குன்னூர்:குன்னூரில் ஆதார் அட்டைக்கான பதிவு பணிகள் 4 நாட்களாக தாமதமானதால் விரக்தியடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரபேட்டை, ஆரஞ்சு குரோவ் ரோடு, டான்டீ பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வார்டில் ஆதார் அட்டைக்கான உடல் கூறுகள் பதிவு பணிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவங்கியது. துவங்கிய முதல் நாள் மட்டுமே பதிவு பணிகள் நடந்தன.இரண்டாம் நாள் மீண்டும் பதிவு பணிகளை தொடர்ந்த போது, கருவிகளில் குளறுபடிகள் ஏற்பட்டு பதிவு பணிகள் நடக்கவில்லை. நேற்று முன்தினமும் பிரச்னை தொடர்ந்ததால், மக்கள் உடற்கூறுகளை பதிவு செய்ய முடியாமல் திரும்பினர்.இந்நிலையில் நேற்று காலை முதல் வண்ணாரப்பேட்டை சமுதாய கூடத்தில் அப்பகுதி மக்கள் உடற்கூறுகளை பதிவு செய்ய காலை முதல் காத்திருந்தனர். மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்தார். மதியம் ஆதார் பணிகள் துவங்கின.நீண்ட நேரம் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியின் கவுன்சிலர் உஷா சம்பவ இடத்துக்கு வந்தார். அவரிடமும் வாக்கு வாதம் தொடர்ந்தது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் வந்து மக்களை சமாதானப்படுத்தி பணிகளை தொடர்ந்தனர்."ஆதார் அட்டைக்கான பதிவு செய்யும் பணிகள் தடையில்லாமல் நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்,' என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.