குஜராத்தில் 4வது முறையாக முதல்வராகிறார்மோடி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி இலவச வாக்குறுதி இல்லாமல் சாதித்தார்
குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது; நான்காவது முறையாக முதல்வராகிறார், நரேந்திர மோடி. "இலவசமாக, அந்தப் பொருள் தருகிறோம்; இந்தப் பொருள் தருகிறோம்' என்ற, வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், தன், 10 ஆண்டு கால ஆட்சியில், பா.ஜ., அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளையே மையமாக வைத்து பிரசாரம் செய்து, வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு, இம்மாதம், 13 மற்றும் 17ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, ஆளும் பா.ஜ., கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
அறுதி பெரும்பான்மை:அதேநேரத்தில், மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பா.ஜ., கட்சியிலிருந்து வெளியேறிய, அம்மாநிலத்தின் முதல்வராக, 2001 வரை முதல்வராக இருந்த, கேசுபாய் படேல், "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என்ற பெயரில், புதிதாக கட்சி துவக்கி, இந்த தேர்தலில் களமிறங்கினார். ஆனாலும், எடுபடவில்லை.இந்தத் தேர்தலில், பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள, 182 தொகுதிகளில், பா.ஜ., 115 இடங்களைப் பிடித்து, அறுதி பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 61 இடங்களைப் பிடித்தன. குஜராத் பரிவர்த்தன் கட்சி, 3, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், 2, ஐக்கிய ஜனதா தளம், 1
இடத்தையும் பிடித்துள்ளன.
காங்., தலைவர் தோல்வி:மணிநகர்
தொகுதியில் போட்டியிட்ட, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனக்கு எதிராக,
காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட,
ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவி, சுவேதா பட்டை விட, 86 ஆயிரத்து, 373
ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.சுவேதா, 34 ஆயிரத்து, 97
ஓட்டுகள் பெற்றார். 2007ல் இந்தத் தொகுதியில் நடந்த தேர்தலில், மோடி, 87
ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றிருந்தார்.குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்
அர்ஜுன் மோத்வாடியா, போர்பந்தர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வி
அடைந்தார். அதேபோல், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான, ஷக்திசின் கோகிலும்,
பா.ஜ., அமைச்சரால், தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி வெற்றி
பெற்றால், இந்த இருவரில் ஒருவர்முதல்வராகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.
குஜராத் அரசியலில் மோடி களமிறங்குவதற்கு முன், மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், ஐந்து முறை லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்த, மோடியின் தீவிர எதிர்ப்பாளரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, சங்கர்சிங் வகேலா, கபாத்வாஞ்ச் தொகுதியில், குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதேநேரத்தில், முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், போலி என்கவுன்டர் எனக் கருதப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை சென்றவருமான, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர், அமீத் ஷா, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.குஜராத்தில், 2007ல் நடந்த சட்டசபை
Advertisement
தேர்தலில், பா.ஜ., கட்சி, 117 இடங்களைப் பிடித்தது. தற்போது, அதை விட இரண்டு இடங்கள் குறைவாக பெற்றுள்ளது.
"ஹாட்ரிக்' சாதனை :சட்டசபை
தேர்தலில், பா.ஜ., கட்சி வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தன் தலைமையில்
மூன்றாவது முறையாக தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்று, "ஹாட்ரிக்' சாதனை
படைத்துள்ளார் நரேந்திர மோடி. அதேநேரத்தில், நான்காவது முறையாக, முதல்வர்
பொறுப்பை ஏற்கவுள்ளார்.
"வரும், 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில்,
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, மோடி முன்னிறுத்தப்பட வேண்டும்' என,
ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்திருந்த நிலையில், குஜராத் தேர்தலில், அவர்
பெற்றுள்ள வெற்றி, அந்த கோரிக்கைகளுக்குமேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இலவசம் இல்லை:ஆட்சிக்கு வந்தால், "மிக்சி, மின் விசிறி, கிரைண்டர், இலவச வண்ணத் தொலைக்காட்சி, லேப்-டாப் தருகிறோம்' போன்ற வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள கட்சிகளைப் போல அல்லாமல், குஜராத் மாநிலம் எந்த அளவுக்கு முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளது என்பதை சுட்டிக் காட்டியே, வெற்றிக் கொடி நாட்டியுள்ளார் மோடி.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:நான் ஏதாவது தவறு செய்திருந்தாலோ, என் தற்போதைய ஆட்சிக் காலத்தில், ஏதாவது குறை பாடுகள் இருந்தாலோ, அதற்காக, மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். வரும், 27ம் தேதி டில்லி செல்கிறேன். என்னுடைய நல்லாட்சிக்கும், வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றி இது.இவ்வாறு முதல்வர் மோடி கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -