திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் செயல்படும், நித்ய அன்னதானத் திட்டத்தில், இடவசதி இல்லாத சாப்பாட்டுக்கூடத்தினால், பக்தர்கள் உணவருந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டமான, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தமிழக அரசின் மதிய அன்னதானத் திட்டம் மட்டும் செயல்பட்டு வந்தது. அதற்காக, சேஷராயர் மண்டபம் அருகே, 150 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு அன்னதானக் கூடமும், அதன்பின் சமையல் கூடமும் அமைக்கப்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், செப்டம்பர், 13ம் தேதி, ஸ்ரீரங்கம் கோவிலில், காலை, 8 மணி முதல், இரவு, 10 மணி வரையிலான, நித்ய அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.மதிய அன்னதானத்திட்டத்துக்கான, அதே கூடத்தில் நித்ய அன்னதான திட்டத்துக்கான உணவும் தயார் செய்யப்படுகிறது. மூலவர் சன்னதியில் தரிசனம் முடித்த பக்தர்களுக்கு, ஒருவருக்கு ஒரு டோக்கன் என, அன்னதானத்திற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
பக்தியுடன் அதை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள் அனைவரும், உணவருந்த விரும்பும் நிலையில், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், அன்னதான கூடத்தின் முன், நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாத காரணத்தினால், பொறுமையிழந்து அவர்களது டோக்கனை கிழித்தெறிந்துவிட்டு, சென்று விடுகின்றனர்.கோவில் அதிகாரிகளோ, டோக்கன் வழங்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் சாப்பிட்டதாக கணக்கு காட்டுகின்றனர். உண்மையில் டோக்கன் வாங்குபவரில் பாதிப்பேர் கூட சாப்பிடுவது இல்லை. மீதமாகும் உணவை, வெள்ளைக் கோபுரம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டி விடுகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் கூறியதாவது:நித்ய அன்னதானத் திட்டம் துவங்கியபோது, "தினமும், 200 பேர் உணவருந்துவர். விடுமுறை நாட்களில், 500 முதல், 1,000 பேர் வரை, உணவருந்துவர் என, எதிர்பார்த்தோம். வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வந்தால் கூட, அன்னதானம் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம்' என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்."முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதை போல, அவர்களின் கணிப்பை மீறி, தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட வருகின்றனர். அவர்களுக்கு உரிய இடவசதி இல்லாததால், இன்றுவரை வரிசையில் காத்திருந்து, வெறுத்துப் போய் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். நித்ய அன்னதானம் துவங்கி, மூன்று மாதங்களாகி விட்டது.
"ரங்கா ரங்கா கோபுரம் அருகே இடதுபுறம், நாதமுனி ஆழ்வார் சன்னதியின் பின்புறத்தில் உள்ள நந்தவனத்தில், பெரிய அன்னதானக்கூடம் கட்டப்படும்' என்று அறிவித்த அதிகாரிகள், நேற்று வரை, அந்த இடத்தில் கூடம் கட்ட ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. அதேபோல, அறிவிப்புக்கு மாறாக, காலை, 10:00 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணிக்குள் அன்னதானத்தை முடித்து விடுகின்றனர்.நித்ய அன்னதான திட்டம் துவங்கிய பின், முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள விழாவில், பல்லாயிரக்கணக்கான பேர், "பெருமாளின் பிரசாதம்' என்று கருதும் அன்னதானத்தை சாப்பிட விரும்புவர். அவர்களுக்காக இங்கு எவ்வித முன்னேற்பாடும் செய்யப்படவில்லை.இதனால், "ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு வயிறார உணவளிக்க வேண்டும்' என்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம் பாழாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உண்மை தகவல் தராத அதிகாரி!
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்று, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட, ஸ்ரீரங்கம் தொகுதியில் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு பணியும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடைமுறைப்படுத்தப்படுகிறது. பணிகளின் நிலை குறித்தும் அவரிடம், "அப்டேட்' செய்யப்படுகிறது.ஆனால், "அன்னதானத் திட்டம் முடங்கிய நிலையில் இருந்தபோதும், அது சிறப்பாக செயல்படுவதாக, செய்தி, தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளை கவனிக்கும் அரசுச் செயலர் ராஜாராம், முதல்வரிடம் தெரிவிப்பதால், நாங்கள் அன்னதானத்திட்டம் குறித்து புகார் அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை' என, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோயிலை எச்சில் படுத்தி சாப்பிடுபவர்கள் அனைவரும் அந்த இடத்தை நாசம் செய்கின்றனர் ,எனவே கோயிலுக்கு உள்ளே இந்த அன்ன தான திட்டத்தை நடத்தவேண்டியதில்லை .கோயிலை விட்டு வெளியே சற்று தள்ளி நடத்தலாம் ,அதில் தவறேதும் இல்லை .எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருவரங்கம் கோயில் உட்பட அனைத்து கோயில்களின் புனிதத்தை காக்க,சுத்தமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .எடுப்பாரா ?
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
மன்னர்கள் ஆண்ட காலங்களில் மக்கள் தொகை குறைவு மேலும் தங்கள் திருக்கோவிலுக்கு மக்கள் கால்நடையாக வருவார்கள், குடும்பத்துடன் வருவார்கள் கையில் இவர்களுக்குப் பணமும் இருக்காது அத்னானால் இவர்கள் இளைப்பாற இடமம், பசியாற உணவும் தந்தனர், இன்றோ நிற்கக்கூட இடம் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை, மேலு, கற்பக கிரகம் வரை செல்ல வாகன வசதி, குளிர்சாதனை வசதி என்று இருக்கும் காலங்களில் இப்படி இருக்க எந்த இந்த அன்னதானத் திட்டம், மாறாக அவரவர்கள் தங்கள் செலவுகளில் ஒவ்வொரு திருக்கோவில்கள் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு நீண்ட காலம் உயிர்வாழ வர்களுக்கு இலவசமாகச் சத்து மாத்திரைகள் தந்தால் மிக மிக நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
...அதிகாரிகளையே குறை சொல்லி எழுதியுள்ளீர்களே???... திட்டங்கள் நடைபெறாமல் போவதற்கு அதிகாரிகள் மட்டும்தான் காரணமா???... அப்படியே அந்த அதிகாரிகள் திட்டத்தை (எந்த திட்டமாக இருந்தாலும்...) நடைமுறைபடுத்தாமல் விட்டுவிட்டால், அதிகாரிகளை சும்மா விடுவார்களா மேற்படி ஆட்கள்... ஆதலால் எல்லாம் திட்டமிட்ட திட்டப்படிதான் நடைபெறுகிறது, என்று தோன்றுகிறது... ...
அதிகாரிகள் ஆட்சி நடக்கும் போது, அன்னதானமாவது...ஆகார திட்டமாவது. மக்கள் மீதும் ஆட்சி மீதும்....ஆட்சி நடத்தும் கட்சி மீதும் வெறுப்பு தொடராமலிருக்க உண்மையான நலம் விரும்பிகளை முதல்வர் அடையாளம் கண்டு அருகில் வைத்து கொள்ள வேண்டும். யார் பேச்சையோ கேட்டு நடராசனையும், செங்க்சையும் ஓரம் கட்டி வைத்திருப்பது சரியா என யோசிக்க வேண்டிய நேரம்........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.