புதுடில்லி:"செய்தி சேனல்களில், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதும், பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடுவதும் கவலையளிப்பதாக உள்ளது; இந்த விஷயத்தில், ஊடகங்களை முறைப்படுத்த வேண்டும்' என, பல்வேறு கட்சிகளின் எம்.பி., க்கள், லோக்சபாவில் கோரிக்கை விடுத்தனர்.நிலக்கரி ஊழல் விவகாரம் எழுந்தபோது, இதில் சிக்கிய நிறுவனங்கள் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க, 100 கோடி ரூபாய் கேட்டதாக, ஒரு செய்தி சேனல் மீது, புகார் எழுந்தது.
ஜாமின்:இது தொடர்பாக, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.பி., அளித்த புகாரில், செய்தி சேனல் ஒன்றின், இரண்டு செய்தி ஆசிரியர்கள், கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு, 20 நாட்களுக்குப் பின், ஜாமின் கிடைத்துள்ளது.அதே நேரத்தில், குஜராத் தேர்தலில், பணம் கொடுத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு கூறியிருந்தார்; இது நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி சேனல்கள், "ஸ்டிங் ஆபரேஷன்' என்ற பெயரில், அரசியல்வாதிகள், அமைச்சர்களின் நடவடிக்கைகளை, ரகசியமாக கண்காணித்து, செய்திகளை ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
பார்லியில்...ரகசியமாக படமாக்கிய செய்திகளை, ஒளிபரப்பாமல் இருப்பதற்கு, பணம் கேட்டு மிரட்டுவதாக, அரசியல்வாதிகள் மத்தியில் பேச்சு இருந்து வந்தது.இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது. லோக்சபாவில்,நேற்று கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் லால்சிங், இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும், "ஸ்டிங் ஆபரேஷன்' என்ற பெயரில், தற்போது நடந்து வரும் மிரட்டல்கள் குறித்து, தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லால்சிங் பேசும்போது, ""ஸ்டிங் ஆபரேஷனில், எங்களது உறுப்பினர்கள் சிலரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் பணம் தருவதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் உறுப்பினர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்க்கை பாழாகியுள்ளது. இருப்பினும், ஸ்டிங் ஆபரேஷன் முடிந்ததும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், சம்மந்தப்பட்ட சேனலின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என கூறினார்.
லோக்பால்:ஐக்கிய ஜனதா தள தலைவர், சரத் யாதவ் பேசுகையில், ""லோக்பால் வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை போல், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் பொறுப்புகளை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்,'' என்றார்.
மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர், மணீஷ் திவாரி பதிலளிக்கையில் கூறியதாவது:இது தொடர்பாக, விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். ஊடகங்கள், சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதே சிறப்பானது. இன்று நடக்கும், பல்வேறு துறை அமைச்சர்கள் கூட்டத்தில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படும்.நடவடிக்கை உண்டு:"ஸ்டிங் ஆபரேஷன்' விவகாரம் தொடர்பாக, கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இது முடிந்ததும், அரசு நடவடிக்கை எடுக்கும். இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதை, ஏற்க முடியாது.பணம் கொடுத்து செய்தி வெளியிடப்பட்டது குறித்து, பிரஸ் கவுன்சிலும், தேர்தல் ஆணையமும் ஆய்வு செய்து வருகின்றன.இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.