திருச்சி: ""தி.மு.க., ஆட்சி போனதற்கு காரணமே போலீஸ்தான். அதேவேலையைதான் அ.தி.மு.க., ஆட்சியிலும் போலீஸார் செய்து கொண்டிருக்கின்றனர்,'' என்று முன்னாள் அமைச்சர் நேரு பேசினார்.
தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து, திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே, தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகரச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேரு பேசியதாவது:
கடந்த, 89ம் ஆண்டு தமிழகத்தின் மின்தேவை, 3,300 மெகாவாட். தற்போதைய தேவை, 14 ஆயிரம் மெகாவாட். அ.தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்திக்கான எந்த புதிய திட்டங்களும் துவங்கவில்லை. தற்போது, சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரித்து, முதலிடம் பெறப்போவதாக, ஜெயலலிதா கூறுகிறார்.
மின்வெட்டு காரணமாக, தொழிற்சாலைகளில் வேலை நடக்கவில்லை. விவசாயம் நடக்கவில்லை. 16 ரூபாய்க்கு விற்ற அரிசி, இன்று, 40 ரூபாயாக உயர்ந்து விட்டது. திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை, எந்த அடிப்படை தேவைகளும் பூர்த்திச் செய்யப்படவில்லை.
எந்த துறையும் வளர்ச்சியடையவில்லை. மாறாக, ஐந்து வகையான, பெயர் தெரியாத காய்ச்சல்தான் வளர்ந்திருக்கிறது. எந்த வழக்கை போட்டு, எப்படி தி.மு.க.,வை அழிக்கலாம்? என முதல்வர் ஜெயலலிதா கனவு காண்கிறார். போலீஸ் பேச்சை கேட்டு பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
தி.மு.க.,வினர் பூட்டை உடைத்து திருடியதாக மட்டும்தான் வழக்கு போடவில்லை. மற்ற எல்லா வகையான வழக்குகளையும் போட்டுவிட்டனர். தி.மு.க., ஆட்சி போனதற்கு காரணமே போலீஸ்தான். அதேவேலையைதான் அ.தி.மு.க., ஆட்சியிலும் போலீஸார் செய்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசே தடையில்லா மின்சாரம் கொடு உள்ளிட்ட கோஷங்களை தி.மு.க.,வினர் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, பரணிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவெறும்பூர்: திருவெறும்பூர் யூனியன், துவாக்குடி நகர தி.மு.க., சார்பில், திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முன், மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் தலைமை வகித்தார். துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தவிர, மாவட்டத்தில், துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் உட்பட, 16 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.