புதுடில்லி :டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையிலான, மூன்று பேர் குழு நேற்று விசாரணையை துவக்கியது.கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பது, இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி வழங்கும் வகையில், சட்டங்களை திருத்துவது தொடர்பாக, பொதுமக்களும், பிரபல சட்ட நிபுணர்களும், வழக்கறிஞர்களும், அரசு சார்பற்ற அமைப்புகளும், பெண்கள் சங்கங்களும் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் தங்களின் கருத்துக்களை, ஜனவரி, 5ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
டில்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு, விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என, வலியுறுத்தி, டில்லியில், கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பெண்கள் அமைப்பு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், பெரும் நெருக்கடிக்கு ஆளான, மத்திய அரசு, மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், இதுபோன்ற கொடூர கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு விரைவாக தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, ஆலோசனை வழங்கவும், மூன்று பேர் கமிட்டியை நியமித்தது.சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா, இமாச்சல பிரதேச ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆகிய மூன்று பேர் அடங்கிய, இந்த கமிட்டி, 30 நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், நேற்றே தன் பணியை துவக்கியது.
அதனால், சட்ட நிபுணர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும், தங்களின் யோசனைகளை, justice verma@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கோ அல்லது 011 -23092675 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேக்ஸ் மூலமாகவோ அனுப்பலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட விதிகளின்படி, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனால், மருத்துவ மாணவியை கற்பழித்தவர்களுக்கு, "மரண தண்டனை விதிக்க வேண்டும்' என, நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளதால், பல்வேறு தரப்பினரிடமிருந்தும், இதுதொடர்பாக, ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
வலியை உணர்கிறேன்:
இதற்கிடையில், இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "கற்பழிப்பு சம்பவத்தால், பாதிக்கப்பட்ட பெண், குணமடைய அனைவரும், பிரார்த்திக்க வேண்டும். இந்த தருணத்தில், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், நேற்று காலை, மீண்டும் தொலைக்காட்சி மூலம், பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:மருத்துவ மாணவி, கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், மக்களிடம் எழுந்துள்ள கோபமும், ஆவேசமும் நியாயமானதே. மூன்று பெண்களுக்கு தந்தையான என்னால், இதன் வலியை உணர முடிகிறது.உங்களுக்கு எந்த அளவுக்கு கோபம் உள்ளதோ, அதே அளவு, எனக்கும், துயரமும், கோபமும் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை, அரசு மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது; அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
அமைதி காக்க வேண்டும்:
இந்த பிரச்னைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில், கலவரம் நிகழ்ந்திருப்பது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதேநேரத்தில், வன்முறை, இதற்கு தீர்வாகிவிடாது. அனைத்து தரப்பினரும், அமைதி காக்க வேண்டும் என, வேண்டுகிறேன்.நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான, அனைத்து உறுதியான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுக்கும். இந்த விஷயத்தில், எக்காரணம் கொண்டும், காலதாமதப்படுத்தாமல், உரிய வேகத்தில் அடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில், பொது மக்கள் அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
தேவையில்லை:
உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயும், சில செய்தி சேனல்கள் மூலமாக, நேற்று முழுவதும், அவ்வப்போது, போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியதாவது:டில்லி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து நடவடிக்கைகள் வேகம் பெறும். பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, விரிவான ஆலோசனை செய்ய, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுடன், அடுத்த மாதம், 4ம் தேதி, டில்லியில் ஆலோசனை நடைபெறும்.பொதுமக்கள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. போலீசார் முதலில் அமைதியாகவே இருந்தனர். சமூக விரோதிகள் சிலர், வன்முறையில் இறங்கியதால், அதைத் தடுக்க வேண்டும் என்பதால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருவதால், பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தையோ, அனைத்துக் கட்சி கூட்டத்தையோ கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு ஷிண்டே கூறினார்.இதற்கிடையில், மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தடுக்க தவறியது தொடர்பாக, டில்லி போலீசின், இரண்டு உதவி கமிஷனர்கள் நேற்று, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாணவி உடல் நிலை மோசம்:
டில்லியில், ஓடும் பஸ்சில், வெறிக் கும்பலால், கற்பழிக்கப்பட்ட மாணவி, டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:மாணவியின் உடல் நிலை, கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு, தொடர்ந்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அடிவயிற்றில், நேற்று முன்தினம், சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில், தொற்று ஏற்பட்டதாலும், சீழ் பிடித்ததாலும், மாணவி, விரைவில் குணமடைவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்:
"பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ஷிண்டேயும் வேண்டுகோள் விடுத்தும், நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. ஜனாதிபதி மாளிகை, ராஜ்பாதை சாலை மற்றும் இந்தியா கேட் பகுதிகளில், இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திய மாணவ அமைப்புகள் நேற்று இடத்தை மாற்றின.ஜந்தர் மந்தர் பகுதியில், காலையிலேயே குவியத் துவங்கினர். அதனால், இப்பகுதியில் உள்ள, முக்கியமான, ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களையும், டில்லி போலீஸ் மூடிவிட்டது. இந்த பகுதியில் தான், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், அலுவலகங்களும் உள்ளன. வார விடுமுறை முடிந்து, நேற்று திங்கட்கிழமை, பணிக்கு திரும்பிய ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல், பெரும் அவதிப்பட்டனர்.
மெட்ரோ ரயிலையே, பெரிதும் பயன்படுத்தும் அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்கு வரமுடியாமல் திணறினர். மெட்ரோ ரயில் போக்குவரத்து, தடை செய்யப்பட்டதை முன்கூட்டியே அறிந்த பலர், காரில் வந்ததால், மத்திய டில்லி பகுதி முழுவதும், போக்குவரத்தில் சிக்கி தவித்தது.கிட்டதட்ட, அனைத்து சாலைகளிலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கின. பலர், பல கிலோ மீட்டர் தூரம் நடந்து, அலுவலகங்களுக்கு வந்தனர். அலுவலகங்களுக்கு வந்த அனைவரையும், அடையாள அட்டையை, பரிசோதித்த பின், தடுப்புகளை தாண்டி, போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூவர் என்ன இன்னும் முன்னூர் பேர் அமர்ந்து பேசினாலும் முடிவு இதுதான். "தற்போது உள்ள சட்டங்களே போதுமானது. காவல் துறை இனி மிகுந்த கவனத்துடன் செயல் பட இந்த கோர்ட் உத்தரவிடுகின்றது". 65% காவல்துறையினர் VIP , VVIP களின் காவலுக்கு, பாதுகாப்புக்கு சென்று விட்டால் கோடிக்கணக்கான மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள். கற்பழிப்புக்கு தூக்குதண்டனை என்று சட்டம் வந்துவிட்டால் வெகுவான அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் வர்ரிசு இல்லாமல் போய்விடுவார்கள். ஆகவே இந்த தண்டனை சட்டம் வரவே வராது..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.