சென்னை: "மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், இம்மாதம், 31ம் தேதிக்குள் இயங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, ஏ.நாராயணன் என்பவர், தாக்கல் செய்த மனு: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அமைக்கும் நடவடிக்கையில் உள்ளதாக, அரசு கூறினாலும், இரண்டு ஆண்டுகளாக, அமைக்கப்படவில்லை.
இந்த கமிஷன் இல்லாமல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை, தீர்க்க முடியாது. அனைத்து மாவட்டங்களிலும், சிறுவர்களுக்கான சிறப்பு போலீஸ் பிரிவு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஏற்படுத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆதரவு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின், நிர்வாக அறங்காவலர், பெர்னாண்டஸ் என்பவரும், மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சமூக நலத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: குழந்தைகள், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை கையாள, அனைத்து போலீஸ் நிலையங்களிலும், குழந்தைகள் நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், சிறுவர்களுக்கான சிறப்பு போலீஸ் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், கடந்த, மார்ச் மாதம், ஏற்படுத்தப்பட்டது. கமிஷன் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிகளில் நியமிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 557 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்களை பரிசீலித்து, நியமிக்க, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும். கமிஷனுக்கான தொடர் செலவுக்கு, இந்த நிதியாண்டில், 37.32 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, விரைவில் கமிஷன் இயங்குவதற்கு, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
கடந்த, அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, சமூக நலத் துறை, இந்த பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், இம்மாதம், 31ம் தேதியன்று, இயங்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்கள் தெரிவித்துள்ள, மற்ற பிரச்னைகளை, அடுத்த விசாரணையின் போது, ஆராயலாம். விசாரணை, ஜனவரி, இரண்டாம் வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.