புதுடில்லி : உலகின் பிற நாட்டினரை விட இந்தியர்களின் ஆயுள் காலம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் 40 வயதிற்கும் மேல் வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970 ல் இருந்து 2010 ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிக்கையான லான்செட், 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்களைச் சேர்ந்த 486 பேரைக் கொண்டு ஆயுட்காலம் குறித்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
இந்தியர்களின் ஆயுட்காலம்:
சராசரியாக இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 63 வயது வரை வாழ்கின்றனர். அதேசமயம் இந்திய பெண்கள் தங்களின் கணவர்களை விட கூடுதலாக நான்கரை வருடங்கள் வாழ்கின்றனராம். ஆனால் இந்தியர்கள் அவர்களின் வயோதிக காலங்களில் குறைவான ஆரோக்கியத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியர்களின் ஆரோக்கியம்:
இந்திய ஆண்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 54.6 வயது வரை நல்ல ஆரோக்கியதுடன் இருப்பதாகவும், கடைசி 9 வருடங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் 67.5 வருடங்களை ஆயுட்காலமாக கொண்ட இந்திய பெண்கள் தங்களின் 57.1 வருடங்கள் வரை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும், தங்களின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் தங்களின் இறுதி 10 அல்லது 10.4 வருடங்கள் குறைவான ஆரோக்கியத்தை கொண்டுள்ளனராம். பிற நாட்டவர்களை விட இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகம் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இந்தியர்களின் ஆரோக்கியம் சீனர்கள் மற்றும் அமெரிக்கர்களை விட மிகவும் குறைவு என்பது வேதனை அளிக்கக் கூடிய தகவலாகும்.
ஆரோக்கிய குறைவிற்கான காரணம்:
இந்திய வீடுகளில் எரிக்கப்படும் மரங்கள், கரிகள், சாணம் உள்ளிட்டவைகளே இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் எதிராக உள்ளதாக தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு உயர் ரத்தஅழுத்த நோயும் ஏற்படுகிறதாம். உணவு தயாரிப்பிற்காக திட எரிபொரு்ளகளை எரிக்கும் போது கார்பன் மோனாக்சைடு, பென்சைன், ஃபார்மால்டிஹைடு உள்ளிட்ட வேதிப் பொருட்கள் காற்றில் கலப்பதன் விளைவாக நிமோனியா, ஆஸ்துமா, பார்வை குறைபாடு, நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதாரக் கழகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் உணவில் உள்ள குறைந்த பழங்கள், ரத்தத்தில் அதிகப்படியான குளூக்கோஸ் அளவு, ஆல்கஹால் பயன்பாடு, இரும்புச்சத்து குறைபாடு, தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு, குறைந்த உடல் உழைப்பு, புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகளே அவர்களின் குறைந்த ஆரோக்கியத்திற்கு காரணம். புகையிலை மற்றும் புகைபிடித்தலின் விளைவாக உலக அளவில் 6.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.