சென்னை:சென்னையை
சேர்ந்த கால்நடை ஆர்வலர்கள், நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில்,
ஆந்திராவில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட
இருந்த, 29 காளைகள் மீட்கப்பட்டன.கேரளாவில், மாட்டு இறைச்சி விற்பனை
அதிகமாக நடக்கிறது. பல ஆண்டுகளாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா,
மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, கேரளாவிற்கு பசு மற்றும் காளை மாடுகள்
கடத்தப்படுகின்றன. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், இந்த மாடு
கடத்தல் பலமடங்கு அதிகரித்து உள்ளது.மாடுகளை மீட்க திட்டம்இதுகுறித்து
சென்னையை சேர்ந்த கால்நடை ஆர்வலர்கள் குழு, கடந்த சில தினங்களாக ரகசிய
கணக்கெடுப்பு நடத்தினர். இதில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக
தினமும், 40 லாரிகள் வரை, மாடுகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இந்த
லாரிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்து, பசு மற்றும் காளைகளுக்கு மறுவாழ்வு
அளிக்க இக்குழுவினர் திட்டமிட்டனர்.அதன்படி கடந்த, 21ம் தேதி நள்ளிரவு,
சென்னையில் இருந்து, 15 வாகனங்களில், 58 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு
சுங்கவரி வசூல் மையத்திற்கு சென்றனர். அங்கு கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து கேரள மாநிலம்,
காயன்குளத்திற்கு, 29 காளைகளை கடத்தி சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். அந்த
லாரியில் எந்த ஒரு ஆவணமும் முறையாக இல்லை.போலீசாரிடம் ஒப்படைப்பு
சிறிது
நேரத்தில் ஈரோட்டில் இருந்து, 15 பசுக்களை ஏற்றி கொண்டு ஆந்திரா சென்று
கொண்டிருந்த லாரியை மடக்கினர். அதிகாலை வரை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட
கால்நடை ஆர்வலர்கள் பின்னர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில்
பிடிபட்ட லாரிகளை ஒப்படைத்தனர்.லாரி உரிமையாளர், ஓட்டுனர், விற்றவர்,
வாங்கியவர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மீட்கப்பட்ட
மாடுகள், பசு மற்றும் காளைகள் மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டன.சோதனை
தொடரும்இதுகுறித்து, கால்நடை ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த ஹரன்
கூறியதாவது:ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வழியாக, ஐந்து
வழித் தடங்களில் மாடுகள் கடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு ஒரு வழித்
தடத்தில், 40 லாரிகளில், 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் கேரளாவிற்கு
கடத்தப்படுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம் என்பதால், கடந்த சில நாட்களாக
இது இன்னும் அதிகமாக இருந்தது.
சுங்கவரி மையத்தில் ஒரு லாரி
பிடிபட்டதும், தகவல் கசிந்து மற்ற லாரிகள் வரவில்லை. இந்த சோதனை தொடர்ந்து
நடக்கும். மாடுகள் கடத்தப்படுவதை அரசு தடுக்கும் வரை, அவற்றை பிடித்து
போலீசில் ஒப்படைக்கும் பணியை செய்வோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
லாரியில் பசுவுக்கு பிரசவம்ஈரோட்டில்
இருந்து ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்ட, 15 பசுக்களில், ஆறு பசுக்கள்
கர்ப்பமாக இருந்தன. இவற்றில் ஒரு பசு, லாரியிலேயே குட்டியை பிரசவித்தது;
மற்றொரு பசுவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து, கால்நடை ஆர்வலர்கள்
"புளூகிராஸ்' அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த பசுவை மீட்டு,
கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விதிமுறைகள் என்ன?
ஒரு லாரியில் ஆறு மாடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது
லாரியில் ஏற்றப்படும் ஒரு மாட்டிற்கு, 2 ச.மீ., இடம் ஒதுக்கப்பட வேண்டும்
பயணத்தின் போது லாரியின் பக்கவாட்டில் மோதி மாடு காயமடையாமல் இருக்க, பஞ்சு பொருத்தப்பட வேண்டும்
ஒவ்வொரு மாட்டிற்கும், கால்நடை மருத்துவர் சான்று பெறப்பட்டிருக்க வேண்டும்
மாட்டிற்கு தேவையான தீவனம், தண்ணீர் தயாராக இருக்க வேண்டும்
மாடு விற்றவர், வாங்குபவர் பெயர், விலாசங்கள், விலைக்கு வாங்கப்பட்ட ரசீது ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
ஆனால்,
தற்போது மாடுகளை ஏற்றி செல்லும் ஒரு லாரியில் கூட, இந்த விதிமுறைகள்
பின்பற்றப்படுவதில்லை. இதை போலீசாரும், கால்நடை துறை மற்றும் எஸ்.பி.சி.ஏ.,
அமைப்பும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தாலே, மாடு கடத்தல் முற்றிலும்
தடுக்கப்படும்.