district news | அத்தனூர், வெண்ணந்தூரில் மின் தடை விலக்கு| Dinamalar

தமிழ்நாடு

அத்தனூர், வெண்ணந்தூரில் மின் தடை விலக்கு

Added : டிச 09, 2012

நாமக்கல்: நீரேற்று நிலையம் அமைந்துள்ளதால், அத்தனூர், வெண்ணந்தூரில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதனால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு குடியேற ஆர்வம் காட்டுகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 1992ம் ஆண்டு, 321.50 கோடி ரூபாய் மதிப்பில், பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கிருந்து வெண்ணந்தூர், அத்தனூர் ஆகிய இடங்களில் பம்பிங் ஸ்டேசன் (நீரேற்று நிலையம்) அமைக்கப்பட்டு வழியோரக் கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும், 16 மணி நேரமின்வெட்டு உள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு விசைத்தறிகள் இயங்காமல் இழுத்து மூடும் நிலை உள்ளது. அதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்து மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகள் முடங்கி உள்ளது.இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அத்தனூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வெட்டு என்பது என்னவென்றே தெரியாத அளவுக்கு உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காரணம் அப்பகுதியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. மின் இணைப்பு இருந்தால் மட்டுமே மக்களுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்யமுடியும். இல்லை என்றால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.அதன் காரணமாகவே, அத்தனூர், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து, 24 மணி நேரமும் மின் துண்டிப்பு இல்லாமல் அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மேலும், இங்கு விசைத்தறிக்கூடங்கள் தடையின்றி இயங்கியும் வருகிறது. இப்பகுதியில் எக்ஸ்போர்ட் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.மின் தடை இல்லாததால், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிப்போர் அத்தனூர் பகுதிக்கு படையெடுக்கின்றனர். அப்பகுதியில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவதுதமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்து வரும்நிலையில், இங்கு மட்டும் குறைந்த அளவே மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. இப்பகுதியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அதற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால், மின் தடைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு குறைந்து பட்சம் பத்து நிமிடமும், அதிக பட்சம் அரை மணி நேரமும் மின் தடை ஏற்படுகிறது. இச்சலுகை காரணமாக இங்கு விசைத்தறி கூடங்கள் தடையின்றி இயங்குகிறது. மின் தடை இல்லாததால், தற்போது ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள், இங்கு வாடகை வீடுகள் தேடி படையெடுக்கின்றனர். அதனால், வாடகை கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X