அரசுப் பணி பதவி உயர்வில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு (எஸ்.சி., - எஸ்.டி.,), இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு, நேற்று லோக்சபாவில், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர்; அதனால், சபை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது."அரசுப் பணி பதவி உயர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உட்பட, பலர், நீண்ட நாட்களாக கோரி வந்தனர். அதனால், பார்லிமென்டின், மழைக்கால கூட்டத் தொடரிலேயே, இது தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவதாக, அரசு வாக்குறுதி அளித்திருந்தது; ஆனால், அது நிறைவேறவில்லை.
கடந்த வாரமே தாக்கல்:
இந்நிலையில், "தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரிலாவது, மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, மாயாவதி தீவிரமாக வலியுறுத்தினார். அதனால், கடந்த வாரம், ராஜ்யசபாவில், இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சமாஜ்வாதி, எம்.பி.,க்கள், கடும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களை, சபையிலிருந்து வெளியேற்ற, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உத்தரவிட்டார். இதையடுத்து, சபையில் அமைதி திரும்பி, மசோதா மீதான விவாதம் துவங்கி, அனைத்து கட்சி தலைவர்களும் பேசினர். அப்போது, பெரும்பாலான தலைவர்கள் மசோதாவை ஆதரித்துப் பேசினர். மசோதா மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு என, இரண்டு நாள் விடுமுறைக்கு பின், நேற்று மீண்டும் பார்லிமென்ட் கூடியது. லோக்சபா நேற்று காலை துவங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த விடாமல், சமாஜ்வாதி, எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகை இட்டு, மசோதாவுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பினர்.
"கேபிள் விஷயத்தில் மவுனம்?'
அந்த நேரத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, "தமிழக அரசின் கேபிள் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்' என, கோஷமிட்டனர். இவ்விஷயத்தில், வேண்டுமென்றே மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது என்றும், குறை கூறினர்.அ.தி.மு.க., வின் அனைத்து எம்.பி.,க்களும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்ததால், நிலைமை தீவிரமாக இருந்தது.கடும் அமளியை அடுத்து, சபை அரை மணி நேரத்திற்கு, ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடுவதற்கு முன், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங்கை, பார்லிமென்ட் விவகார அமைச்சர் கமல்நாத் சந்தித்தார்.
கேள்வி நேரம் ரத்து:
சபைக்குள்ளேயே நடந்த இந்த சந்திப்பின் போது, முலாயம் சிங்கிடம் பேசி, அவரை சமாதானப்படுத்த முயன்றார்; ஆனாலும், பலன் இல்லை.மீண்டும் சபை கூடியதும், வழக்கம் போல, அமளி தொடர்ந்தது. சமாஜ்வாதி எம்.பி.,க்கள் கோஷமிட்டபடி இருந்தனர். சபாநாயகர் மீரா குமார், எவ்வளவோ வேண்டியும், எதுவும் பலன் அளிக்கவில்லை.இதையடுத்து, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளியே நீடித்தது. இதனால், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட சபை, இறுதியாக நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், ராஜ்யசபாவில், நேற்று கேள்வி நேரம் முடிந்து, பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், சமாஜ்வாதி மூத்த எம்.பி., ராம்கோபால், ""பதவி உயர்வில், இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கூடாது. அதற்கு பதிலாக, முஸ்லிம்களுக்கு, இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும், சச்சார் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற, மத்திய அரசு முன் வர வேண்டும்,'' என்றார்.
பதவி உயர்வில், இடஒதுக்கீடு மசோதா, நாளை லோக்சபாவுக்கு வரவுள்ளது. அங்கும், ராஜ்யசபாவைப் போல, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.அதே நேரத்தில், வங்கி சீரமைப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா மற்றும் லோக்பால் மசோதா என, மூன்று முக்கிய மசோதாக்கள், அரசின் கைவசம் உள்ளன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முடிய, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்த மசோதாக்களை கொண்டு வருவதா, வேண்டாமா என, பெரும் குழப்பத்தில் அரசு தரப்பு உள்ளது.
சோனியா போஸ்டர்கள் கிழிப்பு :
லக்னோ: பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உ.பி.,யைச் சேர்ந்த, 18 லட்சம் அரசு ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, அவர்களின் போராட்டம், தீவிரமடைந்தது. லக்னோவில், ஏராளமான அரசு ஊழியர்கள், முக்கிய சாலைகளில், திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, அந்தக் கட்சி தலைவர் சோனியாவின் போஸ்டர்களை கிழித்து, எறிந்தனர். அலுவலகத்துக்குள் புகுந்தும், தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே, மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, போராட்டம் நடத்தியவர்களை, போலீசார், கலைத்தனர்.
ஆதரவாக 206 ஓட்டுகள்:
அரசு பணி பதவி உயர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, நேற்று ராஜ்யசபாவில் நிறைவேறியது.மசோதாவுக்கு, ஆதரவாக, 206 எம்.பி.,க்களும், எதிராக, 10 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர். இந்த அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். சமாஜ்வாதி கட்சியினர் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர்.சபையின் மொத்த உறுப்பினர்களில், மூன்றில், இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை, இந்த 117வது அரசியல் சட்ட திருத்த மசோதா பெற்றுள்ளதால், அது நிறைவேறியதாக, சபைத் தலைவர் அன்சாரி அறிவித்தார்.
"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தேவை':
பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய, முலாயம் சிங் கூறியதாவது:அரசு பணிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வு அளித்தால், அது ஏற்கனவே தகுதியுள்ளவர்களாக இருப்பவர்களை பாதிக்கும். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதை, அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.தவிர, முஸ்லிம்களின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களது நிலைமை குறித்து, சச்சார் கமிஷன் விரிவாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், "தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் காட்டிலும், முஸ்லிம்களின் நிலைமை, மிக மோசமாக உள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக நீதி அடிப்படையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, சச்சார் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை, நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடப் பாவிகளா "கேபிள் டிவி க்கு டிஜிட்டல் உரிமம்" இப்போது மிக அவசியமா???...அந்த கருமத்தப் பாக்க தான் மின்சாரமே இல்லையே..... விவசாயத்துக்குத் தண்ணி இல்ல.....வீட்ல காசே இல்ல....நடக்க நல்ல சாலை இல்ல....ஆறு குளம் எதிலயும் மணலு கூட இல்ல.....இதெல்லாம் பத்தி பேசணும்னு உங்களுக்கெல்லாம் ஏன் தோன்றதே இல்ல... கொடுமை....ஒரு 5 நிமிஷம் உக்காந்து யோசிச்சுப் பாருங்கடா எதாச்சும் பேசுறதுக்கு முன்னாடி.....மாநிலத்தோட ஒட்டுமொத்த மானத்தையும் கப்பலேத்துறது நீங்கதாண்டா....
அரசு வேலை வாய்ப்பே குறைந்து வரும் இந்நாளில் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பயனளிக்காது. அப்படியே பதவி உயர்வு பெறுவோர் தனது சமுதாயத்துக்காக உழைப்பர் என எப்படி நிச்சயனாக சொல்ல முடியும். திறமையின்மையே பெருகும். பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட மாற்று இனத்தவர் ஒத்துழைப்பே கொடுப்பதரிது. வேலை நடக்காது குழப்பம்தான் மிஞ்சும், தன்னை விட ஜூனியர்களின் கீழ் வேலை செய்ய அவர்களது மனம் ஒப்பாது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொடுக்கசொன்னால் அவர்கள் மூடிவிட்டு வெளி நாட்டுக்கே ஓடிவிடுவர். நல்ல தரமான கல்வி கொடுத்தது அறிவுடையவர்களாக்கி அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கவைப்பதே புத்திசாலித்தனம் .நிதர்சனமும் கூட
எல்லா கட்சியினரும் ஒன்றாக கூடி சமாஜ்வாடி கட்சியை தனிமை படுத்தி விட்டனர்,இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்ட திருத்த மசோதாவிற்கு அணைத்து கட்சியினரும் குறிப்பாக முக்கிய எதிர்கட்சியான பாஜகவும் ஆதரவளித்து நிறைவேற்றி விட்டார்கள் ,மகளிர் இட ஒதிக்கீடு மசோதா ,லோக்பால் மசோதா போன்றவற்றை மட்டும் இந்த அணைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களால் நிறைவேற்ற முடியவில்லை ,இரண்டு முக்கிய கட்சிகளும் நிறைவேற்ற விட மாட்டார்கள் .எப்படியோ பதவி இட ஓதுக்கீட்டால் அவர்கள் தரம் உயரும் என காங்கிரஸ் ,பாஜக ,திமுக ,அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளும் நம்புவதால் நாமும் நம்புவோம் ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.