சென்னை:""இந்திய மாணவன், உலகத்தில், யாருக்கும் சளைத்தவன் கிடையாது,'' என, சென்னையில் நடந்த "தினமலர்-ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியருக்கு, "தினமலர்' நடத்தும், "ஜெயித்துக்காட்டுவோம்' என்ற, வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இறுதி நாளான நேற்று, சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, நிகழ்ச்சிகள் நடந்தன.
உற்சாக வரவேற்பு:
இதில், சிறப்பு விருந்தினராக, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். விழாவில் பங்கேற்க, காலை, 10 :00மணிக்கு, பல்கலை அரங்கிற்கு, கலாம் வந்தார். "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, இணை ஆசிரியர் கி.ராமசுப்பு, இணை வெளியீட்டாளர் ல.ராமசுப்பு, தொழில்நுட்பத்துறை இயக்குனர் ல.ஆதிமூலம், துணை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, வர்த்தகப் பிரிவு மேலாளர் லட்சுமிபதி ஆகியோர், அரங்க நுழைவாயிலில், அப்துல்கலாமை வரவேற்று, அரங்கிற்குள் அழைத்து வந்தனர்.
அப்போது, அரங்கில் நிரம்பி வழிந்த மாணவ, மாணவியர், எழுந்து நின்று, கைகளை தட்டி, கலாமிற்கு உற்சாக வரவேற்பு அளித்ததில், அரங்கம் அதிர்ந்தது. மாணவ, மாணவியருக்கு கை கொடுத்தும், கைகளை அசைத்தும், மாணவ, மாணவியரை, கலாம் உற்சாகப்படுத்தினார். பின், நடந்த விழாவில், துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வரவேற்றார். தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினார்.
கடந்த பொதுத்தேர்வில், சென்னை மாவட்ட அளவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த சென்னைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தான் எழுதிய, "அக்னி சிறகுகள்' புத்தகத்தை, கலாம் வழங்கி, பாராட்டினார். பின்னர், "புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க' என்ற தலைப்பில், கலாம் பேசியதாவது:
தினமலருக்கு பாராட்டு:
"தினமலர்' நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களை சந்தித்து பேச கிடைத்த வாய்ப்பிற்கு, நான், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தினமலர், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், ஆண்டுதோறும், தொடர்ந்து, இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலம் சிறப்பாக அமைய, நல்ல ஒரு வாய்ப்பை, தினமலர் வழங்குகிறது. இதற்காக, தினமலரை பாராட்டுகிறேன்.
நீங்கள், எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் அனைவரும், ஜெயித்துக் காட்டுவோம் என்ற உறுதிமொழியை எடுத்திருக்கிறீர்கள். இளைஞர்களின், உள்ள உறுதியின் அடுத்த பக்கம், என்னால் முடியும் என்பதாகும். வாழ்க்கையின் உச்சியில் பறக்க வேண்டும் என்ற உணர்வு, வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
அதற்கு, உள்ளத்தில் லட்சிய ஒளி பிறக்க வேண்டும். லட்சியத்தை அடைய, அறிவாற்றலை பெருக்க வேண்டும்; உழைப்பு முக்கியம். உழைப்புடன், விடாமுயற்சியும் இருந்தால், நீ யாராக இருந்தாலும், வெற்றி, உன்னை வந்து சேரும். இதற்கு, எனது வாழ்வில் நடந்த, இரு சம்பவங்களை கூறுகிறேன்.
சளைத்தவன் கிடையாது:
நான், ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில், தினமும், 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒரு நாள், ஆந்திரத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு குழுவாக, என்னை சந்தித்தனர்.ஒவ்வொருவரும், தங்களுடைய கனவுகளை கூறினர். ஸ்ரீகாந்த் என்ற, 9ம் வகுப்பு மாணவனுக்கு, இரு கண்களும் தெரியாது. "உனக்கு என்ன ஆசை' என்று அவனிடம் கேட்டேன்.
அதற்கு,"இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக வேண்டும்' என்றான். அவனது உயர்ந்த எண்ணத்தை அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உடனே, வாழ்க்கையில், நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ, அதை அடைய, நான்கு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்றேன்.வாழ்க்கையில், மிகப்பெரிய லட்சியம் வேண்டும். அறிவைத் தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய, கடுமையாக உழைக்க வேண்டும். இறுதியாக, விடாமுயற்சி வேண்டும்.
தோல்வி மனப்பான்மைக்கு, தோல்வி கொடுத்து, வெற்றி பெற வேண்டும். இந்த நான்கும் இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை அடையலாம் என, அவனை வாழ்த்தினேன்.ஸ்ரீகாந்த், கடுமையாக உழைத்து, 10ம் வகுப்பு தேர்வில், 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்தான். பிளஸ் 2 தேர்வில், 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்தான். அவன் மனதில், வெற்றிபெற வேண்டும் என்ற லட்சிய தாகம், கொழுந்துவிட்டு எரிந்தது.அவனுக்கு, அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் உள்ள, எம்.ஐ.டி.,யில், கணிணி தொழில்நுட்பவியல் படிக்க ஆசைப்பட்டான்.
ஆனால், பார்வையற்றவர்களுக்கு, அங்கு வாய்ப்பு கிடையாது என, தெரிவிக்கப்பட்டது.உடனே, "நீங்கள், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், போட்டித்தேர்வு நடத்துங்கள். அதில், என்னையும் அனுமதியுங்கள். அதில், நான் வெற்றி பெற்றால், உங்கள் பல்கலையில் படிக்க அனுமதி கொடுங்கள்' என்றான்.
தலைவணங்கிய எம்.ஐ.டி.,:
ஆந்திராவின், மலைவாழ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், வளர்ந்த உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன், போட்டி போட்டான். எழுத்து தேர்வில், 4வது மாணவனாக தேர்வு பெற்றான். பின், தனது விதிகளை தளர்த்தி, அவனது அறிவுத்திறமைக்கு, எம்.ஐ.டி., தலை வணங்கி, "சீட்' கொடுத்தது.தனியார் நிறுவனம், அவனை, அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைத்தது. பின், அந்நிறுவன அதிகாரி, "உனக்கு வேலை தயாராக இருக்கிறது' என, "இ-மெயில்' அனுப்பினார். அதற்கு,"பார்வையற்ற முதல் ஜனாதிபதி பதவியை அடைய முடியாவிட்டால், உங்களது வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வேன்' என, அந்த மாணவன், பதில் அனுப்பினான். இதில் இருந்து, நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; உன்னால் வெற்றி பெற முடியும் என்பதை அறியலாம்.
டிரைவர் டூ பேராசிரியர்:
இதேபோல், ஐதராபாத்தில், டி.ஆர்.டி.எல்., நிறுவனத்தின் இயக்குனராக நான் பணியாற்றியபோது, என்னுடைய கார் டிரைவராக இருந்த கதிரேசன் என்பவர் இருந்தார். எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். 10ம் வகுப்பு படித்த அவரால், மேல் படிப்பை படிக்க இயலவில்லை. படிக்க ஆர்வமாக இருந்த அவரை, திறந்தநிலைபள்ளி மூலம், பிளஸ் 2 படிக்க ஏற்பாடு செய்தேன்.
அவர் தொடர்ந்து படித்து, பி.எச்டி., முடித்து, தற்போது, மதுரை, மேலூர் அருகில் உள்ள அரசு கல்லூரியில், பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கிறார். எனவே, நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; நீ எண்ணுவது, விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால், நீ எண்ணியது, உன்னை வந்து சேரும்.இவ்வாறு கலாம் பேசினார்.
கலாம் பேச்சை, மாணவ, மாணவியர் உட்பட அனைவரும், உன்னிப்பாக கேட்டனர். அவர் உரையை முடித்ததும், மாணவ, மாணவியர், கைகளை தட்டி, ஆரவாரம் செய்தனர். தினமலர் வர்த்தகப்பிரிவு மேலாளர் லட்சுமிபதி, நன்றி கூறினார்.
தினமலர் வர்த்தகப்பிரிவு மேலாளர் ஆர். லட்சுமிபதி, நன்றி தெரிவித்து பேசியதாவது:
தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில், இந்த மேடையில் நான் அமர்ந்ததை, எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன்.டாக்டர் கலாமின் மேற்கோள்களில், ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். "நீங்கள் கனவு காண வேண்டும்; உங்கள் கனவுகள் நிஜமாவதற்கு முன்பு!'. இந்த வரிகள் உங்களுக்காகத்தான். படிப்பை தேர்வு செய்யும் முன், உங்கள் எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும்.
பெரிய தேனீ பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அறிவியல் அடிப்படையில், அதனால் பறக்க முடியாது. தெரியுமா... டாக்டர் கலாமின் "முடியாதது எதுவுமில்லை' என்ற உரையில் "பெரிய தேனீயை' பற்றிக்குறிப்பிடுவார். ஏரோடைனமிக்ஸ் விதிப்படி, அந்த தேனீயின் உருவம், எடை, பருமன் ஆகியவற்றை அதன் இறகு சுழற்சியோடு ஒப்பிடும்போது, அதனால் பறக்க முடியாது. எந்த அறிவியல் விதிகளுக்கும் ஆட்படாமல், அது பறக்கிறது. அதற்கு ஒரு கனவு இருக்கிறது; பறக்கும் ஆசை இருக்கிறது; வாழ வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களே... நீங்கள் இந்தியாவின் எதிர்காலம். வருங்காலத்தில், நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டியவர்கள் நீங்கள். எனவே, கேள்வி கேட்க தயங்காமல், சிந்திக்காமல் இருக்க வேண்டாம். தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். விழுவதே, எழுவதற்கு தானே. உங்கள் குறிக்கோளுக்காக, முயற்சி செய்யுங்கள். வெற்றி என்ற இலக்கை அடையும் வரை, போராடிக்கொண்டே இருங்கள். மகாத்மா காந்தியில் தந்தை இருக்கிறார். நேருவில் மாமா இருக்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணனில் ஆசிரியர் இருக்கிறார். காமராஜரில் கர்மவீரர் இருக்கிறார். பாரதியில் புரட்சியாளர் இருக்கிறார்.
இவங்க... யாரையும் நான் பார்த்ததில்லை. டாக்டர் கலாம் வடிவில் எல்லோரையும் பார்க்கி றேன். மாணவர்களின் எதிர்காலம் பற்றி கனவு காணும் நீங்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தில் மகிழ்ச்சி கொள்கிறோம். தினமலர் நிர்வாகம், ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி. நீங்கள் தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.உங்கள் நலனில், அக்கறை கொண்டுள்ளது தினமலர் என்ற பெருமையோடு, நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு பேசினார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்களும் இவர் போன்று ஒரு சான்றாக (சான்றோனாக) இருக்க கனவு காணுங்கள். நாளை நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று, இன்று நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றைய தினம் அது உங்களுக்கு மட்டும் உங்கள் உயர்வுக்கு மட்டுமே இன்றை இழக்காதீர் மாணவர்களே.
Dream is important, we can dream whatever like, but we need good support and clear idea to choose the place to work, or we will get mental. Indians are talented in the world, no doubt at all. We have to utilise the talent for our country development not for other country, then power problem will solve. Except India, all the countries enjoying with 24h powder, Why India getting dark Why dont use our talent here?
நீங்கள் சொல்வது மிகச்சரியே, இந்திய மாணவர்கள் உலகத்தில் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாதுதான், ஆனால் அவர்களிடம் தன்னம்பிக்கை மிக குறைவாக உள்ளது, சுய அடையாளத்தின் மீது மரியாதை இல்லை, தாய் மொழி பற்று குறைவு, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை பற்றி தவறான புரிதல், அந்நிய மோகம் இது போல சில குறைகளை கலைந்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய வல்லரசு ஆகும், நன்றி கலாம் அய்யா அவர்களே........
"நீங்கள், எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள்." நான் இப்போது வயதில் இளைய பருவத்திலா, முதிய பருவத்திலா என்று தள்ளாட்டத்தில் இருக்கிறேன், ஆனால் மனதளவில் சோர்வடையும் போதெல்லாம், ஐயா கலாம் அவர்களின் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன், அவர் ஒரு முறை (காந்தி கிராமில்) கூறிய வார்த்தைகள் இன்றும் எனது தாரக மந்திரமாக ஒலிக்கிறது "இந்தியா வல்லரசு நிலை அடைய வேண்டும் என்றால் அது எனெர்ஜி துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் " என்று கூறினார், எத்தகைய ஒரு தீர்க்க தரிசனம் அது, அவர் அன்று கூறியிருந்ததை ஏதோ ஒரு நாளேடு சிறிய அளவில் வெளியிட்டிருந்தது. மீண்டும் மீண்டும் தேட அவரது முழு பேசும் கிடைக்க பெற்றது, அன்றிலிருந்து பல வருடங்கள் கழிந்த நிலையில் சோலார் pv , காற்றாலைகள் என்று மிக குறைந்த விலையில் செய்வது எப்படி என்று " ITI , பாலிடெக்னிக்குகள் சென்று சொல்லி கொடுத்து வருகிறேன்( என்னோட காசு போட்டு பொருட்கள் வாங்கி டெமோ செய்தேன் ), தமிழ் நாட்டின் மின்சார தாகம் தீர்க்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ( மும்பையிலிருந்து சென்னை இதற்காக வருவேன் ) முயன்றது தோற்று போனது, பின்னர் ஆந்திரா வேலைக்கு மாறிய போதும் நிறுத்த வில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் மாணவ கண்மணிகள் சோம்பேறிகளாய் மாறியிருப்பது, inferiority தாகியிருப்பதும் என்னை கவலை கொள்ள செய்துள்ளது. இதன் படி பார்த்தால் மாணவ பருவத்திலேயே, உழைத்து படிப்பவனுக்கு உரிய மதிப்பில்லை, உழைக்காமல்/படிக்காமல் சோம்பி திரிபவனுக்கு வேலை வாய்ப்பு என்ற நிலை உருவாகியுள்ளது , இது முதலில் மாற வேண்டும். பின்னர் கனவு காணுங்கள் வானம்( மின்சாரம் ) அகப்படும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.