ஐதரபாத் :தெலுங்கானா விவகாரத்தாலும், ஜெகன் மோகன் ரெட்டியாலும், ஆந்திர மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களை மாற்ற, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
சுதாரிப்பு:
"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்'என்ற கோரிக்கை, மீண்டும் வலுத்துள்ளது. தெலுங்கானா விவகாரத்தை, அரசியல் கட்சிகள், தங்கள் சுய நலனுக்காக பயன்படுத்துவதாக, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதிருப்தி எழுந்துள்ளதால், அரசியல் கட்சிகள், சுதாரிக்க துவங்கியுள்ளன.
இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்டகட்சிகள், போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றன. ஆளும், காங்கிரசில் உள்ள, தெலுங்கானா ஆதரவாளர்களும், "தனி மாநிலம் அமைக்கும் விஷயத்தில், மத்திய அரசு, இனியும் மவுனமாக இருந்தால், ஆந்திராவில் அடுத்ததேர்தலில், காங்கிரசுக்கு வெற்றி கிடைக்காது' என,அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான, ஜெகன் மோகன் ரெட்டியும், காங்கிரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். தற்போது, சொத்து குவிப்பு வழக்கில், அவர் சிறையில் உள்ளார்.சிறையிலிருந்து, அவர் வெளியில் வந்தால், அவரது அரசியல் நடவடிக்கைகள்தீவிரமாகும் என்றும், அதை காங்கிரசால் சமாளிக்க முடியாது என்றும், பேச்சு நிலவுகிறது.இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், தற்போதைய அமைச்சர், பிரசாதா ராவுக்கும், தொடர்புள்ளதாக, வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அனுமதி அளிக்க, மாநில அரசு மறுத்து விட்டது.மாநில அரசு இது தொடர்பாக அனுப்பிய கோப்புகளை, கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண் குமாருக்கு ரெட்டிக்கு, திருப்பி அனுப்பினார். "அமைச்சர்பிரசாதா ராவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு, பதில் அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்
இந்த விவகாரங்களில், முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். "அனைத்து பிரச்னைகளுக்கும், கிரண் குமார் ரெட்டியே, காரணம். அவரின் செயல்பாடுகள் சரியில்லை' என, காங்கிரஸ் கட்சியினரே, விமர்சிக்க துவங்கி விட்டனர்.கிரண் குமார் ரெட்டியிடமிருந்து, முதல்வர் பதவியை தட்டிப் பறிக்க, மூத்த அமைச்சர்கள், தாமோதர் ராஜநரசிம்மா, ரவீந்திர ரெட்டி ஆகியோர், நேரம் பார்த்து காத்திருக்கின்றனர். இவர்களும், கிரண் குமார் ரெட்டிக்கு எதிராக, கட்சி மேலிடத்திடம், அவ்வப்போது புகார் பட்டியல் வாசித்து வருகின்றனர்.இந்த இக்கட்டான சூழலை சமாளிப்பதற்காக, முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும், மூத்த அமைச்சர்களுக்கும், காங்கிரஸ் மேலிடம், அழைப்பு விடுத்திருந்தது. இதனால், கிரண் குமார் ரெட்டி, தன், அனைத்து நிகழ்ச்சி களையும் ரத்து செய்து,டில்லிக்கு சென்றார். ஆந்திர மாநில காங்., தலைவர், சத்யநாராயணா ஏற்கனவே, டில்லி சென்றிருந்தார்.காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய உள்துறை செயலர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரை, இவர்கள் சந்தித்து பேசினர்.
தலை உருளும்:
இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:இன்னும் சில நாட்களில், ஆந்திராவில், கட்சியிலும், ஆட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்களை செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தில், கிரண் குமாரின் தலையும் உருளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கிரண் குமார் தவிர, மேலும் சில முக்கிய அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்படலாம். இளைஞர்களுக்கு, அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம்.இவ்வாறு டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெகனுக்கு அழைப்பு:
தெலுங்கானா பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, அனைத்து கட்சிகளின் கூட்டத்தை, வரும், 28ம் தேதி கூட்ட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.காங்கிரஸ், பா.ஜ., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும்கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன், முதல் முறையாக, ஜெகன் மோகனின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மத்திய அரசால் கூட்டப்பட்ட, அனைத்து கட்சி கூட்டங்களில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத் தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.