இதுவரை காணாத அளவுக்கு, தமிழகம் மின் பற்றாக்குறையினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னைப் பெருநகர் நீங்கலான பிற பகுதிகளில், 16 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் விவசாயமும், சிறு தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
பல ஆண்டுகளாக, தமிழகம், மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி மூலம், மின் உற்பத்தி செ#யும் நுட்பம் பெரிய அளவில் துவக்கப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளித்து, தமிழகம், இந்தியாவின் முன்னோடியாகத் திகழ்ந்தது. 20 ஆண்டுகளுக்கு, தமிழகம், உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வந்தது. இச்சிறப்பு இப்பொழுது ஒரு கனவு போல தோன்றுகிறது.நாம் இன்று அனுபவிக்கும், கடுமையான மின் பற்றாக்குறை, கடந்த, 20 ஆண்டுகளாக, மாநில அரசு, மின்சார உற்பத்தியில் சரியான கவனம் செலுத்தாததின் விளைவே. நம் தேவை, 12,000 மெகா வாட்; கிடைக்கும் மின்சாரமோ, 8,000 மெகா வாட்டுக்கும் குறைவு.
தொடர்ந்து மூன்று, ஐந்தாண்டு திட்ட காலத்தில், மின் உற்பத்திக்கு மிகக் குறைவான முதலீடே செய்யப்பட்டு வந்துள்ளது. அதாவது, 1992 முதல் 2007 வரை ஆண்டுக்கு, 100 மெகா வாட் கூட, தமிழக அரசு, மின் உற்பத்திக்காக முதலீடு செய்யவில்லை.2006-07ம் ஆண்டில், கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அப்போதைய தி.மு.க., அரசு, உடன்குடி போன்ற பல புதுத் திட்டங்களை அறிவித்தது. அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் உயர் அதிகாரிகள், ஐந்து ஆண்டுகளுக்குள், தமிழகத்தின் மின் உற்பத்தி பெருமளவு அதிகரிக்கும் என்றும், உபரி மின் சக்தியை பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கூட அறிவித்தனர். ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் தமிழகம், வெறும், 92.2 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தித் திறனை அதிகரித்து உள்ளது.இதுகுறித்து, "பெல்' நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய, மின் துறை நிபுணர் கே.ராமகிருஷ்ணன் வருத்தத்துடன் கூறியதாவது:இதே காலகட்டத்தில் மேற்கு வங்கம், 5,220 மெகா வாட், குஜராத், 4,500 மெகா வாட், சத்தீஸ்கர், 4,510 மெகா வாட் மற்றும் மகாராஷ்டிரா, 3,930 மெகா வாட் என்ற அளவில் உற்பத்தித் திறனை அதிகரித்து உள்ளன. கடந்த, 20 ஆண்டுகளில், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கணிசமான அளவில் மின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளன.இவ்வாறு, அவர் கூறுகிறார்.
தாங்க முடியாத நஷ்டம்:
அரசியல் காரணங்களுக்காகவும், குறுகிய மாநில கண்ணோட்டத்துடனும், தமிழக அரசு, மின் துறையைப் புதுப்பிக்கத் தவறி விட்டது.இலவச மின் வசதி பெருமளவில் அளித்து வந்ததால், தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டப்பட்டு வந்தது. இன்று அதன் மொத்த நஷ்டம், 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த ஒரே காரணத்தினால், மின்சார வாரியம் புதிய மின் நிலையங்களை அமைப்பதிலோ, இயங்கும் மின் நிலையங்களை சீரமைப்பதிலோ கவனம் செலுத்த முடியவில்லை. பல ஆண்டுகளாக தமிழக மின்சார வாரியம் புதிய மின் திறனை குறுகிய காலத்தில் நிறுவுவதற்குப் பெயர் பெற்று வந்தது. ஆனால், சமீப காலத்தில், இத்துறை இச்சிறப்பை இழந்து வருகிறது.மத்திய மின்சார ஆணையம் (சென்ட்ரல் எலக்ரிசிட்டி அத்தாரிட்டி) இந்த ஆண்டு மட்டும், 3,700 மெகா வாட் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்று அறிவித்தது. ஆனால், மார்ச், 2013க்குள், 1,600 மெகா வாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி திறன் அதிகரிக்கக்கூடும். 28 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டிய திட்டங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், 48 மாதங்களாகியும் முடிவு பெறாமல் இருக்கின்றன. இதில் என்.டி.பி.சி., மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் அடக்கம்.இந்த, 600 மெகா வாட் திறன் கொண்ட திட்டம், பி.ஜி.ஆர்., எனர்ஜி எனும் நிறுவனத்திற்கு மொத்த ஒப்பந்தமாக அளிக்கப்பட்டது. செப்டம்பர், 2011க்குள் உற்பத்தியைத் துவக்கும் என்று கணக்கிடப்பட்டது. இது முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் உற்பத்தியைத் துவக்கவில்லை.இதை பற்றிய அதிசயமான, ஆனால், அதிர்ச்சியான இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல தேவையான வசதி கூட தாமதப்பட்டது.
மேட்டூர் விரிவாக்கம்:
மத்திய அரசு நிறுவனம் என்.டி.பி.சி., மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமும் கூட்டாக துவக்கப்படும் வல்லூர் அனல் மின் நிலையம், டிசம்பர் 2012 வரை உற்பத்தியை துவங்கவில்லை.வடசென்னை அனல் மின் நிலையத்தில், தற்போதைய நிலவரத்தின் படி மே, 2013ல் உற்பத்தி துவங்கலாம். இங்கு கூட, மேட்டூர் அனல் மின் நிலையம் போல், உற்பத்தியாகும் மின்சாரம் எடுத்து செல்லும் மின் கம்பி கோபுரங்கள் முழுமையாக நிறுவப்படவில்லை. ஐகோர்ட் உத்தரவிட்ட பின்பே பணிகள் சூடுபிடித்துள்ளன.தூத்துக்குடி அனல் மின் நிலையமோ, இன்னும் ஓராண்டுக்கு பிறகே உற்பத்தியை துவங்கலாம்.தற்போது, 2,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் தாமதமாகி வருவது தெரிந்ததே.கடந்த, 2007ம் ஆண்டு, "பெல்' நிறுவனம் மற்றும் தமிழக மின் உற்பத்தி நிலையமும் கூட்டாகச் சேர்ந்து, 1,600 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட உடன்குடி அணுமின் நிலையம் நிறுவ திட்டமிடப்பட்டது. மின் உற்பத்திக்காக பல திட்டங்களை அறிவித்த தி.மு.க., அரசு, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இத்திட்டத்தை தனது பதவிக் காலம் முடிவதற்குள் நிறுவி இருக்கக்கூடும். ஆனால், ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகும் சுற்றுச்சூழல் ஒப்புதலும், நிலக்கரி சுரங்க இணைப்பு வசதியும் செய்யப்படவில்லை. சமீபத்தில் அ.தி.மு.க., அரசு, "பெல்' நிறுவனத்துடன், செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
அறிவிப்பு மட்டும்:
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 4,000 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் குறுகிய காலத்தில் பெருமளவு நிறுவப்படும் என்று, பிரமாதமாக அறிவித்தார். ஆனால், இன்று வரை, இந்தியாவில் இத்தகைய நிலையம் ஒன்றே ஒன்றுதான் நிறுவப்பட்டுள்ளது.தமிழகத்தில் செய்யாறு பகுதியில் இத்தகைய நிறுவனம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இது வெறும் பேச்சாகவே இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு தமிழகத்தில், நான்கு பெரிய துறைமுகங்களும், பல சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவை தேவையான அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய உதவும். இந்த பெரும் வசதிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த அரசு முனைய வேண்டும். அதனால், தமிழகத்தில் அனல் மின் நிலைய உற்பத்தி அதிகரிக்கும்.தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்திக்கு முன்னுரிமை தராமல், அதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்தால், தமிழக மக்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவது எளிதல்ல.
"தூக்கமின்றி தவிக்கும் "தூங்கா நகரம்':
எந்நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் மதுரை, "தூங்கா நகரம்' என்ற பெயர் பெற்றது. ஆனால், ஒரு அதிகாலை நேரத்தில் சென்றடைந்தபோது, மதுரையை மந்த கதியில் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், நான் பார்த்த சுறுசுறுப்பான நகரமாக அது இல்லை. சில கடுமையான மின் வெட்டினால் இந்த தூங்கா நகரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆனைக் கட்டிப் போரடிக்கும் அழகான மதுரை, விவசாய பூமிக்கு, ஏன் இத்தகைய பரிதாப நிலை?
குஜராத் - மின்சார கனவு மாநிலம்:
குஜராத் மாநிலம், மின் உற்பத்தியிலும், மின்சார நிர்வாகத்திலும் சிறந்த முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்த மாநிலத்தின் எரிசக்திச் செயலர் டி.ஜே.பாண்டியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் அளித்த விவரங்கள் பிரமிக்கத்தக்கதாக இருந்தன. இதற்கு சில எடுத்துக்காட்டுகள்:மின் உற்பத்தி திறன் கடந்த, 10 ஆண்டுகளில், (2001லிருந்து 2011 வரை) 8,000 மெகா வாட்டிலிருந்து, 16,500 மெகா வாட்டாக, குஜராத்தில் அதிகரித்துள்ளது. 2013ம் ஆண்டு மட்டும் மேலும், 4,400 மெகா வாட் என்ற அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் மட்டுமல்லாது, பகிர்ந்து அளிப்பதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கிராமப்புறங்களுக்கும், விவசாயத்திற்கும் தனியாக மின் இணைப்புகள் (தனி பீடர்) அமைக்கப்பட்டு, விவசாயத்திற்கு தடை இல்லாமல் குறைந்தபட்சம், எட்டு மணி நேரம் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.முன்பு, 2003ம் ஆண்டில், 1,932 கோடி ரூபாய் என்ற அளவில் நஷ்டம் அடைந்த மின் துறை தொடர்ந்து, ஏழு ஆண்டுகளாக லாபம் ஈட்டியுள்ளது. 2011-12ல் இது, 834 கோடி ரூபாயாக உயர்ந்தது.மேலும், குஜராத்தில் இலவச மின்சாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.இது, குஜராத் முதல்வர் மோடி, வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்ததற்கு அடையாளம் என்கிறார்.ஆனால், தமிழகத்தில் கடந்த 1979ம் ஆண்டு, 22 ஆண்டுகள் பதவியில் இருந்த தி.மு.க., இலவச மின்சாரம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்தது. 200 கோடி ரூபாய் என்று துவங்கிய மானியம், 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பெருகி மின் வாரியத்தை தலை தூக்க முடியாத நிலைக்கு நஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
உண்மை நிலை என்ன?
டிசம்பர், 15ம் தேதியன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய முந்தைய மத்திய மின் துறை செயலர் அனில் ரஸ்தான், தமிழக மின் நிலை பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அவர் கூறியவை:நவம்பர் மாதத்தில் நாட்டின் மின் பற்றாக்குறை, 9,573 மில்லியன் யூனிட்டுகள் (மி.யூ.,) தமிழ்நாட்டில் மட்டும் பற்றாக்குறை 3,235 மி.யூ., அதாவது மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகம்.மொத்தத் தேவையில் இந்திய அளவில் பற்றாக்குறை, 7.7 விழுக்காடு. தமிழகத்தில் 28 விழுக்காடு. கடந்த, 5 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மின் உற்பத்தித் திறன், 55,000 மெகா வாட் என்ற அளவில் அதிகரித்தது. தமிழகத்தின் பங்கு இதில், 842 மெகாவாட் மட்டுமே. அதாவது, 1.5 விழுக்காடு. அகில இந்திய மின் உபயோகிப்பில் தமிழகத்தின் பங்கு, 8.5 விழுக்காடு.இத்துடன் ஒப்பிட்டால் மின் உற்பத்தித் திறன் மிகக் குறைந்த அளவே அதிகரித்துள்ளது. கடும் பற்றாக்குறைக்கு இது முக்கிய காரணம்.அகில இந்திய அளவில் தனியார் துறை, மின் உற்பத்தி நிறுவனங்கள் பரவலாக ஊக்கம் பெற்று உற்பத்தித் திறனை அதிகரித்து வந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் தனியார் துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஆர்வம் காட்டுவதில்லை. முக்கியமாக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் அளித்த மின்சாரத்திற்குப் பணம் பெறுவதில் உள்ள தாமதங்கள். இது, 15 மாதங்களுக்கும் அதிகமானது.இந்த நிலை குறுகிய காலத்தில் மாறுமா என்று பார்த்தால் அதுவும் சந்தேகமே.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எஸ்.விஸ்வநாதன்,ஆசிரியர், இண்டஸ்டிரியல் எக்கனாமிஸ்ட்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாம் சரி. கொடியசக்தி ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப்போகின்றது. முதல் 3 முதல் 6 மாதங்கள் திமுகவையும், நடுவண் அரசையும் கைகாட்டி மக்களை ஏமாற்றினார். போகட்டும். திமுக துவங்கிய 3000 மெகா வாட் மின்சாரம் தரக்கூடிய 7 மின்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டார். அதுவும் பரவாயில்லை. தானாக ஏன் எந்த ஒரு மின்திட்டத்தையும் அறிவிக்கவில்லை? இதை இங்கே காசுக்கு கூவும் அதிமுக அல்லக்கைகள் என்றாவது எண்ணிப்பார்த்தார்களா?. அராஜக அதிமுக ஆட்சிக்கு பதில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் தமிழகம் மின்மிகை மாநிலமாக உறுதியாக இருந்திருக்கும். மூன்றாம் முறை தவறு செய்தோம்..நமக்கு மன்னிப்பு இல்லை...தண்டனை? பேயாட்சியின் பிடியில் சிக்கி சீர்குலைந்து போவது, பாராளுமன்ற தேர்தலோ அல்லது சட்டமன்ற தேர்தலோ வரும் வரை......
ஆம் அரசியல் வாதிகள் இந்த 5 ஆண்டுகளில் எப்படி அதிகபட்சம் சம்பாரிப்பது (கொள்ளையடிப்பது) என்பதை பற்றிதான் அதிகம் யோசிக்கிறார்கள்..மக்கள் பிரச்னை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை..முற்போக்கு சிந்தனை இல்லாத இவர்கள் எதிர் கட்சியினர்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பார்கள்..எதிர் கட்சியினர் ஆளும் கட்சியினரின் ஊழல் என்பார்கள். ஆக மொத்தத்தில் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்...மறவன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.