திருவனந்தபுரம்: கேரளாவில், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரை கொன்று, அவரிடமிருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, ரத்தினங்கள் மற்றும் வைடூரிய கற்களை கொள்ளை அடித்து சென்ற, சென்னையைச் சேர்ந்த மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.கேரளா, ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கராவில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த, பாஸ்கர வர்மாவின் மகன் அரிகர வர்மா, 59. பொறியாளரான இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதேநேரத்தில், இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக, மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.இவர் தன்னிடமிருந்த, ரத்தினங்கள் மற்றும் வைடூரிய கற்களை விற்க முடிவு செய்து, திருவனந்தபுரம் சென்றார். அங்கு, நேற்று முன் தினம் நெட்டயம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தன் நண்பரான வக்கீல் அரிதாஸ் மற்றும் வியாபாரிகள் மூன்று பேருடன், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.அப்போது, வியாபாரிகள் எனக் கூறிக் கொண்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்திய மூன்று பேரும், அரிகர வர்மாவையும், அவரின் நண்பர் அரிதாஸையும், மயக்க மருந்து தடவப்பட்ட துணியை முகத்தில் அழுத்தி, மயக்கமடைய வைத்ததோடு, இருவரையும் கட்டிப் போட்டு, அரிகர வர்மா வசமிருந்த, ரத்தினங்கள், வைடூரிய கற்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த, வக்கீல் அரிதாஸ், ஒரு வழியாக கட்டை அவிழ்த்து வெளியே சென்று, போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த அரிகர வர்மாவை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:அரிகர வர்மாவுக்கு அதிக அளவில் மயக்க மருந்து உள்ளே சென்றதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும், அவர் இறந்திருக்கலாம் என, நம்பப்படுகிறது. அவர் வைத்திருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான ரத்தினங்கள் மற்றும் வைடூரிய கற்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தடயவியல் நிபுணர்களும், சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர்.கொலையாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மூவரில், இருவரின் பெயர், யோகேஷ் மற்றும் பிரேம் ராஜ் என, தெரியவந்துள்ளது. கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.கொலையாளிகள் திருநெல்வேலிக்கு ரயிலில் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுவதால், அங்கு போலீஸ் படை ஒன்று சென்றுள்ளது. அரிகர வர்மாவுடன் இருந்த, அவரின் நண்பர், அரிதாசிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினார்.கொலை செய்யப்பட்ட, அரிகர வர்மாவின் மனைவி விமலா தேவி. அவர், விற்பனை வரித் துறையில் துணை ஆணையராக உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.