குன்றத்தூர் : "தினமலர்' செய்தி எதிரொலியாக. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புக்களை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். சிக்கல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், நீர்பிடிப்பு பகுதிகளின் எல்லை வரையறை செய்யப்படாததால், ஆக்கிரமிப்புக்களை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல் இருந்து வந்தது.இதனால், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளை நில அளவை செய்து தருமாறு, வருவாய் துறையிடம் கோரப்பட்டது. ஆனால், நில அளவையர் பற்றாக்குறையை காரணம் காட்டி, வருவாய் துறை ஏரிகளில் நில அளவை செய்யும் பணியை தாமதப்படுத்தி வந்தது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள், ஏரிகளை ஆக்கிரமித்து கல்லா கட்டும் பணியில் ஈடுபட்டனர்."தினமலர்' செய்திஇதுகுறித்து "தினமலர்' நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள, சில ஏரிகளின் ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலான அனைத்து ஏரிகளிலும், நில அளவை செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம், ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட ஏரிகளில், சமீபத்தில் ஆக்கிரமிப்புக்கள் கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தன.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரிகளின் எல்லையை நில அளவை செய்து, கல் நடும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இந்த பணி, 80 சதவீதம் முடிந்துவிட்டது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் பெயர், குடும்ப உறுப்பினர்கள், எத்தனை ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், வீடு எந்த வகையிலானது என்ற விவரங்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படுகின்றன. இப்பணி முடிந்ததும், அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் கணக்கு துல்லியமாக தெரிவிக்கப்படும். அதன் பிறகு ஆக்கிரமிப்புக்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.கலக்கம்ஏரி ஆக்கிரமிப்புக்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருவதால், ஆக்கிரமிப்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். அரசியல்வாதிகளிடம் அவர்கள் பணம் கொடுத்து, ஏரி இடத்தை வாங்கியிருப்பதால், அவர்களை நச்சரித்து வருகின்றனர். "எந்த பிரச்னையும் இருக்காது' என்று அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றனர். அரசு ஆக்கிரமிப்புக்கள் மீது கை வைத்தால், ஏரியை கூறு போட்டு விற்றவர்கள் மீது, போலீசில் புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.