யாங்கூன்: மியான்மர் நாட்டில், கடும் பனி மூட்டம் காரணமாக, பயணிகள் விமானம், ஓடு பாதையில் இறங்குவதற்கு பதில், நெடுஞ்சாலையில் இறங்கியதால், விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் பலியாயினர். 11 பேர், படுகாயமடைந்தனர்.மியான்மர் நாட்டில், ஷான் மாகாணத்தில் உள்ள, இன்லி ஏரியின் அழகை ரசிப்பதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.மண்டாலே நகரிலிருந்து, "ஏர் பாகன்' என்ற தனியார் விமானம், 69 பேருடன், ஹெகோ நகருக்கு புறப்பட்டது. கடும் பனி மூட்டத்தால், ஹெகோ விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் திணறியது. ஒரு கட்டத்தில் இந்த விமானம், விமான நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் தட்டு தடுமாறி தரையிறங்கியதில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர், விமானம் விழுந்ததில் பலியானார். விமானத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டியும், மியான்மர் நாட்டு சிறுவனும் விபத்தில் உயிரிழந்தனர். அமெரிக்கா, பிரிட்டன், கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த, 11 பேர் படுகாயமடைந்தனர்.இந்த விமானத்தில், 51வெளிநாட்டு பயணிகள் உள்பட, 63 பேரும், விமான ஊழியர்கள் ஆறு பேரும் இருந்தனர்.