காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், தனி மின் பாதை மற்றும் ஏழு துணை மின் நிலையங்களை அமைக்கும் பணியை மின்வாரியம் துவங்கியுள்ளது.
தமிழகத்தில், உடுமலைப் பேட்டை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில், அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மூலம், 7,134 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின் உற்பத்தியில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு அதிகம்.
ஆண்டுதோறும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சமாக இருக்கும். இந்த காலங்களில், நாளொன்றுக்கு, 3,000 முதல், 3,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தியாகிறது.
மற்ற மாதங்களில், 1,000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே, மின்சாரம் உற்பத்தியாகும். காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின், துணை மின் நிலையங்களுக்கு காற்றாலை மின்சாரம் கொண்டுவரப்பட்டு, பயன்பாட்டுக்கு வருகிறது.
இருப்பினும், மின் தொடரமைப்புக் கட்டமைப்புகள் கிடைப்பதில் உள்ள சிரமத்தால், காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை
உள்ளது.காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில், 1,500 முதல், 2,000
மில்லியன் யூனிட் வரை,"கிரிட்' பிரச்னையால் வீணாகிறது என்று இந்திய
காற்றாலை உற்பத்தியாளர் சங்கம் கூறுகின்றது.
காற்றாலைகள் உற்பத்தி
செய்யும் மின்சாரத்தை, பயன்பாட்டுக்குக் கொண்டு வர, தப்பகுண்டு, ஆனைக்கடவு
மற்றும் ராசிபாளையம் ஆகிய மூன்று இடங்களில், 400 கிலோவோல்ட்( ஒரு
கிலோவோல்ட் என்பது ஆயிரம் வோல்ட் மின்திறன்) துணை மின் நிலையங்கள் அமைக்க
திட்டமிடப்பட்டது.
மேலும், காற்றாலை உற்பத்தி நிலையத்தையும், துணை மின் நிலையங்களையும் இணைக்க, 400 கி.வோ மின் பாதை மற்றும், 336கி.மீ சுற்றுப்பாதை ஆகியவையும் ஏற்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இத்துணை மின் நிலையங்கள், இந்திய மின் கட்டமைப்பு நிறுவனத்தால், சேலத்தில் அமைக்கப்படவுள்ள, 756 கி.வோ துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும் என்றும், அரசு அறிவிப்பில் கூறப்பட்டது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புகள், கடந்த இரு ஆண்டுகளாக, செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை தொடர்வதாக, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதுகுறித்து, மின்
வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: தனியார் காற்றாலை
நிறுவனங்கள், ஆண்டிற்கு, 1,000 மெகாவாட் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளில்,
5,000 மெகாவாட் அளவிற்கு, காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
இதற்காக, மத்திய அரசின் புதிய மற்றும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம், நிதியுதவி பெற, இரு
கட்டங்களாக அரசு அனுமதி கோரினோம்.முதல் கட்டமாக, 2 ,752 கோடி ரூபாய்க்கு, மின் தொடரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற, மத்திய மின் ஆணையம் அனுமதித்துள்ளது. இரண்டாம்கட்டமாக, 2,752 கோடி ரூபாய் நிதி பெற, திட்ட விவர அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது.
மத்திய மின் ஆணையம், விரைவில் இதற்கு அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம். காற்றாலை மின்சாரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர, பட்ஜெட்டில் அறிவித்த, 400 கி.வோ .சக்தி கொண்ட மூன்று புதிய துணை மின் நிலை யங்களுடன், கூடுதலாக நான்கு நிலையங்களை சேர்த்து, ஏழு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வுள்ளன.
மின் தொடரமைப்பு பணிகளை அமைக்க, "கல்பதாரு, சீமன்ஸ்' ஆகிய இரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதன்பின், காற்றாலை மின்சாரத்தை எளிதில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-