புதுடில்லி:""மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில், வரவு வைக்கும் திட்டத்தை நான் ஏற்க மாட்டேன்; அதை, மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப் போவதில்லை,'' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி கூறினார்.சமையல் காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றிற்கு வழங்கப்படும் மானியம், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான ஊதியம் போன்றவற்றை, பயனாளிகளின் வங்கி கணக்கில், "ஆதார்' அடையாள அட்டை மூலம் வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல், மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
வரும், 2014ல் நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, இந்த திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. "மானியத்தை பணமாக கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்றது' என, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்த, மம்தா பானர்ஜி கூறியதாவது:இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறார்கள்... அதற்கான செயல்திட்டம் என்ன... யார், யாருக்கு அதன் பலன்கள் கிடைக்கும்... என்பன போன்ற கேள்விகளுக்கு, இது வரை பதில் இல்லை.நாட்டில் ஏராளமான கிராமங்களில், வங்கிகளோ, தபால் அலுவலகங்களோ இல்லாத நிலையில், இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என, தெரியவில்லை.
முதலில், வங்கிகள் இல்லாத இடங்களில், வங்கிகளை துவக்கட்டும்; அதற்கு பிறகு, இந்த திட்டத்தை செயல்படுத்தட்டும். எப்படி இருந்தாலும், மேற்கு வங்கத்தில் இதை நான் செயல்படுத்த போவதில்லை.மாதம், 600 ரூபாய் இருந்தால், ஐந்து பேர் கொண்ட குடும்பம், குடும்பம் நடத்தலாம் என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் கூறியுள்ளார்.
ஐந்து பேர் குடும்பம், அந்த தொகையை வைத்து, ஒரு மாதத்திற்கு, டீ கூட குடிக்க முடியாது. ஒரு கோப்பை டீ, 4 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.அரசு வேலைகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க வகை செய்யும், மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்; அதை எதிர்த்து ஓட்டளிக்க மாட்டோம்.
எனினும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் முன்னேற்றத்திற்காக திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.நிலம் கையகப்படுத்தும் மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, கூறப்படுகிறது. அது போன்றதொரு சட்டத்தை, எங்கள் மாநிலத்தில் ஏற்கனவே கொண்டு வந்துள்ளோம். எனினும், வலுக்கட்டாயமாக, விவசாய நிலங்களை பறிக்க மாட்டோம்.என்னால் மாநில அரசை நிர்வகிக்க முடியாத அளவிற்கு, நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. எங்களின் வருவாய், 21 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் போது, ரிசர்வ் வங்கி, எங்களிடம் இருந்து, 26 ஆயிரம் கோடியை, வட்டியாக வாங்கிக் கொள்கிறது. முந்தைய கம்யூனிஸ்ட் அரசு, கஜானாவை மொத்தமாக காலி செய்து விட்டது.இவ்வாறு, மம்தா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.