தி.மு.க.,வில் உள்ள வாரிசு தலைவர்களின் பிறந்ததின விழாக்கள், புத்தாண்டில் வரிசையாக வருவதால், அவர்களின் ஆதரவாளர்கள், கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். மணிவிழா காணும் ஸ்டாலினுக்கு, "மணிமகுடம்' சூட்டப்படுமா? என்றும், மாநில துணைப் பொதுச்செயலர் பதவி, கனிமொழிக்கு கிடைக்குமா என்ற கேள்விகள், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனுக்கு 91வது வயது பிறந்தது; அவருக்கு பிறந்த நாள் கொண்டாட விருப்பமில்லை. இருப்பினும், தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால், அவர் பிறந்த தின விழாவை கொண்டாடினார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு, தி.மு.க.,வில் உள்ள வாரிசு தலைவர்களின் பிறந்த நாள் வரிசையாக வரவுள்ளது. இந்த பிறந்த நாள் விழாக்களை, பிரமாண்டப்படுத்துவதன் மூலம், கட்சி தலைமைக்கு தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டுமென வாரிசுகளின் ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம், 5ம் தேதி, ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின், 45வது பிறந்த நாள். அவரது பிறந்த தினத்தை, "ஆதரவற்றோரின் அன்பு நாளாக' ஒரு வாரம் தொடர் நிகழ்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள் மாவட்ட வாரியாக, கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. வன்னியர்கள், நாடார்கள் அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு கனிமொழி தரப்பிடம் அனுமதி கேட்டுள்ளனர்.தற்போது துணைப் பொதுச்செயலர் பதவி வகிக்கும் சற்குணபாண்டியன் தனது பதவியை, ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளார் என்றும், அந்த பதவியை, பிறந்த நாள் பரிசாக, கனிமொழிக்கு வழங்க வேண்டும் என, மகளிர் அணியை சேர்ந்த சிலர், கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜனவரி மாதம், 30ம் தேதி, மத்திய அமைச்சர் அழகிரியின், 62வது பிறந்த தினவிழா, மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில், கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி, மன்னன், உதயகுமார், மிசா பாண்டியன், சிவகுமார் ஆகியோர் கொண்ட, ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஐவர் குழுவினருக்கு, கீழே தலா 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த, 62 ஆயிரம் பேருக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.பிறந்த நாள் விழாவின் முக்கிய திருப்பமாக, பொருளாளர் ஸ்டாலினை அழைக்க வேண்டும் என, அழகிரி ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மதுரை விழாவை சிறப்பிக்கும் வகையில், கருணாநிதியே அதில் பங்கேற்பார்; அதுவே அழகிரிக்கு அவர் தரும் பிறந்தநாள் பரிசு என்கிறது தி.மு.க., வட்டாரம்.
மார்ச் மாதம், 1ம் தேதி பொருளாளர் ஸ்டாலினுக்கு, 60 வயது பிறக்கிறது."மணி விழா' காணும் ஸ்டாலினுக்கு, தி.மு.க., தலைவர் பதவி என்ற, "மணி மகுடம்' சூட்ட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.கட்சியில், அவைத்தலைவர் பதவியை உருவாக்கி, அப்பதவியை தனக்கு எடுத்துக் கொண்டு, ஸ்டாலினுக்கு கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.மணிவிழாவை, தனது வீட்டில், தனது குடும்பத்தினருடன் கொண்டாடி விட்டு, அறிவாலயத்தின் உள்ளே இருக்கும் கலைஞர் அரங்கத்தில், தலைவர் பாணியில் தொண்டர்களை சந்தித்து, ஸ்டாலின் வாழ்த்து பெற வேண்டுமென, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.மொத்தத்தில் அடுத்தடுத்த பிறந்த நாள் விழாக்களால், தி.மு.க., வட்டாரத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்றாலும், வாரிசுகள் எதிர்பார்க்கும் பிறந்த நாள் பரிசு, தலைவரிடம் இருந்து கிடைக்குமா என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிறந்த நாள் வருவதை முன்னிட்டு கழக தொண்டர்களின் பரிசு மழையில் கட்சி நிதியும் அந்தந்த தலைவர்களின் சொத்து மதிப்பும் அமோகமாக கூடும்... வசூல்வேட்டை தீவிரமாகி பாமர கட்சி தொண்டன் பரிதாபத்தில் விழி பிதுங்கி நிற்பான்... இந்த லட்சணத்தில் தலைவரிடமிருந்து பிறந்த நாள் பரிசை எதிர்பார்க்கலாமா? 65 வயது முதியவரே இளைஞரணி தலைவர் பதவியை ஒரு இளைஞரிடமோ அல்லது குடும்ப அரசியல் என்கிற ரீதியில் அவருடைய மகனுக்கோ பேரனுக்கோ கொடுத்திட மனமில்லாத ஒரு இளைஞரணி தலைவர், தி.மு.க வின் தலைவர் பதவியை மட்டும் திரு.மு.க.விடமிருந்து எப்படி எதிர்பார்க்கலாம்? தொண்டர்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எது எப்படியோ தலைவரும் நாசூக்காக இதோ அறிவிக்கிறேன் அதோ அறிவிக்கிறேன் என்று சொல்லி சொல்லி அவரது பிறந்த மாதமான ஜூன் வரை இழுத்தடிப்பார்... அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே...இன்னும் அரை ஆண்டுகள் பொறுக்கவும்.. உங்களின் நியாமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்... கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள்..
ஆளும் கட்சியாக இல்லாததால் ஆட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன். இதே ஆளும் கட்சியாக இருந்தால் , தமிழகம் முழுவதும் மற்றவர் சொத்தை ஏமாற்றி பிடுங்கிக்கொண்டு கோடீஸ்வரர் ஆன குண்டர்களும், அரசு பணத்தை கொள்ளையடித்து கொழுத்ததுகளுமாக மிகப்பெரிய கொள்ளைகூட்டமே இந்த வாரிசுகளுக்கு துதிபாடி பிழைக்க ஓடோடிவந்து இருப்பார்கள். 10,000 கோடி அளவுக்கு இவர்கள் சுருட்டியதைஎல்லாம் பிடுங்கி , பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுத்ததால் , கொஞ்சம் வேகம் குறைவாகத்தான் இருக்கும்.
ஆசைப்படுவது அவரவர் உரிமை உயர்மட்டக்குழு கூடி கலந்துபேசி முடிவெடுக்கும் என்பதுதானே தாத்தாவின் (தந்திரம்) தாரகமந்திரம். 2013ல் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி நிரல் இப்போதே பத்திரிகைகளில் வந்துவிட்டது எப்படி?? , இவையொன்றும் தாத்தா அட்டமத்தாருக்கு தெரியாததுபோலவும் தாத்தா சிக்கலில் இருப்பதுபோலவும் லூசு தொண்டனுக்கு காட்டப்படும் வித்தைதான் எல்லாம். அன்பழகனுக்கு வயது 91. இன்னும் எத்தனைகாலம் அவர் "பொறுப்பான" இரண்டாமிடத்தில் பொதுச்செயலாளராக இருக்கப்போகிறார் இந்த பொர்முலா லூசு தொண்டன் சிந்திப்பதற்கு இடமில்லை. எதை எதை எந்த வாரிசுகளுக்கு கொடுக்கவேண்டுமோ அவைகளின் எதிரொலிதான் இந்த செய்தியின் பின்னணி. இப்போ குடும்ப பிணைப்பு இல்லாத எவனாவது இந்த இடங்களுக்கு துண்டு போட முடியுமா? அதுதான் தாத்தா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.