செங்குன்றம்: ஆட்டோவில் வந்த போலீஸ்காரரின் மனைவியை நள்ளிரவில் கொலை செய்து, அவர் அணிந்திருந்த, 12 சவரன் நகையை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றார். சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வு பெற்ற எஸ்.ஐ., இவரது மனைவி மல்லிகா, 50. இவர்களுக்கு சரவணன், சக்திவேல் என்ற மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் தான், வண்ணாரப்பேட்டையில் இருந்து எம்.எம்.டி.ஏ., வுக்கு குடி வந்தனர்.
நேற்று முன் தினம் மல்லிகா, முகப்பேரில் வசிக்கும் தனது சகோதரி தமிழ்செல்வியுடன், உறவினர் வீட்டு திருமணத்திற்காக காஞ்சிபுரம் அருகே உள்ள காவேரிப்பாக்கம் சென்றார். திருமணம் முடிந்து, உறவினர்களை சந்தித்து விட்டு, சென்னைக்கு திரும்பினர். இரவு 9:45 மணிக்கு அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து ஆட்டோ மூலம் வீட்டிற்கு புறப்பட்டனர். மூலக்கடைக்கு வந்த ஆட்டோவில் பயணித்த மல்லிகா, இரவு 10:15 மணிக்கு கொளத்தூர் ரெட்டை ஏரி சந்திப்பை கடந்த போது, மகன் சரவணனிடம் அலைபேசியில் பேசினார். அதில் அவர், ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாக தெரிவித்தார்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. சரவணன், தாயின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இரவு முழுக்க கோயம்பேட்டிலிருந்து, மாதவரம் வரும் வழியில், சரவணன் தாயை தேடி அலைந்தார்.
இந்நிலையில் புழல், வடபெரும்பாக்கம் இணைப்பு சாலையில், வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது. இதையடுத்து, மாதவரம் துணை கமிஷனர் புகழேந்தி, புழல் உதவி கமிஷனர் கந்தசாமி, செங்குன்றம், புழல் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றினர்.
போலீஸ் மோப்ப நாய் ராணி சம்பவ இடத்தில் இருந்து, மாதவரம் நெடுஞ்சாலையில், 2 கி.மீ., தூரம் ஓடி தனியார் அரிசி கிடங்கு அருகே நின்றது. யாரையும் பிடிக்கவில்லை.
நேற்று முன் தினம் இரவு பலத்த மழை பெய்த போது, தனியாக பயணித்த மல்லிகா அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடிக்க, ஆட்டோ ஓட்டுனர் அல்லது அவருடன் பயணித்த வேறு சிலர், திட்டமிட்டு அவரை கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.