திருவண்ணாமலை: ""முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திராணி இருந்தால், என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில் மாவட்ட, தி.மு.க., சார்பில் திருவண்ணாமலை லோக்சபா தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., வினர் மீது பொய் வழக்கு போட்டு பயமுறுத்தினர், அதற்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி அஞ்சாது. தேர்தலில் அதிக வெற்றி பெற்றவனும், தி.மு.க.,காரன் தான், தோற்றவனும், தி.மு.க., காரன்தான்.மின்வெட்டு பிரச்னை, 2012க்குள் தீரும் என, கூறினார், அதுவும் நடக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் இருந்த, இரண்டு மணி நேர மின் வெட்டு, தற்போது, 18 மணி நேரத்துக்கு மேலும் நீடிக்கிறது.
மேட்டூர், வல்லூர், வடசென்னை, தூத்துக்குடி, ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டவை. ஆனால், ஜெயலலிதா, தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்திக்கான எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என, கூறி வருகிறார்.நான் கூறுவது பொய்யாக இருந்தால், உங்களுக்கு திராணி இருந்தால், என் மீது வழக்கு போடுங்கள் பார்ப்போம். தமிழகத்தில் உள்ள மின் நிலைமை குறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தமிழகத்தில் மின்பிரச்னையை நீதிமன்றமே கண்காணிக்கும் என, கூறியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மாஜியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்:முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, கடந்த சட்டசபை தேர்தலில், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பிச்சாண்டியின் சகோதரர் கருணாநிதியை வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க காய் நகர்த்தி வருகிறார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் பிச்சாண்டி பேசும் போது, ""நாம் கடந்த சட்டசபை தேர்தலில் உட்கட்சி பூசலால் தோல்வியை தழுவ நேரிட்டது. அதனால் நாம் எவ்வளவு இன்னல்களை அனுவிக்கிறோம். நாம் ஆட்சிக்கு வரவேண்டியவர்கள், ஆட்சியை இழந்து அல்லபடுகிறோம். வரும் லோக்சபா தேர்தலில் இது போன்று செயல்படாமல் வெற்றி பெற வேண்டும்,''என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், ""பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைப்பவனே தி.மு.க., காரன்,'' என, கூறினார். இது பிச்சாண்டியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.