"கொஞ்ச நாளாகவே கடுமையான வயிற்றுப்போக்கு...' "தாங்க முடியாத அளவுக்கு காய்ச்சல்..' "ரத்தக்கொதிப்பு அதிகரித்துவிட்டது...' என, பல்வேறு உபாதைகளைக்கூறி, கோவை மாநகர போலீஸ் போக்குவரத்து எஸ்.ஐ.,கள், அடுத்தடுத்து மருத்துவமனையில், "அட்மிட்' ஆகி வருகின்றனர். பணி நெருக்கடியால் பலரும் ஓட்டம்பிடிப்பதாக கூறுகின்றனர், அதிகாரிகள். கோவை மாநகர போக்குவரத்து போலீசில், துணைக்கமிஷனர், இரு உதவிக்கமிஷனர்கள், இரு இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,கள், ஏட்டுகள், கான்ஸ்டபிள் என, 270 பேர் பணியாற்றுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பது, இவர்களின் முக்கியபணி. இதுவரை, போக்குவரத்து போலீசுக்கு என, தனிப்பொறுப்பாக துணைக்கமிஷனர் நியமிக்கப்படவில்லை. குற்றம் மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனராக செந்தில்குமார், பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் இவர், மாநகர சட்டம்- ஒழுங்கு துணைக்கமிஷனராக மாற்றப்பட்டபின், போக்குவரத்துப்பிரிவும், குற்றப்பிரிவும் தனித்தனியே பிரிக் கப்பட்டது; போக்குவரத்து துணைக்கமிஷனராக பர்வேஷ்குமார் நியமிக்கப்பட்டார். நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், பொறுப்பேற்றது முதல், பணியில் தீவிரம் காட்டிவருகிறார். தினமும், காலை, மாலையில் ரோந்து சென்று, போக்குவரத்து நெரிசலான இடங்களை ஆய்வு செய்து, பணியில் அசட்டையாக இருக்கும் போலீசாரை எச்சரிக்கிறார்; அக்கறையுடன் பணியாற்றும் போலீசுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதேவேளையில், "மாமூலான' நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசார், தங்களது நிம்மதி போய் விட்டதாக புலம் பத்துவங்கியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, துணைக்கமிஷனர் பர்வேஷ்குமார், சமீபத்தில், மேலும் சில உத்தரவுகளை போக்குவரத்து போலீசுக்கு பிறப்பித்தார். "முக்கிய சாலைகளில் தினமும் வாகன சோதனை நடத்தி குறைந்தது ஐந்துகுடிபோதை ஆசாமிகளுக்கு அப ராதம் விதிக்க வேண்டும்; ஒவ்வொரு எஸ்.ஐ.,யும் 100 வழக்குகள் பதிவு செய்து, மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, எச்சரித்திருந்தார். இதையடுத்து, போக்குவரத்து எஸ்.ஐ.,கள் சின்னத்தம்பி (காட்டூர்), சங்கரநாராயணன் (ராமநாதபுரம்), சஞ்சீவன்(வெரைட்டிஹால் ரோடு), பிரபாகரன் (ஆர். எஸ்.புரம்) ஆகியோர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, போலீஸ் மருத்துவமனையில் "அட்மிட்' ஆகிவிட்டனர்; வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக, டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.இன்னும் சில எஸ்.ஐ.,களும் "அட்மிட்' ஆக, காரணம் தேடிக்கொண்டிருப்பதாகவும், இருவர் ஆயுதப்படைக்கே திரும்பிச் செல்ல மனு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், காலியாகும் போக்குவரத்து எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப முடிவுசெய்த போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் எஸ்.ஐ.,களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அங்கு பணியாற்றும் 35 எஸ்.ஐ., களில், 25 பேர், "எங்களுக்கு விருப்பமில்லை' என, தெரிவித்துவிட்டனர்.இது, போலீசார் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில், போக்குவரத்துப்பிரிவு எஸ்.ஐ., பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவியது. ரூ. ஒரு லட்சம், 50 ஆயிரம் என, லஞ்சம் கொடுத்தும், மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.,களின் சிபாரிசுடனும், "போஸ்டிங்' பெற முண்டியடித்தனர். காரணம், அப்போது, "வருமானமும்' செல்வச்செழிப்பாக இருந்தது. தற்போது, கமிஷனர் விஸ்வநாதன், துணைக்கமிஷனர் பர்வேஷ்குமார் ஆகியோரின் கண்டிப்பால், வருமானத்துக்கு வேட்டு விழுந்துவிட்டது; போதாக்குறைக்கு, வேலையும் செய்தாக வேண்டும். இக்காரணத்தாலேயே எஸ்.ஐ.,கள் பலரும், 'ஆள விடுங்க சாமி' என, ஓட்டம் பிடிக்கின்றனர்.போக்குவரத்துப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயரதிகாரிகள், துறைசார்ந்த பணிகளைத்தவிர வேறு எந்த ஒரு காரியத்தையும் செய்யச்சொல்லவில்லை. பிறகு ஏன், பயந்து ஓடவேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்; அதற்கேற்ப, கடமையாற்றுவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை' என்றார்.
- நமது நிருபர் -