சென்னை: "ரயில்வே இடங்களில், தனியார் நிறுவனங்கள் வைக்கும் விளம்பர போர்டுகளை, சென்னை மாநகராட்சி ஒழுங்குபடுத்தலாம்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், விளம்பர போர்டுகளை வைத்துக் கொள்ள, தனியாருக்கு, தெற்கு ரயில்வே அதிகாரிகள், அனுமதியளித்துள்ளனர். "இந்த விளம்பர போர்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், உரிமம் பெற வேண்டும்; இல்லையென்றால், போர்டுகள் அகற்றப்படும்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், விளம்பர போர்டு நிறுவனங்கள், மனுக்கள் தாக்கல் செய்தன. ரயில்வே இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளில் குறுக்கிடக் கூடாது என, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களில் கூறியிருப்பதாவது: ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், விளம்பர போர்டுகளை வைத்துள்ளோம். இந்த இடம், தமிழக அரசுக்கோ, சென்னை மாநகராட்சிக்கோ, சொந்தமானது அல்ல. இதற்காக, தங்களிடம் உரிமம் பெற வேண்டும் என, மாநகராட்சி கோர முடியாது. இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
ரயில்வே சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன், சிறப்பு வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், வாதிடுகையில், "போர்டுகளில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பொறுத்தவரை, சட்டப்படி, உரிய அதிகாரிகளிடம், முறையான அனுமதியை பெற வேண்டும். மனுதாரர்களின் கோரிக்கையை, அதிகாரிகள் ஆதரிக்கவில்லை' என்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ""போர்டுகளை நிறுவ, ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தாலும், அதில், விளம்பரங்களை வெளியிட, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி, மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும். இந்தச் சட்டம் செல்லும் என, சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: விளம்பரங்களை வெளியிடுவதற்காக, சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாமல், விளம்பர போர்டுகளை, மனுதாரர்கள் நிறுவலாமா என்கிற கேள்வியை பரிசீலிக்க வேண்டியதுள்ளது. ரயில்வே இடத்தில், விளம்பர போர்டுகளை நிறுவியுள்ளதால், அதற்கு, உரிமம் பெற தேவையில்லை என, மனுதாரர்கள் கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. ரயில்வே இடத்தில், நிறுவப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் என்றாலும், சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி, "ஹோர்டிங்ஸ்' என்கிற வரையறைக்குள் வருகிறது. பொது மக்களுக்கு தெரியும் வகையில், விளம்பரங்களை வெளிப்படுத்தும், போர்டுகளை ஒழுங்குபடுத்துவது தான், இந்தச் சட்டத்தின் நோக்கம்.
ரயில்வே இடத்தில் நிறுவப்பட்டுள்ள விளம்பர போர்டுகளுக்கு, சட்டத்தில் விலக்கு அளிக்கப்படவில்லை. மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டுமா என, பதில் மனுவை, ரயில்வே தாக்கல் செய்துள்ளது. இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்கள், தலா, 25 ஆயிரம் ரூபாய், வழக்குச் செலவுத் தொகையாக, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.