School students talent | இளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண்காட்சியில் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண்காட்சியில் அசத்தல்

Updated : டிச 17, 2012 | Added : டிச 17, 2012 | கருத்துகள் (4)
Advertisement

அந்த சிறுவனுக்கு வயது ஆறு. மழலை ஆங்கிலத்தில் பேசி, "மாஜிக் மேன்' போல், எரிமலையை வரவழைத்து, பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறான். மலை உச்சியில் இருந்து எரிமலை குழம்பு, ரத்தச் சிவப்புடன் புகை கக்கியவாறு, பீறிட்டு வெளியேறுகிறது.இயற்கை நிகழ்வை மிகவும் தத்ரூபமாக, செயற்கையாக செய்து காட்டும் சிறுவன் பெயர் ஷென்னால். வடவள்ளி பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். வெறும் வினிகர், சோடா பவுடரை கையில் வைத்துக் கொண்டு, இந்த மாந்தரீக வித்தையை செய்து காட்டுகிறான் அந்த பிஞ்சு சிறுவன். எதிர்கால விஞ்ஞானியை அடையாளம் காட்டிய இடம், கோவை கொங்குநாடு அறிவியல் கல்லூரி வளாகம்.

இந்திய அறிவியல் கழகத்தின் நூற்றாண்டு விழாவை, தென்பிராந்திய அளவில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், இந்திய அறிவியல் கழக கோவைப்பிரிவும் இணைந்து நடத்தின. விழாவின் ஒரு பகுதியாக, நேற்று கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், "மாணவர் அறிவியல் கண்காட்சி' நடந்தது.கண்காட்சியில், ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல் முதுகலை மாணவர்கள் வரை தங்கள் அறிவியல் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றும் விதத்தில், அசத்தல் அரங்குகளை அமைத்திருந்தனர். மொத்தம் 130 அறிவியல் படைப்புகள், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியில், உயிரி அறிவியல், கணிதம் என, பல்வேறு பிரிவுகளில், செயல்விளக்க மாதிரிகளுடன் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் வகையில், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்காத புதிய படைப்புகளைமாணவர்கள் தயாரித்திருந்தனர். எதிர்காலத்தில் பசுமை உலகத்தை படைக்கும் அக்கறையை, தங்கள் தொலைநோக்கு சிந்தனை வாயிலாக இளம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியதே, கண்காட்சியின் சிறப்பம்சம்.

மாணவர்களின் இளம் மூளையில் அக்னி சிறகாக பொறி தட்டி, அழகிய கை வண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகளில் சில:


ரயில் விபத்து தடுக்கும் "ரோபோ' :

ரயில் ரயில்கள் தடம்புரண்டு, பயணிகள் கொத்து கொத்தாக உயிர் இழக்கும் கோர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மனித தவறா, இயந்திர தவறா என்ற இனம்புரியாத கேள்விகளுடன், விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன. விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்துவது குறித்த திட்டங்கள் நீண்டுகொண்டிருக்க, உயிர்இழப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. ரயில் விபத்தை தடுப்பது எப்படி என்பதை செயல்விளக்கம் காட்டி, விளக்கியுள்ளார், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர்.கரூர் வெற்றி வினாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் பாரத். தேசத்தின் பெயரைக் கொண்ட இந்த மாணவர் தேச சிந்தனையோடு, ரயில் விபத்து தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். "டிரைன் வே டிராக்கர்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரயில்கள் விபத்தின்றி தடுக்கப்படலாம் என்பது இவரது கண்டுபிடிப்பு.இதற்கு "வேவ் டிரான்ஸ்மிஷன் ஆன்டெனா' பொருத்தப்பட்ட ஒரு ரயில் பெட்டி போதும். ஆளில்லாத இந்த ரயில் பெட்டி, ஒரு "ரோபோ ரயில்' போல் செயல்பட்டு, பயணிகள் ரயிலின் முன்னால் சென்று கொண்டிருக்கும். பயணிகள் ரயிலுடன் "ரேடியோ பிரிக்குவன்சி வேவ்' தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ரோபோ ரயில் குறிப்பிட்ட இடைவெளியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்.ரயில் தண்டவாளத்தில் சேதம் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால், ரோபோ ரயில் தானாகவே நின்று, பின்னால் வரும் ரயிலுடன் தொடர்பு துண்டிக்கப்படும். அப்போது, அந்த ரயிலும் தானாகவே நின்று, விபத்தில் இருந்து காப்பாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மாணவர் பாரத் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


நியூட்டன் விதிக்கே சவால் :

நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த விதியை, புதிய கண்ணோட்டத்தில் கண்டுபிடித்துள்ளனர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதுகலை இயற்பியல் (எம்.எஸ்.சி.,) மாணவர்கள். எந்த பொருளும் மேலிருந்து கீழே விழும் என்பது, புவியீர்ப்பு விசையின் அடிப்படை கோட்பாடு. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பில், கீழே இருக்கும் ஒரு பொருள் மேல்நோக்கி நகரும் விந்தையை காணலாம். இதற்கு தேவை இரண்டு புனல்கள்; இரண்டு பி.வி.சி.,குழாய்கள். வாய் பகுதியில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புனல்கள், குழாய்களை தாங்குதளமாக கொண்டு மேல்நோக்கி நகருகின்றன. "புவிஈர்ப்பு விசைக்கு எதிராக, ஒரு பொருள் நகருவதை போன்ற உணர்வு ஏற்பட, கண்களின் "இடமாற்று தோற்றப்பிழை' என்ற இயற்பியல் தத்துவமும் ஒரு காரணம்,' என, இந்த அற்புத கண்டுபிடிப்பின் பின்னணியை விளக்கி, பார்வையாளர்களின் கண்களை விரிய வைக்கின்றனர், மாணவர்கள்.


ஓடும் வாகனத்தில் மின்சாரம் தயாரிப்பு:

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தான். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தங்களால் ஆன புதிய முயற்சியை துவக்கியுள்ளனர், கல்லூரி மாணவிகள். இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார், சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், ஸ்பீடு பிரேக்கருக்கு பதிலாக காற்று செலுத்தப்பட்ட ரப்பர் குழாய்களை பதிக்க வேண்டும். இந்த "ஸ்பீடு பிரேக்கர்' வழியாக வாகனங்கள் செல்லும்போது, டயர் அழுத்தம் காரணமாக, அதிக விசையுடன் காற்று உள்ளே செல்கிறது. ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும் காற்று, சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள, "ஸ்டோரேஜ் டேங்க்'ல் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள காற்றாலையை இயங்க வைக்கிறது. இங்கு இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.தமிழக சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லாத நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பது, பெருமளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.


சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்கள்:

வாகன புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், பற்றி எரியும் பெட்ரோல் - டீசல் விலை என்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, சூரிய ஆற்றலால் இயங்கக் கூடிய, சோலார் காரை தயாரித்துள்ளார் கொங்குநாடு கல்லூரி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவர் பிரசன்னா.காரின் மேற்பகுதியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிப்படும் சூரிய ஆற்றல் காரணமாக கார் இயங்குகிறது. சிலிக்கான், "செமி - கண்டக்டராக' செயல்படுகிறது. இந்த காரை ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக இயக்கும் விதத்திலும் வடிவமைத்துள்ளார். காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் குணசேகர், சூரிய சக்தியால் இயங்கும் பஸ்சை செயல்விளக்கம் செய்து காண்பித்து அசத்தினார். இந்த பஸ்சை சூரிய ஒளி கிடைக்காத நேரத்திலும், குறிப்பாக இரவு மற்றும் மழைக்காலங்களிலும் இயக்கலாம். இதில் ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் இவர் விளக்கிக் காட்டினார். இதேபோல், கோவை இன்பன்ட் ஜீசஸ் கான்வென்ட் மாணவி செலின் ஹில்டா, சூரிய அடுப்பு தொழில்நுட்பத்தில், ஆரோக்கிய உணவு தயாரிப்பது குறித்து விளக்கினார்.சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், மரபுசாரா எரிசக்தி தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி, இவர்கள் தயாரித்துள்ள அற்புத படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.


பாடும் ஒலியில் ஆடும் தீ:

நெருப்புக்கு கூட இசையை ரசிக்க முடியும் என்பதை அறிவியல்பூர்வமாக மெய்ப்பித்து காட்டினர் மாணவர்கள். காஸ் அடுப்பு போன்று, சிலிண்டரில் இருந்து, குழாய் வழியாக காஸ் வினியோகிக்கப்படுகிறது. குழாயில் நீண்ட வரிசையில் துளைகள் போடப்பட்டுள்ளன. குழாயின் மறு முனையில், ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளது. காஸ் குழாயை பற்ற வைக்கும்போது, வரிசையாக தீ ஜுவாலைகள் அணிவகுத்து நிற்கின்றன.மறுமுனையில் மின்னாற்றலால், ஸ்பீக்கரில் பாட்டு ஒலிக்கப்படுகிறது. பாட்டு ஒலிக்கு ஏற்றவாறு தீ ஜுவாலைகள் மேல் எழுந்தும், கீழே தாழ்ந்தும் ஆடுகின்றன.
"மியூசிக்கல் பிளேம் என்ற பெயரில், நாங்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம், வாயு மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டது' என்கிறார், கொங்குநாடு கல்லூரி எம்.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் பிரபாகரன்.


விமானத்தை வீழ்த்தும் துப்பாக்கி:

அறிவியல் கண்காட்சி என்றால், பாதுகாப்பு தளவாட பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே. இதை வலியுறுத்தும் விதத்தில், என்.சி.சி., மாணவர்கள் அதிநவீன துப்பாக்கிகளையும் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இவை ராணுவத்தின் காலாட்படைப் பிரிவில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதில், முக்கியமானது, ஆகாயத்தில் புள்ளியாக பறக்கும் எதிரி நாட்டு விமானத்தை, குருவி போல் சுட்டு வீழ்த்தும் இயந்திர துப்பாக்கி.

ராணுவ அதிகாரி ஜுவாலா கூறுகையில், ""9.2 கிலோ எடை கொண்ட இந்த இயந்திர துப்பாக்கியை ஒருவர் மட்டும் கையாள முடியாது. துப்பாக்கியை இயங்க வைக்கும்போது இருவர் வேண்டும். 360 டிகிரி கோணத்தில் சுழன்று தாக்கும் இந்த துப்பாக்கியில் 30 புல்லட்கள் இருக்கும். ஒரு முறை கைவைத்தால், 28 புல்லட்கள் தொடர்ச்சியாக வெளியேறி, எதிரி விமானத்தை சுக்கு நூறாக்கும்,'' என்றார். இதேபோல், பல்வேறு மாடல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - USA,யூ.எஸ்.ஏ
18-டிச-201201:03:27 IST Report Abuse
Kumar வல்கனோ அமெரிக்காவில் கடையில் வாங்கின மாதிரி . இங்கு இது 10 டாலருக்கு விற்க படுகிறது. எனது மகன் இந்த செய்முறையை இங்கு செய்தான்..
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
17-டிச-201220:18:59 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM அனைவருக்கும் பாராட்டுகள் ....
Rate this:
Share this comment
Cancel
Seenu - Namakkal  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201213:40:33 IST Report Abuse
Seenu இதை அரசு அங்கீகரிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
17-டிச-201202:05:06 IST Report Abuse
Vasu Murari அனைத்து ஊடகங்களும் கொலை, தற்கொலை, ஊழல், லஞ்சம், காதல், கற்பழிப்பு போன்ற அக்கப்போர் சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இதுபோன்ற கண் காட்சிகளை காண இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்திகளையும் விளம்பரங்களையும் வெளிக்கொணர வேண்டும். கண்காட்சி அமைப்பாளர்கள் அதை குறைந்த பட்சம் இருவாரங்களாவது நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அப்போதுதான் தொலை தூரத்தில் இருந்து வருவதற்கு முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை