திருத்துறைப்பூண்டி: டெல்டா பாசன மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அறவே இல்லாமல், வாய்க்கால்களும் வறண்டு காட்சியளிக்கும் நிலையில், பாளம், பாளமாக வெடித்த வயல்களில், சம்பா பயிர் முழுவதும் காய்ந்து கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் நடப்பாண்டு காவிரி கைவிட்டதாலும், மழை பொய்த்ததாலும், குறுவை சாகுபடி அறவே பாதித்து, விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் தாமதமாக செப்., 17ம் தேதி திறக்கப்பட்டும், சம்பா சாகுபடிக்கு போதிய நீர் இதுவரை வந்து சேரவில்லை. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, கண்காணிப்புக்குழு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை கர்நாடகா மாநில அரசும் சற்றும் மதிக்காமல், தொடர்ந்து தமிழகத்தின் பங்களிப்பு காவிரி நீரை தராமல் வஞ்சித்து வருகிறது.
இதையடுத்து டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. தஞ்சை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆறுகளில் தண்ணீரின்றி, வாய்க்கால்கள் வறண்டு விட்டன. வயல்களும் சம்பா பயிரிட்ட நிலையில், பாளம், பாளமாக வெடித்து விட்டன. ஆற்றில் வரும் சிறிதளவு தண்ணீரும் வாய்க்கால்களுக்கு சென்றடையவில்லை.
வயல்கள் பாளம், பாளமாக வெடித்த நிலையில், பயிர்கள் தற்போது "சூல்' கட்ட வேண்டிய பருவத்தில், கருகருவென வளர்ந்த பயிர்களும் முழுவதும் காய்ந்து, கருக துவங்கி விட்டன. அவ்வப்போது வானத்தில் மேகமூட்டம் திரண்டு மப்பும், மந்தாரமுமாக தெரிந்தாலும், மழை பெய்யாமல் போக்கு காட்டி வருகிறது. தினமும் விவசாயிகள் வயலுக்கு சென்று வானத்தையும், கருகிய சம்பா பயிர்களை பார்த்து ஏங்கி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் வேறு வழியின்றி கால்நடைகளை, தீவனமாக வயலில் கருகிய சம்பாவில் மேயவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் விவசாயி கரிகாலன் கூறியதாவது:
டெல்டா பாசன மாவட்டத்தில், 13 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து விட்டன. இப்பகுதியில், சம்பா பயிர் சாகுபடிக்காக டிசம்பர், முதல்வாரத்தில் தண்ணீர் விட்டு, ஓரளவு பயிர்களை காப்பாற்றியிருந்தால் நல்ல மகசூல் கிடைத்திருக்கும். ஆனால், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தண்ணீரின்றி, நெற்பயிர்கள் காய துவங்கி விட்டன. கடந்த செப்., மாதம் முதல்வாரத்தில் நேரடி விதைப்பு செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தையும், இனிமேல் மழை பெய்தாலும், காவிரி நீர் வந்தாலும் காப்பாற்ற வாய்ப்பும் வழியுமில்லை.
எனவே மனமுடைந்து, துவண்டு போயுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் குடும்பங்களை தற்கொலை சாவிலிருந்து காக்க, அரசு காலம் தாழ்த்தாமல் பாசன மாவட்ட பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.