ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, வெவ்வெறு இடங்களில் நடந்த இரு விபத்துக்களில், அரசு கல்லூரி பேராசிரியர் உட்பட, ஐந்து பேர் பலியாகினர். ராமநாதபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி, 43, இங்குள்ள சேதுபதி அரசு கல்லூரியில் பொருளாதார துறை பேராசிரியராகவும், ராமேஸ்வரத்தில் மாலை நேரக்கல்லூரி இயக்குனராகவும் பணிபுரிந்தார். தந்தை கடம்பன் கடந்த வாரம் இறந்துவிட்டதால், அவருக்கு டிச., 23ல், ஈமக்கிரிகை நடத்துவதற்காக, சொந்த ஊரான சத்திரக்குடி அருகே உள்ள, மென்னந்திக்கு சென்றார். உறவினர்களுடன் பேசிவிட்டு, நேற்று மாலை, 3:30 மணிக்கு, "இண்டிகா' காரில் ராமநாதபுரம் வந்து கொண்டிருந்தார். உடன் ஒன்றரை வயது மகள் கீர்த்தி, சித்தி சவுந்தரவள்ளி, 50, உறவினர் மகேந்திரன், 35, வந்தனர். அச்சுந்தன்வயல் அருகே வந்தபோது, ராமநாதபுரம்- மதுரை சென்ற அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில், சவுந்தரபாண்டி, சவுந்திரவள்ளி பலியாகினர். கீர்த்தி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது. ஆபத்தான நிலையில், மகேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு பஸ் டிரைவர் சுப்பையாவிடம், ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து : ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர், அப்துல் ரஹ்மான், 25; நேரு நகரை சேர்ந்தவர் அப்துல்பாசித், 20. இவர்கள், நேற்று மதியம், 12:30 மணிக்கு, உச்சிப்புளியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி, ஸ்பிலெண்டர் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்து கொண்டிருந்தனர். உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணி அருகே கடலூரிலிருந்து, ராமேஸ்வரம் சென்ற சுமோ கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவரும் பலியாகினர். உச்சிப்புளி போலீசார், கார் டிரைவரை தேடி வருகின்றனர்.