சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வராக, ஆறாவது முறையாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, வீரபத்திர சிங், 78, நேற்று பதவியேற்றார். அவருடன், ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.நவம்பர் 4ம் தேதி, இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுகள், இம்மாதம், 20ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள, 68 இடங்களில், 36 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், முதல்வர், பிரேம் குமார் துமால் தலைமையிலான பாரதிய ஜனதா அரசை வீழ்த்தி, ஐந்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.கடந்த ஞாயிறு, புதிய முதல்வராக, வீரபத்திர சிங்கை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையிலான அரசுக்கு, சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவரும் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.மாநில தலைநகர், சிம்லாவில் உள்ள, வரலாற்று சிறப்பு மிக்க, ரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்த, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதல்வராக, ஆறாவது முறையாக, வீரபத்திர சிங் பதவியேற்றார்; அவருடன், ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.முதல்வருக்கும், புதிய அமைச்சர்களுக்கும், கவர்னர், ஊர்மிளா சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 50 ஆண்டுகளாக, இமாச்சல பிரதேசம் மற்றும் தேசிய அரசியலில் பங்கேற்று வரும் வீரபத்திர சிங், ஏழு முறை எம்.எம்.ஏ.,வாகவும், ஐந்து முறை எம்.பி.,யாகவும், நான்கு முறை, மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.முதல்வராக இருந்தபோது, மனைவி, பிரதீபாவுடன் சேர்ந்து, தொழிலதிபர்களை மிரட்டி பணம் கறந்தது தொடர்பான, "சிடி' வெளியான விவகாரம், ஸ்டீல் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது போன்ற பிரச்னைகளில் சிக்கியுள்ள வீரபத்திர சிங், காங்கிரஸ் தலைவர், சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.அவர் மீது என்ன புகார் கூறப்பட்டாலும், இமாச்சல பிரதேச முதல்வராகவும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மத்திய அமைச்சராகவும், வீரபத்திர சிங்கை நியமித்து அழகு பார்க்க, காங்கிரஸ் மேலிடம் தயங்குவதே இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.