cop dies on delhi riot case | டில்லி போராட்டத்தில் கல்வீச்சில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம் | Dinamalar

டில்லி போராட்டத்தில் கல்வீச்சில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம்

Added : டிச 25, 2012
Advertisement
 டில்லி போராட்டத்தில் கல்வீச்சில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம்

புதுடில்லி: டில்லியில், மாணவர், பெண்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களின் கல்வீச்சில் படுகாயமடைந்த, போலீஸ்காரர், நேற்று காலை, இறந்தார். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொண்டர் ஒருவர் உட்பட, எட்டு பேர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, ஒரு வாரமாக, போராட்டம் நடந்து வருகிறது. ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஊர்வலமாக செல்வதற்காக, மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், 23ம் தேதி, இந்தியா கேட் அருகே குவிந்திருந்தனர்.திடீரென, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போலீசாரை நோக்கி, கற்களை வீசினர். இதில், பணியில் ஈடுபட்டிருந்த, சுபாஷ் சந்த் தோமர், 47, என்ற போலீஸ்காரரின், தலையில், பலத்த காயம் ஏற்பட்டது.மயங்கி விழுந்த அவரை, சக போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நேற்று காலை, அவர் இறந்தார். உ.பி.,யை சேர்ந்த தோமர், 1987ல், டில்லி போலீஸ், பணியில் சேர்ந்தார்.சம்பவத்தன்று, கர்வால் நகர் போலீஸ் ஸ்டேஷனில், பணியிலிருந்தார். வன்முறை நடப்பதாக, தகவல் கிடைத்ததும், இந்தியா கேட்டுக்கு, அனுப்பப்பட்டார். அங்கு, வன்முறையாளர்களின் கல்வீச்சுக்கு ஆளானார். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே, எட்டு பேரை, டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த எட்டு பேரில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவரும் ஒருவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தோமர் இறந்ததை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தோமரின் இறப்பு, டில்லி போலீசாரிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் ஒரு நாள் சம்பளத்தை, தோமரின் குடும்பத்தினருக்கு, அளிக்கவுள்ளதாக, தெரிவித்தனர்.இதற்கிடையே, போராட்டக்காரர்கள், இந்தியா கேட் பகுதியில் திரளுவதை தடுக்கும் வகையில், நேற்றும், ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.டில்லி ஜந்தர் மந்தரில் கூடிய, ஒரு பிரிவினர், "கற்பழிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்' என, வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். நேற்று கிறிஸ்துமஸ் என்பதால், நேற்று முன் தினத்தை விட, கூட்டம் குறைவாக இருந்தது. அதேநேரத்தில், ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியில், எந்த வித போராட்டமும் நடக்கவில்லை.
தூர்தர்ஷன் ஊழியர்கள், "சஸ்பெண்ட்'
டில்லியில், 23ம் தேதி போராட்டம் நடந்தது. இதையடுத்து, அமைதி காக்கும்படி, "டிவி' மூலமாக, பொதுமக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தினார். பிரதமரின் உரையை படம் பிடிக்க, தூர்தர்ஷன் ஊழியர்கள், சரியான நேரத்துக்கு செல்லவில்லை. பிரதமரின் உரை முடியும்போதே, சென்றனர்.இதன்பின், வேறு ஒரு செய்தி நிறுவனத்திடமிருந்து, பிரதமரின் பேச்சை, வாங்கி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பினர். அப்போது, பிரதமர் உரையை முடிக்கும்போது, "ஆல் ரைட்' என, கூறியதை, எடிட் செய்யாமல், ஒளிபரப்பி விட்டனர்.இதையடுத்து, பிரதமரின் வீட்டுக்கு, குறித்த நேரத்தில் செல்லத் தவறியதற்காக, தூர்தர்ஷன் ஊழியர்கள், ஐந்து பேர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாணவி கவலைக்கிடம்
பாதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பெற்று வரும், சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாணவியின் உடல் நிலை, தொடர்ந்து மோசமாகவே உள்ளது. மாணவியின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது உடலின் சில பாகங்கள், செயல் இழந்துள்ளன.உள் பாகங்களில், சில இடங்களில், ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில் அதிகமாக இருந்த, ரத்தக் கசிவு, தற்போது, குறைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலும் உள்ளது. அவருக்கு, தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை