Delhi rape shakes Parliament, several MPs seek death penalty | டில்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு எம்.பி.,க்கள் வேதனை| Dinamalar

டில்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு எம்.பி.,க்கள் வேதனை

Updated : டிச 19, 2012 | Added : டிச 18, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
டில்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு எம்.பி.,க்கள்  வேதனை

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி கற்பழிப்பு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.
ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.
ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.
ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.
மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.
வசந்தி ஸ்டான்லி ( தி.மு.க.),: இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி கற்பழிப்பு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.


திருமாவளவன் பேச்சு -எம்.பி.,க்கள் எதிர்ப்பு:

லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை. வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai - ,கனடா
19-டிச-201206:17:32 IST Report Abuse
Jai பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டில்லி. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நிலபரப்பு / மக்கள் தொகை விகிதாசாரத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா என பாதுகாப்பான நகரங்களை வரிசை படுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19-டிச-201205:30:00 IST Report Abuse
Samy Chinnathambi இந்த மாதிரி கும்பல்களை ஒடுக்குவதற்கு தையிரியமான காவல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் தேவை படுகிறார்கள். ஆனால் நமக்கு வாய்த்த காவல் துறை அதிகாரிகள் எல்லாம் லஞ்சம் வாங்கி தொப்பையை வளர்க்கும் அதிகாரிகள் தான். ஒன்றிரண்டு அதிகாரிகள் மாத்திரமே மெச்சும் படியாக இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
19-டிச-201203:17:10 IST Report Abuse
Kunjumani ராமர் என்பவர் கற்பனை பாத்திரம் என்ற சோனியா காங்கிரஸ் கட்சியின் திக்கு சிங் போன்ற தலைவர்கள் கற்பு என்ன கண்ணில் தெரியும் பொருளா அதை அழிப்பதற்கு, காவி பயங்கிரவாதிகளுக்கு வேறு வேலை கிடையாது இல்லாத ஒன்றை வைத்து பிழைப்பு நடத்துவதே அவர்கள் வேலையாகிவிட்டது என்பார், கபில் சிபிலோ ஒரு படி மேலே போய் எல்லாம் முறையாக நடந்தது ஜீரோ லாஸ் என்பார்... , ஒரு தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன பாரதி பிறந்த பாரத மண்ணில் கொத்து கொத்தாக விவசாயிகள் தற்கொலை, உலகிலேயே மிகப்பெரும் செல்வந்தர் மேலும் பணம் சேர்க்க நம்நாட்டில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் திறக்க அனுமதி. வால்மார்ட்காரன் சீனாவில் மலிவு விலைக்கு வாங்கி நம் நாட்டில் விற்று கல்லா கட்டுவான்..அவன் போடும் எலும்புத்துண்டை நாம் அரசியல்வியாதிகள் கவ்விக்கொண்டு வாலை ஆட்டுவார்கள். நம் வெளிநாட்டு மோகம் என்று அடங்குமோ....வெளிநாட்டு மோகம் இல்லாவிடில் பெரிய குடும்பத்து மேல் நாட்டு மருமகள் நம் நாட்டை ஆட்டுவிக்க அதிகாரம் கொடுத்திருப்போமா?
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-டிச-201201:01:18 IST Report Abuse
NavaMayam இவர்கள் கசாப்பை விட கொடூரமானவர்கள் ... அவனை விட மிக வேகமாக தூக்கிலிடபட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-டிச-201200:59:47 IST Report Abuse
NavaMayam திருமாவளவன் தருமபுரி தாக்குதல் பற்றி பேசினார் ..".உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது. " பின் சபை மீண்டும் ஆரம்பித்தவுடன் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமை வழங்குவது பற்றி தம்பிதுரை பேசயுள்ளார்... தலித்துகள் பிரச்சனையை விட கேபிள் டி வி பிரச்சனை பெரிதா... அது மாநிலங்கள் பிரச்னை இல்லையா..அகில உலக பிரச்சனையா....
Rate this:
Share this comment
Cancel
Tamil A - chennai,இந்தியா
19-டிச-201200:46:21 IST Report Abuse
Tamil A கொடுரமான கற்பழிப்பு செயல்கள் 22 நிமிடத்திற்கு ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.காட்டில் வாழும் மிருகங்கள் நாட்டில் வாழ்கின்றன .பெற்ற தந்தையும் சகோதரனும் பெண் குழந்தையை சமிபத்தில் சீரழித்த நிகழ்ச்சிக்கு காவல்துறை எங்கிருந்து பாதுகாப்பு கொடுக்க முடியும்.இந்த கொடூர செயல்களை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும்.பிஞ்சு குழந்தைகளை கூட விட்டு வைப்பது இல்லை.இந்த செயல் மாநகரத்தில் நடந்ததால் இது பெரிதாக பேச பட்டுள்ளது .தினம் தினம் ஆதிக்க சக்திகள் பல சிறுமிகளை சூறை ஆடி கொண்டு தான் இருக்கின்றனர் .வாச்சந்தி சம்பவத்திற்கு பத்து வருடங்களுக்கு பிறகு தான் தீர்ப்பே வந்துள்ளது .மக்கள் நடமாட்டம் இருக்கும் போது தான் பெண்கள் வெளியே செல்ல வேண்டும் வரும் முன் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் ,சென்சிடிவான பிரச்சினையிலும் அரசியல் தான் செய்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை