சிதம்பரம்:பழைய டெல்டா, புதிய டெல்டா விவசாயிகள் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதால் மாவட்டத்தில் பயிர் செய்த சம்பா பயிர்கள் கருகி வீணாகும் நிலை உள்ளது.
கடலூர் மாவட்ட டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 1,130 ஏக்கர் பரப்பில் உள்ள நிலங்கள் காவிரி நீர் பாசனம் பெறுகிறது. இந்த ஆண்டு கடலூர் டெல்டா பகுதியில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாகுபடி துவக்கம் முதல் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக கடலூர் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
சம்பா சாகுபடி செய்துள்ள மொத்த பரப்பில் செப்டம்பர் மாதம் பெய்த மழையில் நேரடி நெல் விதைப்பு செய்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரில் பூ வெளியில் வந்துள்ளது. இந்த சாகுபடி பயிர் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும்.
கருகிய பயிர்கள்
பூ வந்த பருவத்தில் உள்ள நெல் பயிருக்கு தற்போது அவசியம் தண்ணீர் தேவைப்படுகிறது. சம்பா சாகுபடியில் 55 ஆயிரம் ஏக்கர் 50 முதல் 60 நாட்கள் கொண்ட பயிராக வளர்ந்து வருகிறது. 15 ஆயிரம் ஏக்கரில் இளம் பயிர்களாக உள்ளது. இந்த இளம் பயிர்களுக்கு இரு மாதங்களுக்கு தண்ணீர் தேவை. டெல்டாவில் கடைமடை மற்றும் மேடான பகுதிகளில் சில ஆயிரம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் கருகி சேதமடைந்துவிட்டது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசனத்திற்கு அணைக்கரை கீழணையில் இருந்து இந்த ஆண்டு மூன்று முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரும் பாசனத்திற்கு போதுமானதாக இல்லை.
கைவிரிப்பு
கீழணையில் இருந்து கடைசியாக கடந்த 1ம் தேதி தண்ணீர் திறந்தனர். தற்போது விவசாயிகள் தண்ணீர் கேட்டதற்கு கீழணையில் தண்ணீர் இல்லை. அதனால் பாசனத்திற்கு திறக்கவில்லை என பொதுப் பணித்துறை அதிகாரிகள் கைவிரித்தனர்.
இயற்கையும் மழை வருவது போல் மேகமூட்டம் காணப்படுகிறது. ஆனால் மழை பெய்யவில்லை . கடந்த மாதம் இரு முறை மழை வரும் என எதிர்பார்த்தும் வரவில்லை. சில தினங்களுக்கு முன்னும் மழை பெய்யும் என எதிர்பார்த்த போதிலும் பெய்யவில்லை.
கடலூர் டெல்டா பகுதியில் சாகுபடி செய்துள்ள 97 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவம்
மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு பாசனத்திற்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. இதனை பிரதிநிதித்துவம் முறையில் பழைய டெல்டா பகுதிக்கு மட்டும் பாசனத்திற்கு திறப்பதாக கூறி, பழைய டெல்டா பகுதி வெண்ணாற்றிலும், பழைய டெல்டா அல்லாத கல்லணை கால் வாயிலும் தண்ணீர் திறந்து விடுகின்றனர். இதனால் மற்ற பகுதி டெல்டா விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலூர் டெல்டா பகுதிக்கு கல்லணைக்கு வரும் தண்ணீரில் 10 சதவீதம் பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விதிமுறை இருந்தும் திறப்பதில்லை. இதனால் சிதம்பரம் காட்டு மன்னார்கோவில் சம்பா சாகுபடி தண்ணீர் இல்லாமல் பாதித்துள்ளது.
பாரபட்சம்
பழைய டெல்டா விவசாயிகளிடம் கடலூர் டெல்டா விவசாயிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. சாகுபடியில் கூடுதல் மகசூல், தீவிர சாகுபடி, தொழில் நுட்பம் என அனைத்திலும் கடலூர் டெல்டா விவசாயிகள் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழைய டெல்டா விவசாயிகள், புதிய டெல்டா விவசாயிகள் என பிரித்தாளும் சூழ்ச்சியில் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் இறங்கியுள்ளனர். பாரபட்சத்தோடு பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் இருப்பதால் கடலூர் டெல்டா விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.