விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மூன்று மாணவர்களை, போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சுற்றித் திரிந்த மூன்று சிறுவர்களிடம் விசாரித்தனர். அரியலூர் மாவட்டம், லால்குடியை அடுத்த, அண்ணாமலை மகன், முத்து, 16, கணேசன் மகன், ராம்ஜி, 14, சேகர் மகன், சித்தார்த், 14 (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்பது, விசாரணையில் தெரிய வந்தது. அரசு மேல்நிலைப் பள்ளியில், ராம்ஜி, சித்தார்த் இருவரும், ஒன்பதாம் வகுப்பும், முத்து, பிளஸ் 1 படித்து வருவதும், இரண்டாம் பருவத்தேர்வில் தோல்வியடைந்ததால், பெற்றோருக்கு பயந்து, ரயில் ஏறி வந்தது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று காலை, மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.