Tension continue in delhi | டில்லியில் தொடரும் பதட்டம் : ஆவேச போராட்டத்தால் திணறும் மத்திய, மாநில அரசுகள்| Dinamalar

டில்லியில் தொடரும் பதட்டம் : ஆவேச போராட்டத்தால் திணறும் மத்திய, மாநில அரசுகள்

Added : டிச 23, 2012 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி :டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து, நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும், டில்லி மாநில அரசும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

டில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், வெறிக் கும்பலால், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும், இரண்டு நாட்களாக, மாணவர்கள் சார்பில், டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இப்போராட்டம், நேற்று தீவிரமடைந்தது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள, ரைசினா ஹில்ஸ், காங்., தலைவர் சோனியாவின் வீடு அமைந்துள்ள, ஜன்பத் ஆகிய பகுதிகளில், ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இவர்களை, போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து, டில்லியின் முக்கிய பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலைகளில் தடுப்பு களை வைத்தனர். இந்நிலை யில் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.நிலைமை மோசமாவதை அறிந்த போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மாணவர்களை கலைக்க முயற்சித்தனர்.அமைதி காக்க வேண்டும்


சோனியா, ராகுல் கோரிக்கை:

போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்., பொதுச் செயலர் ராகுலும், தங்களின் இல்லத்தில், நேற்று சந்தித்து பேசினர். 90 நிமிடங்கள் நடந்த, இந்த சந்திப்பில், மத்திய உள்துறை இணை அமைச்சர், ஆர்.பி.என். சிங், காங்., செய்தி தொடர்பாளர், ரேணுகா சவுத்ரி ஆகியோரும், கலந்து கொண்டனர்.

இதன்பின், அமைச்சர், ஆர்.பி.என்.சிங் கூறியதாவது:ஏழு பேர் அடங்கிய மாணவர் குழுவுடன், சோனியாவும், ராகுலும் பேச்சு நடத்தினர். எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், இந்த வழக்கின் விசாரணையை, விரைவு படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும், மாணவ பிரதிநிதிகளிடம், சோனியாவும், ராகுலும், எடுத்துக் கூறினர்.அமைதி காக்க வேண்டும் என்றும், கோபத்தை வெளிப்படுத்துவது, எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்றும், மாணவர்களிடம் வலியறுத்தினர். எதிர்காலத்தில், இதுபோன்ற குற்றங்களை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாணவர்களிடம், சோனியா உறுதி அளித்தார்.இவ்வாறு ஆர்.பி.என்.சிங் கூறினார்.


பார்லி., யை கூட்டபா.ஜ., வலியுறுத்தல்:

பா.ஜ., செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:டில்லியில், கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால், பொதுமக்களிடையே, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், விழித்தெழுந்துள்ளனர். கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பார்லிமென்டில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். இதற்காக, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்


கலாம் கண்டனம் :

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறுகையில்,""டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சி அளிக்கிறது. இது, கடும் கண்டனத்துக்குரிய செயல். பாதிக்கப்பட்ட மாணவி, விரைவில் குணமடைய, நாட்டு மக்கள் அனைவரும், கடவுளை பிரார்த்திக்க வேண்டும்,''என்றார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில்,"" கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க, கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீது, மாணவர்கள், அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் தான், அமைதியான வழியில் போராட்டம் நடத்துகின்றனர்,''என்றார். போராட்டக்காரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளிப்பதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் டில்லி மாநில அரசும். மத்திய அரசும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.


இரண்டாவது நாளாக டில்லியில் வன்முறை:

டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து, நேற்று இரண்டாவது நாளாக மாணவ, மாணவியர் நடத்திய போராட்டத்திலும், வன்முறை வெடித்தது. போலீசாரின் தடை உத்தரவை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் வாகனங்களும், காங்கிரஸ் எம்.பி.,யின் காரையும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அடித்து நொறுக்கினர்.இந்த விவகாரத்தில், திருப்பு முனையாக, பா.ஜ., மற்றும் ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றதால், மாணவர்களின் போராட்டம், அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டதாக, புகார் எழுந்துள்ளது.மாணவர்களின் இந்தப் போராட்டம், நேற்று தீவிரமடைந்தது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள, ரைசினா ஹில்ஸ், காங்., தலைவர் சோனியாவின் வீடு அமைந்துள்ள, ஜன்பத் ஆகிய பகுதிகளில், ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இவர்களை, போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து, டில்லியின் முக்கிய பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலைகளில் தடுப்புகளைவைத்தனர். வாகனங்களை, வேறு பகுதிகள் வழியாக திருப்பி விட்டனர்.


அலை அலையாக:

நேரம், செல்ல செல்ல, மாணவர்களின்கூட்டம் அதிகரித்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், வாகனங்கள் மூலம், ஜனாதிபதி மாளிகை மற்றும் முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் உள்ள, ரைசினா ஹில்ஸ் பகுதி நோக்கி, அலை அலையாக வந்தபடி இருந்தனர்."நீதி வேண்டும்'என்ற கோஷத்தை எழுப்பியபடி, மாணவர்கள், போலீசாரின் தடையை மீறி, ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். துவக்கத்தில், சில மாணவர்களை, வாகனங்களில் ஏற்றி, புறநகர் பகுதியில் விட்ட போலீசார், அதிக அளவில் மாணவர்கள் வந்ததால், செய்வதறியாது திகைத்தனர்.சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தபடி, முன்னேறிச் சென்றனர். அந்த வழியாக வந்த, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், டில்லி கிழக்கு தொகுதி எம்.பி.,யுமான, சந்தீப் தீட்ஷித்தின் காரை, அடித்து நொறுக்கினர்.


அரசியல்வாதிகள்:

நேற்றைய போராட்டத்தில் திடீர் திருப்பமாக, பா.ஜ., வின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்களும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள்கட்சியை சேர்ந்தவர்களும், போராட்டத்தில் குதித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பாபா ராம்தேவ் ஆதரவாளர்களும், போராட்டத்தில்பங்கேற்றனர். மாணவர்களின் போராட்டம்,அரசியலாக்கப்பட்டதாக, காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.


மாணவி கதி என்ன?

வெறிக் கும்பலால், கற்பழிக்கப்பட்ட,மருத்துவ கல்லூரி மாணவிக்கு, டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல் நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை, தொடர்ந்து, மோசமாகவே உள்ளது. மாணவி, விரைவில் குணமடைவதற்கான, அனைத்து சிகிச்சைகளும், உடனுக்குடன், அளிக்கப்பட்டு வருகின்றன.உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், மாணவி, கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக, நோய் எதிர்ப்பு தி மருந்துகள், அதிகம் செலுத்தப்பட்டுள்ளன. உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கலவரக்காரர்களால் வன்முறை டில்லி போலீசார் குமுறல்:

டில்லி போலீசார் சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், சில, சுயநல திகளான, கலவரக்காரர்கள் ஊடுருவி விட்டனர். போராட்டத்தில், திடீரென, வன்முறை வெடித்ததற்கு, அந்த சுயநல திகள் தான், காரணம்.வன்முறை அதிகரித்ததால் தான், அதைகட்டுப்படுத்துவதற்காக, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன; தடியடி நடத்தப்பட்டது. ஆனாலும், போலீசார் விதித்த தடையை மீறி, போராட்டக்காரர்கள், பல இடங்களிலும், ஊடுருவி, பொதுச் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி விட்டனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-டிச-201205:37:47 IST Report Abuse
villupuram jeevithan இப்படித்தான் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அப்புறப்படுத்தப் பட்டது. அதன்பிறகு அதனால் மீண்டும் எழ முடியவில்லை. அதன்பிறகு இப்போது தான் ஒரு பெரிய மாணவர் போராட்டத்தை பார்க்கிறோம். இதன் விளைவும் தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டவிளைவு மாதிரி ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
24-டிச-201204:33:02 IST Report Abuse
N.Purushothaman இதற்கெல்லாம் தீர்வு என்று பார்த்தால் இந்த கற்பழிப்பில் ஈடுபட்ட காமக்கொடுர கும்பலை கண்டறிந்து அவர்களை மேலே அனுப்பிட வேண்டும்.....அவர்களால் நாட்டிற்கு ஒன்றும் ஆக போவதில்லை....இதன் மூலம் குறைந்தபட்சம் மற்றவர்களுக்காவது குற்றம் செய்யகூடிய தைரியம் வராமல் இருக்கும்..... உயிருக்கு போராடி வரும் அந்த மாணவி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
24-டிச-201201:09:15 IST Report Abuse
Bava Husain சட்டங்கள் கடுமையாக்கப்படாதவரை..,இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்... மக்கள் போராட்டங்களால், மத்திய, மாநில அரசாங்கங்கள் திகிலில் உறைய வேண்டும்... அது தொடர்ந்தால்தான் விடிவு பிறக்கும்
Rate this:
Share this comment
Cancel
24-டிச-201201:02:21 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... இதற்க்கு தார்மீக பொறுப்பு ஏற்று மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.../// பழைய டப்பா சட்ட திட்டங்களை களைந்து தற்போது நடக்கும் நவீன குற்றங்களுக்கு தகுந்த மாதிரி நவீன சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.../// கடந்த 60 வருடங்களாக இதை செய்ய தவறிய காங்கிரஸ் கட்சியும் இதில் ஒரு குற்றவாளி.../// மாண்புமிகு அம்மா அவர்கள் பிரதமராக வந்தால் மட்டுமே தைரியமாக இதை எல்லாம் செய்து முடிப்பார்கள்../// இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் மாண்புமிகு அம்மா அவர்களைப்போல தைரியமாக ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது 100% உண்மை...///
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
24-டிச-201200:31:30 IST Report Abuse
Thangairaja ஏனிந்த வன்முறை...?இவர்களெல்லாம் இத்தனை காலம் தூங்கி கொண்டிருந்தார்களா ...இது போன்ற கொடுமைகள் பெண்களுக்கெதிராக தங்கள் கண் முன்னாள் நடந்த போது யாருமே கண்டு கொள்ளவில்லையே ஏன்? பயம்.....இந்த பயம் தானே, கொடியவர்களின் ஆயுதமாகி வருகிறது. இந்த கேசை பொறுத்த வரை சோனியா பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்திருக்கிறார் பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேரடி நடவடிக்கையில் இறங்கி குற்றவாளிகள் பிடிபட்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் வன்முறையை தூண்டுமளவுக்கு கொண்டு செல்வது அரசியல்தனம். விற்பனையாகாமல் முடங்கி கிடந்த ஹஸாரே, ராம்தேவ் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து கொண்டு பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்க செய்து வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை