத்தி விட்டனர். இது, தமிழர்கள் மத்தியில், பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக போடப்பட்ட பட்டி, வீடுகளை அகற்ற, வனத்துறை, பத்து நாள் கெடு விதித்துள்ளது.
இப்பகுதியில் வாழும், 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தை வெளியேற்ற திட்டமிட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
எம்.எல்.ஏ.,வும் அறிவுரை : வனத்துறை நடவடிக்கையை தடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கொள்ளேகால் காங்., எம்.எல்.ஏ.,நரேந்திரனிடம் கூறியுள்ளனர். தமிழர்கள் குடும்பம் வசிக்கும் பகுதி வனப்பகுதி என்பதாலும், பட்டா கிடையாது என்பதாலும், அந்த இடத்தை காலி செய்து விட, எம்.எல்.ஏ., அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதனால், தமிழ் குடும்பத்தினர் விரக்தியில் உள்ளனர். இவ்வாறு முருகன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.