திருப்பூர்: கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 7 முதல் 12ம் தேதி வரை, ராணுவ ஆள் சேர்க்கும் முகாம், நீலகிரி மாவட்ட மலைமேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது.
திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆறு நாட்கள் நடக்கிறது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். கடந்த 1989 மே 14 முதல், 1994 நவ., 14க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் தகுதியானவர்கள். "சோல்ஜர் ஜெனரல்' பணிக்கு 1991 மே 14 முதல், 94 நவ., 14க்குள் பிறந்தவர்கள் தகுதி பெற்றவர்கள். வரும் 7ம் தேதி, "சோல்ஜர் டெக்னிக்கல்'மற்றும் "நர்சிங் அசிஸ்டெண்ட்' பதவிகளுக்கான தேர்வு நடக்கும். டெக்னிக்கல் பதவிக்கு, 10வது மற்றும் பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் 40 சதவீத மதிப்பெண், மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். "நர்சிங் அசிஸ்டெண்ட்' பதவிக்கு, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கில பாடத்தில் 40 சதவீதம், மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரும் 8ம் தேதி, நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், 9ம் தேதி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், சோல்ஜர் ஜெனரல் பதவிகளுக்கான தேர்வு நடக்கும். இப்பதவிக்கு 10ம் வகுப்பில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
"சோல்ஜர் கிளர்க்-ஸ்டோர் கீப்பர்' பணிகளுக்கு, வரும் 10ம் தேதி தேர்வு நடக்கும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், கணிதம், ஆங்கிலம் அல்லது கணிதவியல் அல்லது "புக் கீப்பிங்' பாடங்களில் 40 சதவீதம், மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். முன்னாள் படைவீரரின் குழந்தைகள் மற்றும் என்.சி.சி., மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி அனைத்து பதவிகளுக்கான தேர்வு நடக்கும். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு, கல்வி சான்று அசல் மற்றும் நான்கு நகல்கள், அசல் மற்றும் ஆங்கில மாற்றம் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச்சான்று, ஜாதிச் சான்று மற்றும் 10 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் செல்ல வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.