திருநெல்வேலி:நெல்லை,
புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில், 53 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம்
பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக - கேரள எல்லையான புளியரையில், வணிகவரி,
போக்குவரத்து துறை, வருவாய், வனத்துறை, போலீஸ் சோதனை சாவடிகள் உள்ளன.
இருந்த போதும், கேரளாவுக்கு, எரிசாராயம், ரேஷன் அரிசி, மரங்கள்
கடத்தப்படுவது தொடர்கிறது. கடந்த, 21ம் தேதி, மதுரையில் இருந்து புளியரை
வழியாக,30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள், லாரியில்
கடத்தப்பட்டன.மரம் தெரியாமல் இருக்க, கரும்புக்கட்டுகளை, லாரியின்
மேல்பகுதியில் வைத்து கடத்தினர்.
கடத்தல் லாரி, நெல்லை சோதனை சாவடிகளை
கடந்து, கேரளா ஆரியங்காவு வணிகவரி சோதனை சாவடியில் பிடிபட்டது. லாரி
டிரைவர், மதுரை வெங்கடேஷ் தப்பி விட்டார்; கிளீனர் குமார் கைது
செய்யப்பட்டார்.இந்நிலையில், 22ம் தேதி காலை, போக்குவரத்து சோதனை
சாவடியில், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமி தலைமையில் போலீசார், சோதனை
நடத்தினர். அதில், 21ம் தேதி இரவு முதல், 22ம் தேதி காலை வரை,
வசூலிக்கப்பட்ட லஞ்சப்பணம், 53 ஆயிரம் ரூபாய்
கைப்பற்றப்பட்டது.இதுகுறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் இன்ஸ்பெக்டர்
கணேசன், உதவியாளர் தட்சிணா மூர்த்தி, அலுவலக உதவியாளர் அமல்ராஜ் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டது.