சென்னை: ""கல்லறைக்குச் செல்லும் வரை, அ.தி.மு.க.,வில் நீடிப்பேன்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார். ம.தி.மு.க.,வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், சமீபத்தில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சியின், துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., பொதுக் கூட்டங்களில் பேசப் போவதாக சம்பத் அறிவித்தார். அவரின் முதல் பொதுக் கூட்டம், அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை, மயிலை மாங்கொல்லை திடலில், நேற்று நடைபெற்றது. இதில், சம்பத் பேசியதாவது: ஒரு காலை இழந்தவன், இன்னொரு காலை நேசிப்பதைப் போல, நான் அ.தி.மு.க.,வை நேசிக்கிறேன். ஏற்கனவே இருந்த இயக்கத்தில் கிடைத்த கசப்புகளை, கசக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறேன். இனி, அந்த இயக்கத்தைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ, விமர்சிக்க மாட்டேன். அ.தி.மு.க., சிறப்புகளைப் பற்றியும், இந்த ஆட்சிக்கு கருணாநிதி கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். கருணாநிதி, இந்த ஆட்சிக்கு தோள் கொடுக்க முடியாவிட்டாலும், தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், துரோகத்தை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இன்று நிலவும், மின் வெட்டுக்கு காரணம், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தான். மத்திய அரசிடம் உபரியாக இருக்கும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல், தடை செய்கிறார். மத்திய அரசில், வலுவாக இருக்கும் தி.மு.க., தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கு, உதவி செய்யாமல், தடையாக நின்று வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும், குடும்பத்தினரை முதன்மைப்படுத்தவே, கருணாநிதி விரும்புகிறார். "நான் தி.மு.க.,வில் சேரப் போகிறேன்' என, பொய் பிரசாரத்தையும் மேற்கொண்டனர். என் உயிருள்ள வரை, நான் அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன். தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடுவேன். இவ்வாறு அவர் பேசினார். இலக்கிய அணி செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி, கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழன், ராஜலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.