கடலூர்:பொதுமக்களின்
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடலூர் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலை ஒரு
கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
கடலூர்
நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாரதி சாலைக்கு
மாற்றாக திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக
செம்மண்டலத்தை இணைக்கும் வகையில் புறவழிச்சாலையை முன்பு கலெக்டராக இருந்த
ககன்தீப் சிங் பேடி அமைத்தார்.இதற்காக கெடிலம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
இதனால் திருவந்திபுரம் மற்றும் வண்டிப்பாளையம் மார்க்கத்திலிருந்து வரும்
வாகனங்கள் புதுச்சேரி மற்றும் பண்ருட்டிக்குச் செல்ல கம்மியம்பேட்டை
புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கெடிலம் ஆற்றில்
ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கில், ஆற்றையொட்டியுள்ள சுப்ராயலு நகர்,
நெடுஞ்சாலை நகர் மற்றும் குப்பன்குளம் பகுதியில் வெள்ளம் சூழ்வதைத் தடுக்க,
கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து
கம்மியம்பேட்டை புறவழிச்சாலை வரை கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தி,
தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. பின்னர், பாரதி சாலையில் பெருகி
வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஜவான்ஸ் பவன் கெடிலம் ஆற்றின்
கரையையே சாலையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2005ம் ஆண்டு
சுனாமி நிதியில் ஜவான்ஸ் பவன் அருகில் இருந்து கம்மியம்பேட்டை புறவழிச்சாலை
பாலம் வரையிலான 1.8 கி.மீ., நீளத்திற்கு கெடிலம் ஆற்றின் கரையையொட்டி 5
கோடி ரூபாய் மதிப்பில் "கான்கிரீட்' தடுப்புச்சுவர் கட்டி, கரையின் மீது
மண் சாலை போடப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக தார் சாலை
அமைக்கப்படவில்லை. இப்பணிக்காக 90 லட்சம் ரூபாய் கேட்டு
நெடுஞ்சாலைத்துறையின் முன்மொழிவு பல ஆண்டுகளாக கிடப்பில்
போடப்பட்டது.
இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணியால் கடந்தாண்டு
நகரின் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக இருந்ததால் போக்குவரத்து
நெரிசல் அதிகரித்தது. இதனால், வாகன ஓட்டிகள் பலர், முழுமை பெறாத ஜவான்ஸ்
பவன் சாலையில் செல்லத் துவங்கினர். இதனால் இச்சாலை குண்டும், குழியுமானதோடு
மழைக் காலங்களில் சேறும், சகதியுமாகி சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு
மாறியது. இதனால், நகரமே போக்குவரத்து நெரிசலில் திணறியது.
அதனையொட்டி
அமைச்சர் சம்பத் மற்றும் அப்போதைய கலெக்டர் அமுதவல்லியும் 80 லட்சம் ரூபாய்
செலவில் புதுப்பிக்கப்படும் என்றனர். தொடர்ந்து 5.5 மீட்டர் அகலத்திற்கு
ஒன்னரை ஜல்லி மற்றும் குவாரி டஸ்ட் நிரப்பப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு
செய்யாத காரணத்தினால் தார் சாலை அமைக்கப்படவில்லை. இச்சாலையில் வாகனங்கள்
செல்லும் போது ஏற்படும் புழுதி பறப்பதால், பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள்
மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், ஜவான்ஸ் பவன்
சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் சாலை மறியல்
உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தின.போராட்டத்தைத் தொடர்ந்து ஜவான்ஸ் பவன்
புறவழிச்சாலையை சீரமைத்து தார்சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
மேற்கொண்டது. அதன் பேரில், ஜவான்ஸ் பவன் சாலையை 7 மீட்டர் அகலப்படுத்தி
தார்சாலை அமைக்க நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 30
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்
துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, கடந்த 16ம் தேதி பூமி பூஜையுடன் சாலை
விரிவாக்கப் பணி துவங்கியுள்ளது.ஏற்கனவே, குவாரி டஸ்ட் கொண்டு அமைக்கப்பட்ட
சாலையை தற்போது மேலும், ஒன்றரை மீட்டருக்கு அகலப்படுத்தி, அதன் மீது 5
செ.மீ., உயரத்திற்கு முக்கால் ஜல்லி கொண்டு தார்சாலையும், அதன் மீது 2.5
செ.மீ., உயரத்திற்கு அரை மற்றும் சிப்ஸ் ஜல்லியால் ஆன தார்சாலை அமைக்கப்பட
உள்ளது. இப்பணியை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இச்சாலையில் போக்குவரத்தை முற்றிலுமாக
நிறுத்த வேண்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு
கடிதம்
வழங்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.