தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம், 5,000 ஆசிரியர்கள் வரை மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பல மாதங்கள் வரை காலதாமதம் ஆனது.
தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, முதுகலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களும், டி.ஆர்.பி., தேர்வின் மூலம், 3,000 முதுகலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், டிச., 24ம் தேதி, பணியில் சேர உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் மேல், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள், 3,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை, மட்டுமே சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது, அரசு பணியில் சேர்ந்தவுடன், குறைந்தது, 18 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதால், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இவர்கள் தற்போது பணிபுரிந்து வரும், தனியார் பள்ளிகளில் இருந்து, விலகி அரசுப்பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை, ஆசிரியர்கள் பணியிடம் காலியாகியுள்ளது. அரசுப்பணி, சம்பளம் அதிகம் ஆகிய காரணங்களால், இவர்களை, தனியார் பள்ளியிலேயே தக்க வைப்பதற்கான முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை.அதிலும் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பாடம் எடுத்த, பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர்கள் பலர், கல்வியாண்டில் நடுவில், விலகி போவது, தனியார் பள்ளிக்கு பெரும் பின்னடைவையும், தேர்ச்சி விகிதம் குறையுமே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மாணவ, மாணவியர் மத்தியில், புது ஆசிரியர் மூலம் எப்படி தேர்வை சந்திப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரை, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். பள்ளிகளில் தொடர்ந்து பாடம் நடத்தி வருபவர்களால், இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. இதனாலேயே தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாக அவர்கள் பணியிலிருந்து விலகுவதால், பல பள்ளிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மிக முக்கியம். அப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாதி கல்வியாண்டில், விலகுவதால், அந்த இடத்துக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிப்பதும் கடினம்.அதுமட்டுமின்றி, ஆசிரியருக்கும், மாணவருக்கும் இருந்த அதே தொடர்பு, மீண்டும் உருவாகவே மூன்று மாதம் ஆகிவிடும். அதற்குள் தேர்வு வந்து விடும் நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டில், பல பள்ளிகள் எதிர்பார்க்கும் தேர்ச்சி விகிதம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஒரு நல்ல செய்திதானே? மிகுந்த வசதி குறைந்தவர்கள் கூட இப்போது தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி சிரமபடுகிரார்கள். அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு குறைந்த பட்சம் அரசு காலேஜில் ஒதுக்கீடு இருந்தால் இன்னும் நல்லது. ஜாதி, மதம் இவற்றிற்கெல்லாம் ஒதுக்கீடு இருக்கும் போது, அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு ஏன் ஒதுக்கீடு இருக்க கூடாது? இவர்கள்தான் இப்போதைய காலகட்டத்தில் உண்மையான பிட்படுத்தபட்டவர்கள்.
உதாரணமாக சென்னை கார்பரேஷன் பள்ளியில் படிப்பவர்கள் மிகுந்த ஏழைகளாகவும் பிற்பட்ட அல்லது தாழ்ந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கவே வாய்ப்புண்டு. இவர்களால் தனியார் கல்லூரியில் படிக்கும் மானவர்களுடுன் போட்டி போடுவது என்பது ரொம்பவும் சிரமம். இவர்களுக்கு சிறிது இட ஒதுக்கீடு கிண்டி எஞ்சினீரிங் காலேஜிலும் , சென்னையில் இருக்கும் மற்ற மருத்துவ கல்லூரியிலும் கொடுக்கலாம். மற்ற மாவட்டங்களில் அங்குள்ள அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்கலாம்.
நல்ல பள்ளி என்ற பெயர், நன்றாகப் படிக்கும் குழந்தைகளால் வருவது.. நன்றாக படிக்கும் பிள்ளைகள் எங்கு படித்தாலும் நன்றாக படிப்பார்கள்.. அரசு பள்ளிகளுக்கு தேவை சிறிது கவனமும், அரசிடம் இருந்து பணமும்.. ஆளும்கட்சி அரசியல்வாதிகளும், கல்வித் துறையும் சேர்ந்து தனியார் பள்ளிகளிடம் கொள்ளை வசூல் செய்து விட்டு, வேண்டுமென்றே அரசு பள்ளிகளை தரம் குறைந்தவைகளாக்குகின்றனர் .. எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அவைகளை வளர்த்து விடுவதில் முட்டாள் பெற்றோர்களின் பங்கும் உண்டு.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.