புதுடில்லி:"" அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில், முஸ்லிம்களுக்கும் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சி தலைவலர் முலாயம் சிங் யாதவ், லோக்சபாவில் நேற்று வலியுறுத்தினார்.அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும், சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, சமாஜ்வாதி கட்சி, எம்.பி., முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகத்தினரை விட, சிறுபான்மை மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதற்கு தகுந்தாற்போல், சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.முஸ்லிம்களின் வறுமை நிலை குறித்து, ராஜிந்தர் சிங் சச்சா மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழுக்கள், பல்வேறு பரிந்துரைகளை, அரசுக்கு அளித்தன. இந்த பரிந்துரைகளை அமல்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முலாயம் சிங் யாதவ் பேசினார்.
இதற்கு பதில் அளித்து, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கமல் நாத் பேசியதாவது:ராஜிந்தர் சிங் சச்சா, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் அளித்த, பல்வேறு பரிந்துரைகள் ஏற்கனவே, நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பரிந்துரைகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாகவும், அரசு, தீவிரமாக பரிசீலிக்கும்.
இவ்வாறு கமல் நாத் கூறினார்.
பா.ஜ.,வில் வேறுபாடு:இதற்கிடையே, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கீடு அளித்து, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான்.கட்சியின் மூத்த தலைவர்கள், இதுகுறித்து, விரிவான விவாதம் நடத்தினர். "இந்த மசோதாவில், பல்வேறு திருத்தங்கள் செய்ய வேண்டும்' என, அரசிடம், பா.ஜ., வலியுறுத்தியது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பே, மசோதாவுக்கு, பா.ஜ., ஆதரவு தெரிவித்தது.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்..