christmas special | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

அருள்மிகப்பெற்றவரே வாழ்க!
கடவுள் உம்முடனே இருப்பார்.
உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிர்பெற்றவரே

மங்கள வார்த்தை திருநாள்:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்தவ முறைமைப்படி, கடவுள் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளையே கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். தற்போது, வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றால் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்து வருகிறார்கள். பைபிளில் கூறப்பட்டிருக்கும் வரலாற்று உண்மைகள் இருந்தாலும், குடில், மரம், ஸ்டார் போன்றவை இயேசு பிறப்பின் அடையாளச்சின்னங்களாக இன்றளவும் திகழ்கின்றன.இயேசு யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். கன்னி மரியாளுக்கு கடவுளின் தூய ஆவியானவர் தோன்றி " அருள் மிகப் பெற்றவரே வாழ்க! கடவுள் உம்முடனே இருப்பார். உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிர் பெற்றதே.' என்று வாழ்த்தினார். தூய ஆவியானவரின் இந்த வாழ்த்துசெய்தி தான் "மங்கள வார்த்தை திருநாள்' என மார்ச் 25ல் கொண்டாடப்படுகிறது. அந்த நாளிலிருந்து 9 மாதங்கள் கழித்து, டிசம்பர் 25ல் இயேசு பிறந்தார். இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பிக்கும் வண்ணம், வீடுகளில் இயேசு, மரியா, யோசேப்பு போன்றவர்களின் உருவங்களை, குடில் வீடுகளில் அமைத்திருப்பர்.


ஸ்டார்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிடப்பட்டிருக்கும். இயேசு பிறந்ததை ஞானிகளுக்கு முன்னறிவிக்கும் விதமாக அதிசய விண்மீன் ஒன்று வானத்தில் தோன்றியது. அந்த விண்மீன் இயேசு பிறந்த பெத்லகேமுக்கு ஞானிகளை அழைத்து சென்றது. இதன் நினைவாக, வீடுகளின் முன் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது. விண்மீன் பிரகாசமான ஒளியை தரும். இருளில் இருந்தாலும் இது தான் வீண்மீன் வெளிச்சம் என்று தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருக்கும். பாவங்களில் வீழ்த்தப்பட்டிருக்கும் மக்கள் மனதில் ஒளியேற்ற, இறைவனே மனித உருவில் தோன்றியுள்ளார் என்ற அர்த்தத்திலும் நட்சத்திரங்கள் தொங்கவிடப்படுகிறது.


கிறிஸ்துமஸ் மரம் :

இறைவனாகிய இயேசு, மனித உருவில் கன்னிமரியாள் வயிற்றில் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்தப்பண்டிகையில், முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாட்களில், பசுமை மாறா ஊசியிலை மரங்களை வண்ண விளக்குகளுடன் தேவாலயங்களிலும், வீடுகளிலும் அலங்கரித்திருப்பர். இந்த மரம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
* இங்கிலாந்தில் பச்சை இலைகளை தீய ஆவிகள் தீண்டாது என்ற கருத்து ஆழமாக இருந்ததால் கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளின் முன்பு அலங்கரித்து வைத்தனர்.
* இங்கிலாந்து அரசி விக்டோரியாவும், ஜெர்மனி இளவரசர் ஆல்பர்ட்டும் காதலை பரிமாறிக் கொள்ள மரங்களையே பரிசாக பரிமாறிக் கொண்டனர். அதையே மக்கள் கிறிஸ்துமஸ் மரங்கள் ஆக்கிக் கொண்டனர் என்றும் சொல்வதுண்டு.
* கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம், ஜெர்மனி என குறிப்பிடுகின்றனர். புனிதர் போனிபேஸ், ஜெர்மனியில் மறையுரை ஆற்றிக்கொண்டிருக்கும் போது, மக்கள் ஓக் மரத்தை மக்கள் வழிபடுவதை கண்டு அதனை வெட்டச் செய்தார். வெட்டப்பட்ட மரத்திலிருந்து மீண்டும் புதிய மரம் தழைத்தது. இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டாலும், மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் நாளை எதிர்பார்க்கும் வகையில் இது அமைந்ததால், அந்த ஓக்மரமே கிறிஸ்துமஸ் மரமாக்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு.
* மார்ட்டின் லூதர் கிங் சாலையில் செல்லும் போது, பனி படர்ந்திருந்த ஓர் மரத்தை அலங்கரித்ததால், அந்த வகை மரமே கிறிஸ்துமஸ் மரமானது என்றும் சொல்வர்.
* ஆதிப்பெற்றோர்களான ஆதாம், ஏவாள் இந்த மண்ணுலகத்தில் பாவத்தை நுழையச் செய்ததே, ஏதேன் தோட்டத்தில் உள்ள ஓர் மரத்தில் உள்ள ஆப்பிளை தின்றதால் தான். உலகில் பாவம் நுழைந்த ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24 ம் நாள் வீடுகளில் மரங்களை அலங்கரித்து, அதில் ஆப்பிளை தொங்க விட்டு கொண்டாடப்பட்டு வந்தது. நாளடைவில் இதுவே கிறிஸ்துமஸ் மரமாக மாறியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள், சிலுவை அடையாளத்தில் உள்ளது. இந்த மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை அர்த்தத்துடன் கொண்டாடுகிறோம் என்ற நம்பிக்கையும் மரம் வைக்கக் காரணம்.


4 கோடி மரங்கள்:

வட அமெரிக்காவில் ஆண்டுதோறும் நான்கு கோடி கிறிஸ்துமஸ் மரங்கள் விற்கப்படுகின்றன. இதில் மூன்று கோடிக்கும் அதிகமான கிறிஸ்துமஸ் மரங்கள் ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது.


பாரினில் பிறந்தார் பரமபிதா:

இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இரு நற்செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். லூக்கா நற்செய்திப்படி இயேசுவின் பெற்றோராகிய மரியாவும், யோசேப்பும், நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அவரவர் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்பது விதியாக இருந்தது. யோசேப்பும் தம் மனைவி மரியாவோடு பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து, யூதேயாவிலுள்ள பெத்லகேம் சென்றார். அங்கேதான் மரியா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவருக்கு இயேசு என்று பெயரிட்டனர்.மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்' (மத்தேயு 2:1). தன்னுடைய ஆட்சிக்கு உலை வைக்க ஒருவர் பிறந்துவிட்டாரோ என்று அஞ்சிய ஏரோது, குழந்தை இயேசுவைக் கொல்ல முயற்சி செய்தான். அவர் எங்கிருக்கிறார் என தெரியாததால், பெத்லகேமின் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி எல்லாக் குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான். இயேசுவின் உயிருக்கு இடர்ப்பாடு ஏற்படலாம் என்றும், அதனால் யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பியோட வேண்டும் என்றும் கனவில் எச்சரிக்கப்பட்டார். பின்னர், அவரது திருக்குடும்பம் நாசரேத்தில் குடியேறியது. பெத்லகேமே இயேசுவின் பிறப்பிடம் என்பதற்கான சான்றுகள் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறிஸ்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களில்இருந்தும் தெரிகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை