சென்னை : "ஒரு கிராமம் ஒரு உற்பத்தி பொருள்' திட்டத்தில், 17 மாவட்டங்களில், 59 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் உற்பத்தி, சந்தையிடுதல் ஆகியவற்றில், புதிய உத்திகளை கையாள, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு வங்கி கடன்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள், தனியாகவும், குழுவாகவும் இணைந்து, பல்வேறு தொழில்களை துவங்கி, பொருளாதாரத்தில் மேம்பட்டு வருகின்றனர். இவர்களின், தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, ஒரு கிராமம், ஒரு உற்பத்தி பொருள் திட்டத்தை அறிவித்தது. இதில், ஒரு மாவட்டத்தில், ஒரே பொருளை உற்பத்தி செய்யும் பல்வேறு குழுக்களை இணைத்து, ஒரே தொழில் தொகுப்பாக உருவாக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஐந்து ஒரே உற்பத்தி பொருள் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, நெல்லையில், பத்தமடை பாய், டெரகோட்டா, களிமண் பொருட்கள்; திருச்சியில், வாழை உப பொருட்கள், பாக்கு மட்டை தட்டு; தூத்துகுடியில், பனைவெல்லம், தேன். புதுக்கோட்டையில், ரெடிமேட் துணி வகைகள், பூ சாகுபடி; நீலகிரியில், சாக்லெட், தைலம்; நாமக்கலில், குண்டு வெல்லம், கோரை பாய், கோவையில், வாழை சாகுபடி, செயற்கை உபகரணங்கள்.
தர்மபுரியில், புளி பதப்படுத்துதல்; கன்னியாகுமரியில் தேன் வளர்ப்பு, சம்மங்கி பூ சாகுபடி; நாகப்பட்டினத்தில் அரிசி அப்பளம், பனை ஓலை பொருட்கள்; அரியலூரில் முந்தி, மசாலா பவுடர். விருதுநகரில் நெசவு உள்ளிட்ட, 17 மாவட்டங்களில், 59 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே உற்பத்தி பொருள் கொண்ட மாவட்டங்களை கண்டறிந்த உடன், அத்தொழிலை தனித்தனியாக செய்து வரும் குழுக்கள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. பொருட்கள், உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள், மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, விரைவில் பொருட்கள் உற்பத்தி செய்யும் வழிமுறைகள் கற்று தரப்பட உள்ளன. வெளிச்சந்தையில், போட்டி போடுவதற்கு ஏற்ப, பொருட்களின் தரத்தை மேம்படுத்த, பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ப, வழிவகைகள் செய்வதுடன், ஏற்றுமதி வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழுக்கள், தங்களை மேம்படுத்துவதற்காக, தமிழக அரசு, முதல் கட்டமாக, 20 லட்ச ரூபாயை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 31 மாவட்டங்களில், 150 உற்பத்தி பொருட்கள் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, 17 மாவட்டங்களில், ஒரே உற்பத்தி பொருட்கள், கண்டறியப்பட்ட நிலையில், மீதமுள்ள, 14 மாவட்டங்களில் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரே மாவட்டத்தில் செயல்படும், மகளிர் சுய உதவி குழுவினருக்குள், எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லை. இதனால், ஒரே பொருட்கள் உற்பத்தி செய்தாலும், அதுகுறித்து, எந்தவித கருத்துகளையும், பரிமாறிக் கொள்வதில்லை. ஒரு கிராமம், ஒரு உற்பத்தி பொருள் திட்டத்தின் கீழ், ஒரு மாவட்டத்தில், ஒரே பொருளை உற்பத்தி செய்யும் மகளிர் குழுக்களை ஒருங்கிணைக்கிறோம். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி செலவு குறைகிறது. லாபம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.