கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மனைகளுக்கு, முத்திரை தீர்வை விலக்கு அளிக்கும் சலுகை தொடர்வதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இச்சலுகையை நிறுத்த, கடந்த, தி.மு.க., ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே, காரணமாக கூறப்படுகிறது.
பதிவாளர் கட்டுப்பாட்டில்... தமிழகத்தில், தற்போதைய நிலையில், 1,034 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவற்றில், நகர்ப்புற மக்களின் தேவைக்காக, 837 தொடக்க கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், கூட்டுறவு சங்கங்களின் (வீட்டுவசதி) பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இது லாப நோக்கமற்ற பணி என்பதால், இந்த சங்கங்கள், மனைப்பிரிவு உருவாக்கும் திட்டங்களுக்காக, வாங்கப்படும் நிலங்களை மனைப் பிரிவாக மேம்படுத்தி, விற்பனை செய்யும் நிலங்கள் ஆகியவற்றுக்கான, கிரைய பத்திரங்களை பதிவு செய்ய, முத்திரை தீர்வை செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களை காட்டிலும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகி, வீட்டுமனை வாங்குவதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில்...கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழி வகையின் அடிப்படையில், இந்திய முத்திரை சட்டப்படி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு இந்த சலுகையை, 1966ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. கடந்த, தி.மு.க., ஆட்சியில், இச்சலுகையை நிறுத்த, முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, வீட்டுவசதித் துறையில் இருந்து, 2009, அக்டோபர், 5ம் தேதி, வீட்டுவசதிக்கான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு, கடிதம் எழுதப்பட்டது. இதற்கிணங்க, வீட்டு வசதிக்கான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மண்டல துணை பதிவாளர்களுக்கும், 2009, அக்டோபர், 8ம் தேதி கடிதம் எழுதினார். இதன்படி, முத்திரைத் தீர்வை சலுகையை நிறுத்துவதற்கு, சில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், கோர்ட்டை அணுகி தடை ஆணை பெற்றனர். இச்சிக்கல் காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் உள்ள, 3,788 வீட்டுமனைகளின் விற்பனை தடைபட்டது.
இறுதி ஆண்டு இதையடுத்து, "புதிய மனைத் திட்டங்களை அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே, ஒப்படைக்க வேண்டும்' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2010 ஜன., 11ம் தேதி உத்தரவிட்டது. இப்பிரச்னையில், இறுதி ஆணை பெறப்படும் வரை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற் கொள்ளப்படும், அனைத்து வகையான நில பரிவர்த்தனை நடவடிக்கைகளையும் தொடர வேண்டாம் என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும், வீட்டுவசதி திட்டங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையத் துவங்கியது.
தொடருமா?வீட்டுவசதித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: முத்திரைத் தீர்வை சலுகையை, தொடர்ந்து வழங்குவதால் மட்டுமே, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம், சரியான சந்தை விலைக்கு வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடியும். இச்சலுகையால், வழிகாட்டி மதிப்பு உயர்ந்து, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறதே தவிர, இதனால் எவ்வித இழப்பும் இல்லை. எனவே, முத்திரைத் தீர்வை விலக்கை தொடர்ந்து வழங்கலாம் என, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முந்தைய, தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை கைவிடுவது தொடர்பான, கோப்புகள் அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அரசின் முடிவு தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.