Uratha Sindanai | உரத்த சிந்தனை : லஞ்சமாகும் மானியம் எஸ்.ஆர்.சேகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரத்த சிந்தனை : லஞ்சமாகும் மானியம் எஸ்.ஆர்.சேகர்

Added : டிச 15, 2012 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
உரத்த சிந்தனை : லஞ்சமாகும் மானியம் எஸ்.ஆர்.சேகர்,அரசியல் சிந்தனையாளர்,Uratha Sindanai

மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு சிறந்த திட்டமாக தெரியும். அரசின் பல்வேறு திட்டத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள், மானியங்கள், மக்களை சென்றடைவதில்லை. இடையில் ஏற்படும் ஒழுகல், சிந்தல், சிதறல், உதிரல் போன்றவை, ராஜிவ் சொன்னது போல, ஒரு ரூபாய்க்கு, 17 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றது உண்மையே.இக்குறையை சரி செய்யத்தான், மக்களுக்கு, மானியங்களை பணமாக, அதுவும் வங்கி மூலமாக, நேரடியாக அவர்கள் கணக்கிலேயே செலுத்தி விட, அரசு முடிவு செய்துள்ளது; இது தவறா?

குஜராத்துக்கு வரும், 13 மற்றும் 17ம் தேதி தேர்தல். இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல், 51 மாவட்டங்களில், நான்கு மாவட்டம் குஜராத்தில் இருக்கின்றன.வாக்காளர் என்றால், காங்கிரசின் ஓட்டு கொட்டும் ஒரு ஏ.டி.எம்., காசு என்னும் கார்டை, வாயில், "ஸ்வைப்' செய்தால், வயிற்றிலிருந்து, "ஓட்டை' கொட்டும் இந்த இயந்திரம். இதை உறுதி செய்யும் சம்பவங்கள், சரித்திரத்தில் நடந்தேறியுள்ளன.

கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், "கரீபி ஹகட்டாவோ' வறுமையே வெளியேறு என்ற, கோஷத்தை முன் வைத்து, இந்திரா வெற்றி கண்டார்.கடந்த, 1971ம் வருடம், சுதந்திரம் பெற்று அன்று, 24 ஆண்டு ஆகியும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. இன்றும் அப்படித்தான் என்பது, வேறு விஷயம்.தோற்றுப்போகும் சூழல் உருவாகும் போதெல்லாம், காங்கிரஸ் புத்தியில் புதிய புதிய ஏமாற்றுத் திட்டங்கள் வேர்க்கும். அதே மாதிரி ஒன்று தான், இந்த மானியங்களை பணமாக, வங்கி மூலம் வழங்கும் திட்டம்.ஓட்டுக்காக, கட்சி பணத்துக்கு பதில், அரசு பணத்தையே, அதாவது, மக்கள் பணத்தையே, மக்களுக்கு கொடுக்க அறிவித்ததுதான் இந்த திட்டம்.

வெளிநாட்டிலிருந்து, ஈமு கோழி என்ற ஒரு பறவையை, இங்கு கொண்டு வந்து, அது இந்தியாவின் தட்பவெட்ப சூழலுக்கு வளருமா என்பதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளிடம் ஆசை வார்த்தை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டினர்.காலம் காலமாக வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டு, காவல் நிலைய வாசல்களில், அசலுக்காக தவங்கிடக்கும் காட்சி, தினசரி பத்திரிகைகள் படம் பிடித்து காட்டுகின்றன. சில தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை.

தனியார், மக்களை ஏமாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசே, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டை பறித்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதும், ஒரு சாராரின் கேள்வி.வாஜ்பாய், "வேலைக்கு உணவு' திட்டத்தை கொண்டு வந்தார்; எதற்காக? அன்றைய தினம், உணவு கிடங்குகளில், கோதுமை நிரம்பி வழிந்தது. சேமிக்க இடமில்லை. தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அதை ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார்.மக்கள், அரசிடம் கையேந்தக் கூடாது. எனவே, இலவசமாக கொடுக்க விரும்பாமல், அவர்களே அதை சம்பாதித்துக்கொள்ளும் வழியில், 8 மணி நேரம் வேலை கொடுத்து, சம்பளமாக கோதுமை கொடுத்தார்.வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, அதே திட்டத்தை, மாற்றுப்பெயரில் காங்கிரஸ் தொடர்ந்தது. பெயர் மட்டுமல்ல, வழிமுறை, செயல்பாடுகளும் மாறின. "தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்பது தான், அந்த புதிய பெயர். இதில், தானியத்துக்கு பதிலாக, பணம் கொடுக்கப்பட்டது. கணக்குக்கு, 100 முதல், 110 ரூபாய் சம்பளம். கைக்கு வருவதோ, 60 அல்லது 70 ரூபாய் மட்டுமே. இடையில், 40 முதல், 50 ரூபாய் வரை, ஒழுகல் இருந்ததால், உருப்படியான வேலை ஏதும் நடைபெறவில்லை.

தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றும், ஆளும் கட்சிக்காரர்கள் பிரித்தாண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்த வேலைக்கு, அவர்கள் கேட்ட விலை, தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனும் நிபந்தனை தான். இப்போது, "வங்கி மூலம் மானிய பணம்' திட்டம், நிஜமாகவே, ஒரு ஜாக்பாட் தான். இதே திட்டத்தை, இப்போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, "மாதிரி திட்டமாக' காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், "கோட்காசிம்' தாலுகாவில், நவம்பர், 2011ல் அறிமுகப்படுத்தினர்.முதலில் ஏழை குடும்ப கார்டுதாரருக்கு, வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்து, மண்ணெண்ணெய்க்கு மானியத்தை, வங்கியில் செலுத்த முடிவு செய்தனர். அதாவது, ஒரு கார்டுதாரர், மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 15 ரூபாய் என, மானிய விலையில் கொடுத்ததை, அதன் சந்தை விலையான, 49 ரூபாய்க்கு வாங்கி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் முதல் மாத மானியம், 340 ரூபாயை, முன்கூட்டியே வங்கி கணக்கில் கட்டி விடுவது என, முடிவு செய்தனர். இது முதல், மூன்று மாதங்களுக்கு தொடரும். இரண்டாவது, மூன்றாவது மாதத்திலிருந்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வாங்கும் மண்ணெண்ணெய்யின் அளவை பொறுத்து, மானிய தொகை, வங்கியில் செலுத்துவது என்பது ஏற்பாடு. திட்டம் துவங்கிய கடந்த ஓராண்டில், ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் மானிய தொகை, வங்கியில் செலுத்தப்படவில்லை. சந்தை விலைக்கே, ரேஷனில் மண்ணெண்ணெய்யை விற்பதால், எண்ணெய் வாங்க ஆளில்லை. அதாவது, ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை, 70 சதவீதம் குறைந்ததுஇந்த விற்பனை குறைவை, அரசு, தற்போது கையில் எடுத்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய், கள்ள மார்க்கெட்டுக்கு போனதை, அரசு தடுத்து விட்டதாம். இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு இதை வைக்கிறது.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. அரசின் மானியம், வங்கி கணக்கில் ஏறாததால், சந்தை விலையான லிட்டர், 49 ரூபாய்க்கு மக்களால் மண்ணெண்ணெய்யை வாங்க முடியாததால், கிராமவாசிகள், காட்டில் கிடைக்கும் விறகுகளை பொறுக்கி, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

இது தவிர, இந்த திட்டத்தில் வேறு என்ன பாதகங்கள் இருக்கின்றன என்று, கேட்பவர்களுக்கு, சில விவரங்கள்: வங்கிகள் இல்லாத கிராமங்கள் நாட்டில், 40 சதவீதத்துக்கும் அதிகம். பெரும்பாலான கிராம மக்கள், தபால் நிலையங்களில், கணக்கு வைத்துள்ளனர்.நாட்டின், 60 சதவீத தபால் நிலையங்கள், "இன்டர்நெட்'டினால் இணைக்கப்படவில்லை. இதை செய்து முடிக்க, அரசுக்கு, 2013 ஜூனில் ஆரம்பித்து, 15 மாத காலம் ஆகும் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.ஆக, "மாதிரி திட்டமே' ஓராண்டு கால சாதனையாக, வேதனையே தந்துள்ளது. அதுவும், ஒரே ஒரு பொருளுக்கு, அதாவது, மண்ணெண்ணெய் மானியத்துக்கு மட்டும்.

மிக முக்கியமான வங்கி கணக்கு வசதியே முழுமை பெறவில்லை. அரசு அறிவித்துள்ள, 51 மாவட்டங்களில் கூட, 71 சதவீதம், வங்கிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வசதி உள்ளதாக, மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், இதை அவசர, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? "தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ், இத்திட்டத்தை அறிவித்துள்ளது' என்ற குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் வாக்குமூலம் வலு சேர்க்கிறதே.நலத்திட்டங்கள், மானியங்கள், ஏழை மக்களை சமூகத்தில் முன்னேறியவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுவதற்காக, அரசு செய்ய வேண்டிய கட்டாயங்கள். அதனால் தான், நம் நாட்டின் அரசை, அரசமைப்பு சட்டத்தில், "மக்கள் நல அரசாங்கம்' என்று
குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இன்றைய அரசு, குறிப்பாக, "காந்தி' பெயர் கொண்ட, நேரு குடும்ப தலைமையிலான அரசுகள், மானியங்களை பணமாக தருகிறோம் என்ற பெயரில், லஞ்சமாக மாற்ற முயல்வது, இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.
EMAIL:srseghar@gmail.com

எஸ்.ஆர்.சேகர்,அரசியல் சிந்தனையாளர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
18-டிச-201207:43:24 IST Report Abuse
K.Balasubramanian பண்டமாக பல தனியார் கம்பெனிகள் உப்பு முதல் உள்ள பல சரக்குகளை சம்பளத்தின் பகுதியாக வழங்குவதால் தாய்குலம் மகிழ்கிறது . டாஸ்மாக் போன்ற தொல்லைகள் இல்லை . ரேசன் கடைகளை நிறுத்துவது குடும்ப நன்மைக்கு அல்ல .
Rate this:
Share this comment
Cancel
Shasun N - erode,இந்தியா
17-டிச-201210:14:45 IST Report Abuse
Shasun N பணத்தைக் கொடுக்கிறேன் பேர்வழி என்ற சாக்கில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டம் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. இதற்கு மாற்று வழியாக சம்பந்தப்பட்ட நுகர்வோரின் அல்லது கார்டுதாரரின் பெருவிரல் ரேகை அடையாளத்தைப் பதிவு செய்து பொருட்களை வழங்கினால் அரசாங்கம் தனித் தனி நபர்களுக்கு மானியத்தைத் தருவதைத் தவிர்த்து பொருட்கள் வழங்கும் மையத்திற்கோ அல்லது கூட்டுறவு அமைப்புக்கோ மானியத் தொகையினை மொத்தமாக வழங்கி மக்களின் சிரமத்தைத் தவிர்த்து நிம்மதியைத் தரலாமே. மேலும் மக்களுக்கு சிரமம் தராமல் மானியத்துடன் கூடிய பொருட்களை சந்தை விலைக்கு விற்பதைத் தவிர்ப்பதன் மூலம் வசதி குறைவானவர்களும் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்குத் தகுந்தபடி தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்ற வகையிலும் சிந்தித்துச் செயல் படுத்தினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-டிச-201201:55:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி "தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை." - மிக மிக உண்மை.. மணலை கயிறாகத் திரிப்பேன்னுட்டு 20,000 கோடி மணல் திருட்டை 60,000 கோடிக்கு உயர்த்தினார்கள்.. 2 மணி நேர மின்வெட்டை மூன்றே மாதத்தில் போக்குவேன் என்று சவடால் விட்டு ஏமாற்றி 20 மணிநேரம் இருட்டில் தவிக்க விட்டார்கள்.. விலைவாசி உயர்ந்திருக்கிறது, என் ஆட்சியில் குறையும் என்று சொல்லி கும்மாளம் இட்டவர்கள் ஆட்சியில் அது ஆகாயத்தில் இருக்கிறது.. ஆளும்கட்சியின் அதிகார தர்பாரும், ஊழலையும் பார்த்து வெதும்பும் மக்கள், பழைய கொள்ளிக்கட்டையே பரவாயில்லை என்று சொல்லும் நிலையில் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. குப்பை, சுகாதாரமின்மை, கொசு, நோய் என்று பிணிகள் நிறைந்து ஆப்பிரிக்க கண்டமாக தமிழகம் இருக்கிறது... நெருப்பின் மேல் சுடுநீரில் மிதக்கும் தவளைகள் போல் கொடுமைகளை தாங்கிக் கொண்டு நித்தம் வெந்து சாகிறார்கள் .. அதை பற்றி யாரும் மூச்சு விடுவதாகக் காணோம்...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
17-டிச-201200:59:56 IST Report Abuse
Sundeli Siththar மானிய விலையில் பொருட்கள் கிடைக்காது என்றால், ரேஷன் கடை எதற்கு? அதன் ஊழியர்களை வெளியே அனுப்பிவிடலாமே... பணமாவது மிச்சமாகும். அதே போல Food Corporation of India என்ற நிறுவனமும் தேவையில்லை. அந்த நிறுவனத்தையே மூடிவிடலாம். அந்த பணமும் மிச்சமாகும். கிடங்குகளை, வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்றுவிடலாம். அதிலும் கொஞ்சம் பணம் அரசுக்கு கிடைக்கும். மக்களுக்கு இந்த பணமும் ஒழுங்காக போகாது... இந்த திட்டமும் வேகாது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-டிச-201222:45:34 IST Report Abuse
Nallavan Nallavan திரு. சேகர், மற்றொரு நாளிதழ் தனது தலையங்கத்தின் மூலம் இவர்களின் நோக்கத்தைப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது படித்திருப்பீர்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-டிச-201219:40:29 IST Report Abuse
தமிழ் குடிமகன் காங்கிரசில் ராகுலுக்கு எதிரானவர்கள் seiyyum velai
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-டிச-201219:39:41 IST Report Abuse
தமிழ் குடிமகன் இந்த திட்டம் நாளடைவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாகவே முடியும் .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-டிச-201219:37:18 IST Report Abuse
தமிழ் குடிமகன் இந்த திட்டத்தை கொண்டுவர மக்களிடம் கருத்து கேட்டார்களா .................
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-டிச-201219:17:32 IST Report Abuse
தமிழ் குடிமகன் நல்லவர்களுக்கு ஒட்டு போடாதவரை இந்திய மக்கள் இந்த துன்பத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
16-டிச-201216:09:48 IST Report Abuse
Natarajan Iyer எதையுமே இலவசமாக கொடுக்கவேண்டாம். மாதம் இருபது கிலோ தரமான அரிசி கோதுமை போன்றவற்றை கிலோ ஐந்து ரூபாய்க்கும்.மண்ணெண்ணையை லிட்டர் பத்து ரூபாய்க்கும், சக்கரை / பருப்பு வகைகளை கிலோ இருபது ரூபாய்க்கும், பாமாயில் / கடலை எண்ணையை லிட்டர் முப்பது ரூபாய்க்கும் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கினால் போதும். வறுமையை ஒழித்து விடலாம். ஹூம் ,,,,மறுபடி வாஜ்பாய் வந்தால்தான் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை