காஞ்சிபுரம் : மாமண்டூர் பெரிய ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் விவசாயிகள் பலர், பதிவு செய்யப்படாத நில ஆவணங்களை காட்டி, நிலங்களை விற்று வருகின்றனர். இதே நிலை நீடித்தால், இந்த ஏரியும் மாயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாமண்டூரில், பொதுப்பணி துறையின் பராமரிப்பில், 3,000 ஏக்கரில், பெரிய ஏரி உள்ளது. இதற்கு, பாலாறு, செய்யாறு ஆகியவற்றில் இருந்து கால்வாய்கள் மூலம் நீர் பெறப்படுகிறது. மாமண்டூர், தூசி, பல்லாவரம், நத்தக்கொல்லை, வாகை, மேனலூர், பூனைத்தாங்கல், கணிகிலுப்பை உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த, 4,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆக்கிரமிப்பு கடந்த 15 ஆண்டுகளாக, பாலாற்றில் நீர் பெருக்கு ஏற்படாத காரணத்தால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. செய்யாற்றில் இருந்து கிடைக்கும் நீரும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, மாமண்டூர் ஏரி முழுமையாக நிரம்புவதில்லை. இதை பயன்படுத்தி, ஏரியின் உட்பகுதியில், 20 ஏக்கரை சிலர் ஆக்கிரமித்து, விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு ஏக்கர் முதல் நான்கு ஏக்கர் வரை, ஏரி நிலத்தை மடக்கி வைத்துள்ளனர். "டுபாக்கூர்' பத்திரம் இந்த நிலங்கள் தங்களுக்கே சொந்தமானது என்பதற்கு ஆதாரமாக, பதிவு செய்யப்படாத சில ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இதற்கு "உரிமை கிரையப்பத்திரம்' என்று ஒரு பெயரை வைத்து, அதை, நில பத்திரமாகவே பாவித்து வருகின்றனர். ஒரு சிலர், இந்த ஆவணத்தை பயன்படுத்தி, ஏரி நிலத்தை, ஒரு ஏக்கர், 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிரையம் பேசி, விற்று வருகின்றனர். சிலர்,"போக்கியம்' என்ற பெயரில், 50 சென்ட் ஏரி நிலத்தை ஓர் ஆண்டு அனுபவிக்க கொடுத்து, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை பெறுகின்றனர். ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, அதற்கு டுபாக்கூர் ஆவணங்களை தயாரித்து சிலர் விற்று வரும் விவரம், காஞ்சிபுரம் பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். இருப்பினும், இதுவரை அதை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. விவசாயிகள் சந்தேகம்இது குறித்து, விவசாயிகள் சிலர் கூறுகையில், "இந்த நிலைத் தொடர்ந்தால், ஏரியை மடக்கி வைத்துள்ளவர்கள், பணத்தை கொடுத்து, பட்டா வாங்கி, அதை கொண்டு, தங்கள் பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையம் கூட செய்யலாம் என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அதிகாரிகள் ஏரி நிலங்களை மீட்க வேண்டும்,'' என்றனர். இது குறித்து காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், "மாமண்டூர் ஏரியில், நீர்பிடிப்பு பகுதியில் சிலர் பயிர் செய்து வருகின்றனர். இந்த இடத்தை தனியார் பெயரில் பதிவு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓரிரு வாரங்களில் இதற்கான பணி துவங்கப்படும்,' என்றார்.
அலட்சியம் நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க கூடாது; நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புக்களை அதிரடியாக அகற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நில அபகரிப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் பிறப்பித்துள்ளார்.
ஆனால், அவரின் உத்தரவை நிறைவேற்றுவதில் பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என்பது, மாமண்டூர் ஏரியில் நடந்து வரும் அவலங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.