Real Story | பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்| Dinamalar

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

Added : டிச 08, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


இது இசைக் கச்சேரிகளின் சீசன், எங்கெல்லாம் சபாக்கள் உள்ளனவோ, அங்கெல்லாம், இசைக்குழுக்கள் மேடையேறி காதிற்கு தேமதுர இசையை வழங்குவர். இந்த நேரத்தில் முழுக்க, முழுக்க பார்வையற்றவர்களே பங்கேற்று பாடும், இசைக்கும் இசைக் குழுவான "தர்ஷன்' இசைக் குழு இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா... காற்றில் கலந்து வந்தபாடல் வரிகள் வசீகரித்தது.

பரபரப்பான சென்னை காந்தி நகர், காந்தி கிளப்பில் உடல் ஊனமுற்றோர் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற விசேஷ இசை நிகழ்ச்சி அது.விசேஷத்திற்கு காரணம் இந்த கட்டுரையின் முதல் வரியிலேயே சொன்னது போல பாடுபவர்களும், பாடல்களை இசைப்பவர்களும் முழுக்க, முழுக்க பார்வையற்றவர்கள் என்பதுதான்.
ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல் எழுந்தது, கைதட்டல், கரகோஷம் அடங்கவும், இப்போது பாடிக்கொண்டு இருப்பவர்கள், "ப்ரீடம் அறக்கட்டளை' யைச் சேர்ந்த, "தர்ஷன்' இசைக் குழுவின் பார்வையற்ற குழந்தைகள் என்று அறிவிப்பு தொடரவும், கைதட்டல் ஒலி மீண்டும் எழுந்து அதிர்ந்தது.

மேடையில் அழகாய் உடை உடுத்தி, தங்களது குரலுக்குள் தேனையும், இனிமையையும், இனிய கானத்தையும், கம்பீரத்தையும் குழைத்து கொடுத்தபடி, சில பக்தி பாடல்களையும், பல மெல்லிசை பாடல்களையும் பாடி, இரண்டு மணி நேரம் அந்த இடத்தை அற்புதமான இசையால் நிரப்பினர்.
சத்யநாராயணன், மனோஜ், ஸ்ரீலேகா, அக்ஷயா, விஷ்ணுபிரியா, சவுபாக்யா, இந்து, சக்தி ஆகிய பாடகர்களுக்கு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பாராட்டும், விழா குழுவினரிடம் இருந்து பரிசுகளும் குவிந்தன.

பிரபல பாடகர்களே கூட, தாங்கள் பல முறை பாடிய பாடல் என்றாலும் மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை பார்த்தபடிதான் பாடுவார்கள், ஆனால், இவர்களோ எவ்வித குறிப்புமின்றி, தங்கு தடையின்றி பாடி அசத்தினர், அதுவும் "கீபோர்டு' வாசிப்பவர், இவர்களை பாடவைக்கும் திறமையே அலாதியானது. பாடகர்களும் ஒவ்வொரு பாடலையும் நம்பிக்கையுடனும், சிரிப்புடனும், சந்தோஷத்துடனும் பாடி, அந்த சூழலையே கலகலப்பாக்கிவிட்டனர், இப்படி இவர்களது இசை நிகழ்ச்சியை கேட்கும் போது மட்டுமின்றி, பார்க்கும் போதும் மகிழ்ச்சி பொங்கியது.
யார் இவர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை திருவான்மியூரில் இயங்கும் ப்ரீடம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்.சுந்தர் கூறியதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பதைவிட, என்னால் என்ன செய்ய முடியும் என்று, என்னையே நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க உருவாக்கப்பட்ட, இந்த அறக்கட்டளையின் சார்பில், உடல் ஊனமுற்றவர்களுக்கு, நிறைய உதவி செய்து வருகிறோம், அதன் ஒரு கட்டம்தான் இந்த இசைக்குழு. மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உள்ள திறமைகளின் அடிப்படையில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதை செய்து வருகிறோம்.

அந்த வகையில், சென்னையில் உள்ள பார்வையற்ற பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியரில், பாடும் திறன் கொண்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பாடல் பயிற்சி வழங்கி மேடையேற்றி பாடவைத்து வருகிறோம்.
அப்படி பாடுபவர்கள், ட்ரம்ஸ் இசைப்பவர், கீபோர்டு வாசிப்பவர் என்று, முழுக்க முழுக்க பார்வையற்றவர்களைக் கொண்டதுதான் "தர்ஷன்' இசைக்குழு. இந்த குழுவினர் அற்புதமாக கர்நாடகா இசைக் கச்சேரியும் செய்வர், திரைப்படப் பாடல்கள் பாடவும் செய்வர்.

குறைந்தபட்சமாக ரூபாய், 15 ஆயிரம் கொடுத்தால், இந்த குழுவினர், அவர்களாகவே வந்து உங்களது திருமணம், பிறந்த நாள் விழா, கருத்தரங்கம், ஆண்டுவிழா, கோயில் விழா போன்ற இடங்களில் அற்புதமாக பாடி விழாவினை சிறக்க செய்வர். பார்வையற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்று ஒரு முறை அழைத்தவர்கள், இவர்களது பாடும் திறமையை அறிந்து, இப்போது இரக்கத்திற்காக அல்லாமல் திறமைக்காக பல முறை அழைத்து வருகிறார்கள், இதைத்தான் இவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வருமானம் முழுவதும் இவர்களுக்கே போய்ச்சேரும்.
பார்வையற்ற குழந்தையாகிவிட்டதே என்று நித்தமும் சோகத்தில் ஆழ்ந்திருந்த இவர்களது பெற்றோர்களுக்கு, இந்த குழந்தைகள் பாடி பரிசும், பணமும் பெற்றுவரும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வார்த்தையில் கொண்டு வர முடியாது .

நீங்களும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கி,அந்த நிகழ்ச்சியின் மூலம் உங்கள் உள்ளத்தையும், இல்லத்தையும் மகிழ்ச்சியால் நிறைவு செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால் இவர்களை ஒருங்கிணைப்பவரும், பாடல் ஆசிரியையுமான உஷாபரத்வாஜை தொடர்பு கொள்ளவும்.போன்: 9381023173.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
14-டிச-201215:18:19 IST Report Abuse
p.manimaran நானும் பல இடங்களில் கண்டுள்ளேன், நன்கு திறமையாக இசையுடன் பாடுகிறார்கள். வலேற்க அவர்கள் இசை பயணம்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
09-டிச-201200:41:04 IST Report Abuse
GOWSALYA இந்த மன்றத்து ஆசிரியர் மட்டுமல்ல ,பாடும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் பல.....என்றும் இறைவன் துணையுடன் நீங்கள் எல்லோரும் பெரிய பாடகர்கள் என்று மகுடம் சூடி மகிழணும்.....அம்பாள் மீனாக்ஷி துணை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை