மத்திய அரசால் வழங்கப்படும், "ஆதார்' அட்டையை, அடையாள ஆவணமாக, அரசுத்துறைகள் ஏற்க மறுப்பதால், இந்த அட்டையை பெறுவதற்கு, மக்கள் விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும், பொதுவான, அடையாள ஆவணத்தை உருவாக்கும் வகையில், ஆதார் அட்டை வழங்குவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, தினமும், 2 லட்சம் பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தினமும், 4 லட்சம் பேர் என்ற அளவுக்கு, உயர்த்த வேண்டுமென்று, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மானியத்தை, அந்தந்த பயனாளிகளுக்கு, நேரடியாக வழங்கும் மத்திய அரசு திட்டத்தை செம்மையாக நிறைவேற்ற ஆதார் அட்டை மிகவும் அவசியமென்ற சூழலும், உருவாகி வருகிறது.எதிர்காலத்தில், இந்த அட்டையின் அடிப்படையில், அரசின் பல வாய்ப்புகள் வழங்கப்படும்; என்ற எதிர்பார்ப்பில், பொது மக்கள், இதனை பெறுவதற்கு, மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.ஆனால், இந்த அட்டையை அடையாள ஆவணமாக அரசுத்துறைகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால், இந்த அட்டை வழங்கும் திட்டத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது.இதைப் பெறுவதற்கான ஈடுபாடும், மக்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
உதாரணமாக, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான, ஆதார ஆவணங்களில் ஆதார் அட்டைக்கு
இடமில்லை. ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, நோட்டரி வக்கீல் சான்று,
எல்.பி.ஜி., காஸ் இணைப்பு, போன்றவற்றை ஏற்கும் பாஸ்போர்ட் அலுவலகம், இதனை
மட்டும் ஆவணமாக ஏற்பதில்லை.அதேபோல, தபால் அலுவலகங்களில் தபால்காரரால்
நேரடியாக முகவரி விசாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவரின் போட்டோ ஒட்டப்பட்டு,
கையெழுத்து பெறப்பட்டு, தபால்துறையால் தரப்படும் "அடையாள அட்டை'யும்
ஏற்கப்படுவதில்லை.பாஸ்போர்ட் அலுவலகம் மட்டுமின்றி, ஓட்டுநர்
உரிமம், வாகனப் பதிவுச் சான்று பெறுவதற்காக வட்டார போக்குவரத்து
அலுவலகங்களுக்கு சென்றாலும், அங்கேயும் இதற்கு மதிப்பில்லை. இதை ஏற்கமறுப்பதற்கு, இந்த துறை அதிகாரிகள் சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.பாஸ்போர்ட் மற்றும் மத்திய மோட்டார் வாகனச் சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஆதார ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை, தபால் துறை அடையாள அட்டை ஆகியவற்றையும் சேர்த்தால் மட்டுமே, இதனை, ஏற்க முடியும், என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.
Advertisement
இதில், பெரிய முரண்பாடு என்னவென்றால், இந்த ஆதார் அட்டையை, தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள், ரயில்வே, எல்.பி.ஜி., நிறுவனங்கள் மற்றும் தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஆதார ஆவணமாக ஏற்றுக் கொள்கின்றன;
என்பதுதான்.ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த
வேண்டுமெனில், இதன் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவது அவசியம்.
அதற்கேற்ப, அரசுத்துறைகள், ஏற்கும் வகையில், உரிய சட்டத்திருத்தங்களை
மேற்கொள்ள வேண்டுமென்று, மத்திய அரசுக்கு, கோயம்புத்தூர்<, "கன்ஸ்யூமர்
காஸ்<<<<' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.பிரதமருக்கு, இவ்வமைப்பு செயலர் ,கதிர்மதியோன் எழுதியுள்ள கடிதத்தில், அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் வெற்றி, அதனைஅரசுத்துறைகள் ஏற்பதில்தான் உள்ளது.இதற்கேற்ற வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வந்து, புதிய விதிகளை வகுக்க வேண்டும்; பாஸ்போர்ட், ஆர்.டி.ஓ., ஆபீஸ்களில், இதனை ஏற்கும் வகையில்,உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்; என, கோரியுள்ளார்.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, நாட்டு மக்களுக்கு பொதுவான அடையாள ஆவணத்தைத் தர முடிவு செய்த மத்திய அரசு, இதனையும் ஆதார ஆவணமாகச் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, முன் கூட்டியே எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால், மத்திய அரசு தரும் ஓர் ஆவணத்தையே மத்திய, மாநில அரசுத்துறைகள் ஏற்க மறுக்கும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக குரல் எழுப்ப வேண்டியது அவர்களின் கடமை.-நமது நிருபர்-